Tamil Bayan Points

வெளிநாட்டு வேலை வேதனையா? விடியலா?

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on April 4, 2019 by

வெளிநாட்டு வேலை வேதனையா? விடியலா?

இரவு குளிரில் நடுங்கும் நாய் நினைக்குமாம் கண்டிப்பாக விடிந்தவுடன் ஒரு போர்வை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று, மறுநாள் காலையில் வெயிலை பார்த்ததும் போர்வை வாங்க வேண்டும் என்பதையே மறந்துவிடுமாம் அன்று இரவு மீண்டும் நினைக்குமாம் நாளைக்கு கண்டிப்பாக போர்வை வாங்க வேண்டும் என்று இப்படியே ஒவ்வொரு இரவும் நினைக்குமாம் அந்த நாய், கிராமங்களில் இப்படியரு கதை சொல்வார்கள் அது போன்றது தான் வெளிநாட்டு வாசிகளின் வாழ்க்கை! குடும்பத்தை, குழந்தைகளை விட்டு கண்ணீருடன் விமானம் ஏறுபவர்கள் இதுதான் என்னுடைய இறுதி பயணம் அடுத்த முயற்சி ஊரிலே செட்டில் ஆவதுதான் என்று நினைப்பவர்கள்

வெளிநாடு வந்ததும் அதற்கான முயற்சியை எடுக்காமல் வேறு பல காரியங்களில் பணத்தை செலவாக்கி விட்டு காலத்தை ஓட்டிவிட்டு அடுத்த விடுப்பில் ஊருக்கு செல்வார்கள் மீண்டும் மேலே குறிப்பிட்டதைப் போல் நினைத்துக் கொண்டு மீண்டும் திரும்புவார்கள்.இப்படியே 15 முதல் 25 ஆண்டுகள் வெளிநாட்டிலேயே இளமையை தொலைத்துவிட்டு போனஸாக சுகர், பிரஷர், சொட்டை தலை, உடல் பருமன் இன்னும் ஏராளமான நோய்களை பெற்றுக்கொண்டு 45க்கு மேல் சிலர் 50 க்கு மேல் ஊருக்கு திரும்புவார்கள்,அப்படி ஊருக்கு திரும்பாமல் விபத்து மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற காரணங்களால் வெளிநாட்டிலேயே மரணிப்பவர்களும் உண்டு,

திருமணம் முடிந்து 30 ஆண்டுகள் ஆகியிருக்கும் அதில் குடும்பத்துடன் இருந்த நாட்கள் 3 முதல் 4 வருடங்கள், ஆக சராசரியாக 60 வயதுக்குப் பிறகு மரணிக்கப் போகும் மனிதர்கள் சந்தோஷமாக குடும்பத்துடன் வாழ்வது சொற்பத்திலும் சொற்பம்! இதில் வெளிநாட்டிற்கு குடும்பத்தை அழைத்து வந்து வைத்துக்கொண்டு 4 சுவர்களுக்குள்ளே வார நாட்களையும் வார விடுமுறையில் ஷாப்பிங் மால்களில் சுற்றிவிட்டு கலர்கலராக கிரெடிட் கார்டுகளை கையில் வைத்துக்கொண்டு கடன் வாங்கி அதை அடைக்க இன்னொரு கடன் என்று ஆடம்பரமாக வாழ்ந்துவிட்டு இங்கே எதற்காக வந்தோம் என்பதை மறந்து பல வருடத்தை கழித்துவிட்டு ஊருக்கு செல்கையில் வெறுங்கையுடன் செல்பவர்களும் உண்டு! (மேலே சொன்னதில் மிகச்சிலவர் விதிவிலக்காக இருக்கலாம் )

இதற்கெல்லாம் காரணம் வாழ்வதென்றால் பணம் சம்பாதிப்பது தான் என்ற நினைப்பதுதான் அதிலும் அதை வெளிநாட்டில் தான் சம்பாதிக்க முடியும் என்று நினைப்பதும், ஒரு மனிதனுக்கு சந்தோஷம் என்பது எது என்பதை பற்றிய தவறான புரிதல், 50 வயதாகியும் பணவெறி பிடித்து நரைத்த தலைக்கு டை அடித்துக் கொண்டு,சொட்டை தலையை தொப்பி அணிந்து மறைத்துக் கொண்டு வெளிநாட்டில் கிடக்கும் நிலைக்கு பலரை தள்ளிவிடுகிறது! எல்லாம் சரி! ஊரிலே இருந்தால் சொத்துகள் வாங்கி செட்டில் ஆகமுடியுமா வசதியாக வாழ முடியுமா? ஒருநாளுக்கு என்ன செலவாகிறது தெரியுமா? ஊரிலே இருந்தால் இதையெல்லாம் சமாளிக்க முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம்! அப்படியானால் ஊரிலே தொழில் செய்பவர்கள் சொத்தெல்லாம் வாங்கி வசதியாக வாழ்கிறார்களே எப்படி? சரி வெளிநாட்டிற்கு சென்றவர்கள் எல்லாரும் சொத்து பத்துகள் வாங்கி வசதியாக வாழ்கிறார்களா?

