Tamil Bayan Points

பீரோவுக்குள் குட்டிச் சாத்தான்: அதிர வைத்த மோசடி!

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on April 3, 2019 by

பீரோவுக்குள் குட்டிச் சாத்தான்: அதிர வைத்த மோசடி!

நாடு முன்னேற முன்னேற விஞ்ஞாமும் வளர்ச்சியடைந்து வருகின்றது. அதற்கு சரிசம விகிதத்தில் மோசடிகளும் புதிது புதிதாய் தோன்றி அதில் மக்கள் ஏமாந்து வருகின்றார்கள். மக்கள் எத்தனையோ மோசடிகளில் ஏமாந்து போயிருந்தாலும் அவ்வப்போது புதியது புதியதாக மோசடிகள் நடக்கும் போதும் அதையும் உண்மை என நம்பி மக்கள் குப்புற விழுந்து ஏமாந்து போகும் காட்சிகள் பல புறங்களிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த வாரம் மதுரை வட்டாரத்தை கலக்கிய பீரோவுக்குள் குட்டிச்சாத்தான் மோசடி விவகாரம் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு நவீனமான காலத்தில் இன்னமும் மக்கள் மந்திரவாதிகளிடம் ஏமாந்து தங்களின் பணத்தையும் பொருளாதாரத்தையும் பறி கொடுக்கும் அவலம் நிகழ்ந்தே வருகின்றது. மதுரை மந்திக்குளம் பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்ரமணியன். இவர் குறி சொல்லும் ஜோதிடராக இருந்து வருகின்றார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் நெருக்கமாகவே இவர் மந்திக்குளம் பகுதிக்கு குடிவந்ததாகத் தெரிகின்றது. ஆனாலும் அந்தப் பகுதி மக்களிடம் மிகவும் நெருக்கத்துடன் பழகி தன்னை நல்லவராக நிலை நிறுத்திக் கொண்டார் பாலசுப்ரமணியன். அவரைத் தேடி ஜோதிடம் கேட்டு வரும் பக்தர்களிடமும் நல்ல முறையில் பழக ஆரம்பித்துள்ளார். ஜோதிடம் பார்ப்பதற்கு வருபவர்களிடம் கரார் செய்யாமல் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை வாங்கிக் கொண்டு ஜோதிடம் பார்க்க ஆரம்பித்தார் பால சுப்ரமணியம்.

தன்னிடம் குறிகேட்க வரும் மக்களிடம் சாமியாடி, உனக்கு என்ன வேணும் கேள் என்று கூறி இந்தா உனக்கு பணம் என்று அந்தரத்தில் வரவழைத்து அதை மக்களிடம் கொடுக்க ஆரம்பித்துள்ளார் பாலசுப்ரமணியன். அந்தரத்தில் வரவழைப்பது என்பது ஏற்கனவே செட்டிங் செய்து ஒழித்து வைத்த பணம் என்பதையும் அதை முதலீடாக வைத்துத்தான் பின்னால் ஒரு பெரிய காரியத்தை சாதிக்கப் போகின்றார் என்பதையும் அந்த மக்கள் அறியவில்லை. மக்களிடம் அன்பாக பழகியதும் ஆதரவாக வார்த்தைகள் சொன்னதும் அத்துனையும் நாடகம் என இப்போது தான் அவரது பக்தர்களும் அந்தப் பகுதி மக்களும் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். நதி மூலம், ரிஷி மூலம் பார்க்காதே என்று ஒரு பழமொழி உண்டு.

