Tamil Bayan Points

123. 10ம் நாள் அஸருக்குள் தாவாஃபுல் இஃபாளா செய்யத் தவறியவர்கள் இரவில் செய்யலாமா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

தவாஃபுல் இஃபாளாவை 10வது நாளின் அஸர் நேரம் முடிவதற்குள் செய்யத் தவறியவர்கள் இரவில் செய்யலாமா? அப்படி அஸர் முடிய முன் ‘தவாஃபுல் இஃபாளா’வை தவறவிட்டவர்கள், அதற்கு முன்பே இஹ்ராம் ஆடையைக் களைந்திருப் பார்களேயானால், மீண்டும் இஹ்ராம் ஆடை அணிந்து, நிய்யத் செய்து, மறுநாள் வந்துதான் தவாஃபுல் இஃபாளா செய்ய வேண்டுமா?

பதில்

பத்தாம் நாள் சூரியன் மறைவதற்கு முன்னால் தவாப் செய்து விட்டால் சட்டை பேண்ட் போன்ற தையல் ஆடை அணிந்து தவாப் செய்யும் சலுகை கிடைக்கும். நறுமணமும் பூசிக் கொள்ளலாம். தவாபுக்கு முன் சூரியன் மறைந்து விட்டால் அந்தச் சலுகை போய் விடும்.

“நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

(நூல்: அபூதாவூத் 1708)

பத்தாம் நாளன்று கல்லெறிதல், குர்பானி கொடுத்தல் ஆகிய வணக்கங்களைச் செய்யும் போதே அன்றைய தினம் சூரியன் மறைவதற்குள் தவாஃப் செய்ய முடியுமா? முடியாதா? என்ற முடிவுக்கு வந்து விடலாம்.

10ஆம் நாள் சூரியன் மறைவதற்குள் தவாஃபுல் இஃபாளா செய்ய முடியும் என்றால் நறுமணம் பூசுதல், தையல் ஆடை அணிதல் போன்ற சலுகைகளுடன் தவாஃபை முடித்து மொத்தமாக இஹ்ராமுடைய கட்டுப்பாடுகளை விட்டு விடுதலையாகிவிடலாம்.

சூரியன் மறைவதற்குள் தவாஃப் செய்ய முடியாதென்றால் இஹ்ராம் உடையைக் களையாமல் அப்படியே இருந்து, சூரியன் மறைந்த பிறகு தவாஃப் செய்து விட்டு, ஒரேயடியாக எல்லா கட்டுப்பாடுகளை விட்டும் விடுதலையாகி விடலாம்.

இதுபோன்ற சூழலில் முதல் விடுதலையின் பயனை இழக்க நேரிடும். அதாவது உடலுறவைத் தவிர உள்ள நறுமணம் பூசுதல், தையல் ஆடை அணிதல் போன்ற சலுகைகளை இழக்க நேரிடும். தவாஃபுல் இஃபாளாவை முடித்து விட்டால் முழு விடுதலையை அனுபவித்துக் கொள்ளலாம்.

பத்தாம் நாள் சூரியன் மறைவதற்குள் தவாஃபுல் இஃபாளாவை செய்யத் தவறியவர்கள் மீண்டும் இஹ்ராம் ஆடை அணிந்து கொள்ள வேண்டும். அன்றைய இரவு அல்லது மறுநாள் வரை தவாஃபுல் இஃபாளா செய்யலாம். ஆனால் தவாஃபுல் இஃபாளாவை முடிக்கின்ற வரை இஹ்ராமின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையாக முடியாது.