பல வருடத்தை வெளிநாட்டில் கழித்தவர்கள் இன்னும் அதே நிலையில் இருப்பது ஏன்? இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பிழைக்கிறார்கள் இதில் வெளிநாட்டு சம்பளத்தை இன்னும் அதைவிட அதிகமாய் சொந்த நாட்டிலேயே சம்பாதிக்கிறார்கள், வசதியாக வாழ்கிறார்கள், அதெப்படி? இதற்கெல்லாம் காரணம் நாம் எடுக்கும் முயற்சியும் நாம் பயணிக்கும் பாதையுமே ! படித்தவர்கள், படிக்காதவர்கள், பணமிருப்பவர்கள், பணமில்லாதவர்களென்று பணம் சம்பாதிக்க வெளிநாட்டை நோக்கி பயணிக்கும் நோய் அனைவரையும் தொற்றியுள்ளது, சிலர் இந்தியாவில் தொழில் தொடங்கி வறுமையையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் ஒழித்து ஊரார் வீட்டில் அடுப்பு எரிய காரணமாய் இருப்பதை விட்டுவிட்டு அயல்நாடுகளில் முதலீடு செய்கின்றனர், தொழில் செய்கின்றனர் இது கவலைக்குரியது! யார் எதை முயற்சிக்கிறார்களோ அதில்தான் வெற்றியையும் தோல்வியையும் காண்கிறார்கள்.!

வெளிநாட்டில் சம்பாதித்த வசதியானவர்களை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு அயல்நாட்டை நோக்கி ஓடுபவர்கள் இந்தியாவிலேயே தொழில் செய்து முன்னேறியவர்களை ஓர் உதாரணமாக எடுப்பதில்லை என்பதே இதற்கு காரணம்! சில ஆயிரங்களை வைத்துக்கொண்டு சிறியதாய் தொடங்கிய தொழில்கள் பல்லாயிரக்கணக்கான மக்களின் வீட்டில் அடுப்பு எரிய காரணமாகி பெரும் தொழிலாக வளர்ந்து இலட்சங்களில், கோடிகளில் வருமானம் ஈட்டுகிறது, உதாரணம் : ராம்ராஜ் காட்டன், சக்திமசாலா, சென்னை சில்க்ஸ், பூர்விகா மொபைல்ஸ், ஆரோக்யா பால், இன்னும் பல… இந்நிறுவனங்கள் சுயதொழிலாக தொடங்கியவர்கள் பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு கிளம்பியிருந்தால் பல வருடம் சம்பாதித்ததில் அதிகபட்சமாக ஒரு வீடு சிறிதளவு சொத்துகள் என்று சின்னதாய் சுருங்கியிருக்கும் இவர்களுடைய பொருளாதாரம் ஆனால் சுயதொழில் என்ற அற்புதமான முயற்சியால் இன்று இவர்களை பலருக்கு ஊதியம் வழங்கும் இடத்திற்கு இறைவன் உயர்த்தியிருக்கிறான்.

வெளிநாட்டில் ஈசியா சம்பாதிக்கலாம் ஆனால் தொழிலெல்லாம் செட் ஆகாது அப்படியா? வெளிநாட்டில் சம்பாதிப்பது அத்தனை எளிதல்ல! இதில் பெற்றதை விட இழந்தது ஏராளம்! 30 நாள் விடுப்பில் வந்து திருமணம் செய்து விட்டு பயணம்! தனக்கு பிறந்த குழந்தையை காண இயலாத அவலம்! இறக்கும் தறுவாயில் இருக்கும் பெற்றோர்களின் பக்கத்தில் இருக்க இயலாத கொடுமை! கணவன் அருகில் இல்லாததால் தவறான தொடர்பில் விழுந்த மனைவி! கண்டிக்க தகப்பன் இல்லாததால் கெட்ட பழக்கத்தில் விழுந்து தறுதலையாய் போகும் மகன் ! சொந்த பிள்ளைகளின் திருமணத்தை வெளிநாட்டிலிருந்து வீடியோகாலில் பார்த்து ஏங்கும் தந்தை! விமான நிலையத்தில் கண்ணீரை விட்டு கதறும், மனைவி,குழந்தைகள் வெளிநாட்டு வேலை வேதனையா? விடியலா?