அதாவது நதி புறப்படும் இடத்தையும் சாமியார் புறப்பட்ட இடத்தையும் ஆராயக் கூடாது.என்று யாரோ அனுபவித்து பழமொழி கூறியுள்ளார்கள். ஒருவேளை இந்தப் பழமொழியைக் கூறியதே போலிச் சாமியாராக இருக்க வாய்ப்புகள் உண்டு. இந்தப் பழமொழிகளின் படி பாலசுப்ரமணியத்தின் முந்தைய வாழ்க்கை முறையை எந்த மக்களும் ஆய்வு செய்யவில்லை. சாமியாரை மக்கள் கண்மூடித்தனமாக நம்ப ஆரம்பித்தார்கள். மக்களின் அறியாமையை அந்தச் சாமியார் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் . தான் என்ன சொன்னாலும் தலையை ஆட்டுவதற்கு ஒரு கூட்டத்தை உண்டாக்கி வைத்து விட்டார். மக்கள் தன் கருத்துக்கு ஆட்டுமந்தைகளாய் தலையாட்டுவதை உணர்ந்த அந்தச் சாமியார் அதை வைத்து பணம் பார்க்க முடிவு செய்தார். அவரது அந்தத் திட்டத்தில் உதயமானதுதான் குட்டிச்சாத்தான் பீரோ. தன்னிடம் சில பீரோக்கள் இருப்பதாகவும் அதை வாங்கி வீட்டில் வைத்து (48 )நாட்கள் பூட்டி வைத்து பூசை செய்து வந்தால் (49)ஆம் நாள் குட்டிச்சாத்தான் மகிமையில் பீரோ முழுவதும் பணம் நிரம்பியிருக்கும் என்றும் அந்த மக்களுக்கு ஆசை காட்டினார் பாலசுப்ரமணியன்.

போலிச்சாமியாரின் பசப்பு வார்த்தைகளை உண்மை என்று நம்பிய அப்பகுதி மக்கள் கந்து வட்டிக்கு கடன் வாங்கி ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரைக்கும் பாலசுப்ரமணியத்திடம் கொடுத்து குட்டிச்சாத்தான் குடியிருக்கும் அதிர்ஷ்ட பீரோவை வாங்கி வீட்டில் வைத்து பூசை செய்யத் துவங்கினார்கள். நாட்கள் செல்லச் செல்ல பணத்தாசை அதிகமாக மக்கள் குட்டிச்சாத்தான் பீரோவுக்கு சிறப்பு பூசைகள் செய்துள்ளார்கள். சாமியார் சொன்னபடி அந்த( 49 ) வது நாளும் வந்தது. நாளை காலையில் பீரோவைத் திறந்தால் அதற்குள் நிரம்ப நிரம்ப பணம் இருக்கும் என்பதை நம்பி மறுநாள் காலை குளித்து முடித்து பவ்யத்துடன் பக்தியுடன் பீரோவைத் திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. உள்ளுக்குள் எதுவுமே இல்லாமல் பீரோ காலியாக இருந்துள்ளது. இதனால் உறைந்து போன மக்கள் இதுகுறித்துக் கேட்பதற்கு போலிச்சாமியார் பாலசுப்ரமணியனைத் தேடி வந்துள்ளனர்.

ஆனால் அதற்கு முந்தைய நாள் இரவோடு இரவாக வீட்டை காலி செய்து விட்டு கம்பி நீட்டி விட்டார் போலிச்சாமியார் பாலசுப்ரமணியம். வெறும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பீரோவை ரூ. 5 லட்சம் வரைக்கும் கொடுத்து வாங்கி ஏமாந்த மக்கள் ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டனர். நீ எவ்வளவு கொடுத்தாய் நீ எவ்வளவு கொடுத்தாய்? என கணக்கிட ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தைச் சுருட்டிக் கொண்டு போலிச்சாமியார் பாலசுப்ரமணியன் எஸ்கேப் ஆகிவிட்ட சங்கதி தெரியவந்தது. குட்டிச்சாத்தான் நமக்கு பணத்தை அள்ளி அள்ளித் தரும் என்ற பேராசையில் தங்களிடம் இருந்த பணத்தை இழந்து விட்டு நிற்கின்றார்கள் மக்கள். கைக்காசும் போய் வட்டிக்கும் கடன் வாங்கி குட்டிச்சாத்தான் பீரோ வாங்கி வைத்தால்., நம் அத்தனை பேர் காசையும் லம்பா சுருட்டிக்கிட்டு எஸ்கேப் ஆயிட்டானே பாலசுப்ரமணியன் என்ற ஆதங்கத்தோடு போலிச்சாமியார் மீது புகார் கொடுத்துள்ளார்கள் அந்த மக்கள்.

பட்டும் திருந்தாத மக்கள்

எத்தனையோ மோசடிகள் நடந்து அது செய்தியாக வந்தாலும் அதைப் பார்த்தும் திருந்தாத மக்கள் இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம் ஆகும். உங்களுக்கு பணம் வருகின்றது என்றால் அது எப்படி வரும்.? எங்கிருந்து வரும்.? என்றெல்லாம் சிந்திக்காமல் போலி மந்திரவாதி சொன்ன பொய்யை நம்பி தொடர்ந்து ஏமாறும் மக்களை என்னவென்று சொல்வது?

