Tamil Bayan Points

எதிர்ப்புகளால் வளரும் இஸ்லாம்

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on November 10, 2019 by Trichy Farook

எதிர்ப்புகளால் வளரும் இஸ்லாம் – 

மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக சிரியாவில் பல லட்சம் மக்கள் தங்கள் நாட்டைத் துறந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதில் அதிகமானோர் ஜெர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஜெர்மனி நாடு மனிதாபிமானத்தோடு பல லட்ச மக்களை அரவணைத்தது. ஜெர்மனிக்குள் அகதிகள் அனுமதிக்கப்பட்ட விஷயத்தில் அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. ஏஞ்சலா மெர்கல் மிகப்பெரும் வரலாற்றுப் பிழை புரிந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.

மற்ற நாடுகளின் எதிர்ப்பு ஒர் புறமிருக்க உள்நாட்டிலும் எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. அகதிகளை அனுமதி அளிக்கும் அரசின் கொள்கை முடிவை அல்டெர்னெடிவ் ஃபார் ஜெர்மனி கிAlternative for Germany (AfD) என்ற எதிர்க்கட்சி தீவிரமாக எதிர்த்து வந்தது. இக்கட்சி 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2015 ல் ஜெர்மனியில் ஒரு மில்லியன் அகதிகளுக்கு மேலாக அனுமதிக்க முடிவெடுத்ததைக் கடுமையாக விமர்சித்தது. மேலும் இக்கட்சி இஸ்லாத்திற்கு எதிராகவும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இக்கட்சி 12.6% வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றது.

இக்கட்சியில் பிராண்டன்பேர்க் கிழக்கு மாநில உறுப்பினர் ஆர்துர் வெக்னர், இவர் தேவாலயங்கள் மற்றும் மத விஷயங்களுக்கான துறைக்கான முக்கிய பொறுப்பை வகித்து வந்தார். இஸ்லாத்தையும், முஸ்லிம்கள் ஜெர்மனியில் குடிபெயர்வதையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் திடீரென கடந்த ஜனவரி 11 ஆம் தேதி அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து தனது சொந்த காரணங்களுக்காக விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த முடிவு ஜெர்மன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் ராஜினாமா செய்த காரணத்தை கட்சியும், ஊடகங்களும் அறிய முற்பட்டது. காரணத்தைத் தேடியவர்களுக்கு பெரும் அதிர்ச்சி! ஆம் ஆர்துர் வெக்னர் அல்லாஹ்வின் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார். அல்ஹம்து லில்லாஹ். ஆர்துர் வெக்னர் பற்றி அல்டெர்னெடிவ் ஃபார் ஜெர்மனி (AfD) கட்சியின் தலைவர் ஆண்ட்ரியாஸ் கல்பிட்ஸ் கூறுகையில் ஆர்துர் வெக்னர் தீவிர கிருத்துவ மத நம்பிக்கை கொண்டவர் என்றும், அதே போல் அவர் கட்சியின் கிறிஸ்தவப் பிரிவுகளில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர் எனவும் அவரது இந்த மாற்றம் தனக்கு பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளதாகவும் தாங்கள் அவரை கட்சியிலிருந்து விலகிக் கொள்ள நிர்ப்பந்திக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

எங்கெல்லாம் இஸ்லாம் தீவிரமாக எதிர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் அது மிக வீரியத்துடன் எதிர்ப்புகளைச் சமாளித்து மீண்டு வரும். இது தான் இஸ்லாத்தின் தனித்தன்மை. இஸ்லாம் எதிர்ப்பால் வளர்ந்தது; வாளால் அல்ல என்பதற்கு இதுவும் ஒர் சான்று. அன்று பாபர் மசூதியை இடித்தவர்கள், இன்று அதற்கான பரிகாரம் தேடுகிறார்கள். பாபர் மசூதியின் கூம்பின் மீது நின்று இடித்த பல்பீர்சிங் இன்று முகமது அமீர்! இஸ்லாமிய பிரச்சாரகராக பாழடைந்த மஸ்ஜிதுகளைப் புதுப்பித்து வலம் வருகிறார்.

இஸ்லாத்தையும், முஹம்மத் நபியவர்களையும் தவறாகச் சித்தரித்து படம் எடுத்து உலகத்தையே உலுக்கிய ஆர்நோத் வான் டோர்ன் இன்று இஸ்லாமியனாக வாழ்கிறார். இஸ்லாமைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். இறைவன் நாடினால் இந்தியாவில் இன்று ஆட்டம் போடும் காவிகள் சாரை சாரையாக இஸ்லாத்தை ஏற்பார்கள்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான். (திருக்குர்ஆன் 9:32)

 

பல்பீர்சிங் இன்று முகமது அமீர்!

Source:
https://www.vikatan.com/news/politics/143961-balbir-singh-who-helped-demolish-babri-masjid-is-now-a-muslim

https://www.dailythanthi.com/News/India/2019/11/09180413/Balbir-Singh-who-demolished-the-Babri-Masjid.vpf