அதை தாங்க முடியாமல் கண்களை துடைத்துக் கொண்டு நடைப்பிணமாய் விமான நிலையத்துக்குள் கடந்து செல்லும் தகப்பன். இதுபோன்று கொடுமைகள் ஏராளம்… இந்தியாவை விட மக்கள் தொகையை அதிகம் வைத்திருக்கும் சீனர்களை வெளிநாடுகளில் எங்கேயாவது வீட்டு டிரைவர் வேலையிலோ அல்லது ஆடு,மாடு மேய்க்கும் வேலையோ, அல்லது குறைந்த சம்பளத்தில் கடினமான, கட்டுமான வேலை செய்யும் வேலையிலோ அல்லது அடிமாட்டு சம்பளத்தில் எஞ்சினியராக பார்த்து இருக்குறீர்களா? இல்லையே ஏன்? ஏனென்றால் அவர்கள் பல பொருட்களை தயாரிப்பதிலும் வியாபாரம் செய்வதிலும் ஓர் உயரத்தை அடைந்து அதில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள், அவ்வளவு ஏன்?

இந்தியாவில் சில சமுதாயத்தை சார்ந்தவர்கள் குண்டூசி முதல் வைரம் வரை அனைத்து வித வியாபாரம் செய்கிறார்கள் இளம் வயதிலேயே பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு செல்ல டிராவல் ஏஜெண்டுகளை தேடி அலைவதில்லை, பல தொழில்களிலும் கொடிகட்டி பறக்கிறார்கள்! இந்தியாவில் வேலையில்லை, சம்பளமில்லை, வாய்ப்பில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கவில்லை தனக்கான வாய்ப்பை தானே தேடி உருவாக்குகிறார்கள்! எதையாவது சொல்லிக்கொண்டு வெளிநாடே கதி என்று இருக்கவில்லை! மறுபுறம் MBA படித்தவர்கள் ஹோட்டல் சப்ளையராகவும், என்ஜியனரிங் படித்தவர் ஆபிஸ் பாயாகவும், படிப்பிற்கு சம்மந்தமில்லாத வேலையை இந்தியாவிலும் இன்னும் வெளிநாடுகளிலும் செய்கின்றனர் ஏன் தெரியுமா?

நல்ல சம்பளத்தில் ஒரு வேலை, வேலை, வேலை அதில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும். இதற்குத்தான் பல இலட்சக்கணக்கான பட்டதாரிகள் பல ஆண்டுகள் நமது கல்விமுறையில் தயார் செய்யப்படுகிறார்கள் சுயமாக தொழிலையோ, உற்பத்தியையோ, வியாபாரத்தையோ செய்வதற்கு படித்த இளைஞர்களே முன்வருவதில்லை பிறகு யார் செய்வார்கள்? அனைவரும் வேலை தேடியே அலைந்தால் யார்தான் அனைவருக்குமான வேலையை உருவாக்குவது? ஒரு நல்ல சம்பளத்தில் வேலை! அதை தேடி பேயாய் அலைகின்றனர் அதனால் வேலையில்லாத் திண்டாட்டம்,          வெளிநாட்டில் ஆவது வேலை கிடைக்குமா என்று பயணம் அங்கு அடிமாட்டு சம்பளத்தில் வேலை அதுவும் கிடைக்காதவர்கள் எதாவது ஒரு வேலையில் சேர்கின்றனர்.

அதற்கு ஏன் பட்டப்படிப்பு வரை படிக்க வேண்டும்? யார்தான் தொழிலை தொடங்குவது? அதற்கு வெளிநாட்டு நிறுவனம் தான் இந்தியாவிற்கு வரவேண்டும் அவர்கள் முதலாளியாக இருப்பார்கள் நாம் அங்கே தொழிலாளியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.அதுதான் பாதுகாப்பு அப்படித்தான் பெரும்பாலும் நினைக்கிறோம்! இதற்குத்தான் இத்தனை ஆண்டுகள் விழுந்து விழுந்து படித்தோமா? ஒருநாள் அவன் தன் நிறுவனத்தை வேறு நாட்டிற்கு மாற்ற முடிவு செய்து விட்டால் என்ன செய்ய? அந்த நாட்டை நோக்கி ஓட வேண்டுமா? என்னதான் முடிவு? அதனால்…

வேலை தேடும் 100 நபர்களில் ஒருவராய் இல்லாமல் அந்த 100 நபருக்கு வேலையை கொடுக்கும் இடத்திற்கு இளைஞர்கள் நகரவேண்டும்!! அதற்கு தான் கற்ற கல்வியை ஆயுதமாக்க வேண்டும்! சுயதொழில் முனையவேண்டும், அற்ப சம்பளத்திற்கு வெளி நாடுகளுக்கு பயணிப்பது நிறுத்தப்பட வேண்டும்! தொழில் முனைவோம்! முதலாளிகளாக முயற்சிப்போம்,