பல வருடங்களுக்கு முன்பு கலைமகள் சபா என்ற பெயரில் ஒரு குழுமம் துவக்கப்பட்டது. அந்தக் குழுமத்தில் மாதா மாதம் முதலீடு செய்தால் சில வருடங்கள் கழித்து அதுபோல மூன்று மடங்கு பணத்தை திருப்பித் தருவோம் என வாக்களித்தார்கள். கலைமகள் சபாவைத் தொடர்ந்து அனுபவ் குரூப்ஸ் என்ற நிறுவனமும் உண்டானது. இதில் மக்களிடம் முதலீட்டைத் திரட்டி உங்களுக்கு பல மடங்கு வட்டி தருவோம், கடைசியில் உங்கள் அசலைத் தந்து விடுவோம் அத்தோடு உங்கள் அனைவருக்கும் தேக்கு மரம் வைத்த வீட்டு மனை இலவசமாகத் தருவோம் என விளம்பரம் செய்தார்கள். மக்களிடம் அதிகமான அளவில் நிதியைத் திரட்டிய இந்த நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் மக்களின் பணத்தை அப்படியே மோசடி செய்தார்கள். அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

அந்த நேரத்தில் இத்தனை மோசடிகள் நடந்தும் கூட மக்கள் அதன்பிறகு இன்னும் பல தனியார் நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்தார்கள். இவ்வளவு தெளிவாக ஏமாந்தும் கூட வட்டி கூடுதலாகத் தருகின்றார்கள் என்ற காரணத்திற்காக பணத்தாசையில் கண்மூடித் தனமாக வீழ்ந்து மீண்டும் தங்களின் முதலீட்டை இழந்தார்கள். இந்த மோசடி கடைசியில் ஈமு கோழிப்பண்ணை வரைக்கும் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்தான் இந்த போலிச்சாமியார் பாலகிருஷ்ணனும் மக்களின் ஆசையைத் தூண்டி விட்டு அதை முதலீடாக்கி பல லட்சம் ரூபாய்களை அடித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டான். ஏமாறும் மக்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுப் பேர்வழிகள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

ஆய்வு செய்யச் சொல்லும் இஸ்லாம்

மனிதகுல வழிகாட்டியாக இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டுள்ள வேதமான திருக்குர்ஆன். மக்களை அழைக்கும் போது தன்னை கண்மூடித்தனமாக பின்பற்றுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக ஆய்வு செய்யுங்கள் சிந்தியுங்கள் என்றே அறைகூவல் விடுகின்றது. இறைவேதம் என்று சொல்லக்கூடிய திருக்குர்ஆனையே சிந்தித்து நம்பச் சொல்கின்றது இஸ்லாம். ஆனால் ஒரு சாதாரண மனிதன் தந்த பீரோவில் குட்டிச்சாத்தான் இருக்கின்றது அது உங்களுக்கு பணத்தை அள்ளித் தரும் என்று அவன் சொன்னால் அதை ஆய்வு செய்யாமல் அப்படியே நம்பும் மனிதர்களை என்னவென்று சொல்வது.?

குட்டிச்சாத்தான் என்று ஒன்று இருந்தால் அதை நேரில் காட்டு, அப்போதும் அதை ஆய்வு செய்துதான் நம்புவோம்.என்று அந்த மக்கள் சொல்லியிருந்தால் அவர்களின் பல லட்சம் ரூபாய்களை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். பல லட்சம் ரூபாய் பணத்தை அள்ளித் தரும் பீரோவை வைத்து நீயே பணத்தை எடுத்துக் கொள்ளலாமே! அதை ஏன் எங்களுக்கு சொற்ப விலைக்குத் தருகின்றாய் என்று போலிச்சாமியாரிடம் கேள்வி கேட்டு அவரது நடத்தையை ஆய்வு செய்திருந்தால் மக்களின் சேமிப்புகள் வீணாகியிருக்காது. இந்த சம்பவத்தை அனைத்து மக்களும் தங்களுக்கு ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.