Tamil Bayan Points

நிறவெறியின் உச்சம்:

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on April 18, 2019 by

நிறவெறியின் உச்சம்: கறுப்பின மக்களை இழிவுபடுத்திய டிரம்ப்

ஆப்ரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘சிட்ஹோல் நாடுகளில் இருந்து வருபவர்களை அமெரிக்கா ஏன் அனுமதிக்க வேண்டும்? என்று எதிர்க் கேள்வி எழுப்பினார். சிட்ஹோல் என்றால் அழுக்கு படிந்தவர்கள் என்பது பொருள். இது இழிவுபடுத்தும் வார்த்தையாகும். ஆப்ரிக்க கறுப்பின மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய டிரம்ப், இதற்காக ஆப்ரிக்க மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆப்ரிக்க நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.வுக்கான ஆப்ரிக்க பிரதிநிதிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எபா கலோண்டா ‘டிரம்பின் பேச்சு, ஆப்பிரிக்கர்கள் மீது நிகழ்த்தப்பட்ட நிறவெறித் தாக்குதலாகும். அமெரிக்காவில் எத்தனை ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக வாழ்ந்தனர் என்ற வரலாற்று உண்மையைக் காட்டிலும் டிரம்பின் வார்த்தைகள் அதிக காயத்தை ஏற்படுத்தியுள்ளன’ என்றார். ஒருவர் வெள்ளையாக இருப்பதோ, கறுப்பாக இருப்பதோ, அல்லது இந்த இரண்டு நிறத்துக்கும் இடையில் புது நிறமாக இருப்பதோ அவர் தேர்ந்தெடுத்தது கிடையாது.

அது இறைவனின் படைப்பு. இதில் மனிதனுக்கு எந்தப் பங்கும் இல்லை. இப்படி மனிதன் தேர்ந்தெடுக்காத நிறத்திற்காக பெருமை கொள்வதோ, சிறுமைப் படுத்துவதோ நியாயமற்ற செயலாகும். டிரம்ப் வெள்ளையர் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார். இதற்கு முன்பு அமெரிக்க அதிபராக இருந்த பாரக் ஒபாமாவை விட இவர் அழகாக இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? சில வெள்ளை நிறத்தவர் அழகாக இருப்பார்கள். அந்த அழகு டிரம்பிடம் கிடையாது. இது தெரியாமல் அவர் தம்பட்டம் அடித்து வருகிறார்.

வெள்ளையர் கறுப்பர்களை இழிவாக நடத்துவது இன்று நேற்று நடப்பதல்ல. நீண்ட காலமாகவே இது தொடருகிறது. இதற்கு ஒரே தீர்வு இஸ்லாத்தில் தான் இருக்கிறது.

‘நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் சூட்டுவது கெட்டது. திருத்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்களாவர். (திருக்குர்ஆன் 49:11)

திருக்குர்ஆனின் இந்தக் கொள்கை டிரம்ப் போன்ற நிறவெறியர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் நேர்மையான வெள்ளையர்களுக்கு இது பிடிக்கும். அதை விட கறுப்பர்களுக்கு இது ரொம்ப ரொம்ப பிடிக்கும். இஸ்லாத்தின் இந்தக் கொள்கையை முஸ்லிம்கள் உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லி இந்த உலகுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் தான் என்பதை உரத்து முழங்க வேண்டும். நிறவெறிக் கொள்கை அமெரிக்காவில் மட்டும் இருக்கவில்லை. இந்தியாவில் இது ஆழமாக ஊன்றிப் போயுள்ளது. இந்தியாவின் பூர்வ குடிகளான தலித்களை ஆரியர்கள் இந்த நிறவெறியின் மூலம் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

தீண்டாமையின் கோர வடிவம் இந்தியாவில் இருப்பது போன்று வேறு எந்த நாட்டிலும் இல்லை. ஆரியர்களின் நிறவெறிக் கொள்கைக்கு முஸ்லிம்கள் எதிரானவர்கள் என்பதால் முஸ்லிம்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்ற அளவுக்கு அவர்கள் பேசி வருகிறார்கள். இதை முஸ்லிம்கள் உணர்ந்து, நிறவெறி மற்றும் தீண்டாமைக்கு எதிராகப் போராடி தலித் மக்களை மீட்கும் பணியில் முனைப்பாக ஈடுபட வேண்டும். நிறவெறிக் கொள்கை இறைக் கொள்கைக்கு எதிரானது. எனவே இதை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி சாய்க்காத வரை முஸ்லிம்கள் ஓயக் கூடாது.