Tamil Bayan Points

தூய்மையின் பிறப்பிடம் இஸ்லாம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

Last Updated on September 10, 2023 by Trichy Farook

முன்னுரை

இஸ்லாம் மார்க்கம் இறைவனுக்குச் செய்யும் சட்டங்களை மட்டும் சொல்லிக்கொண்டிராமல் மனிதனின் இவ்வுலுக வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்களையும் தெளிவாக கூறியுள்ளது. மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான தூய்மையைப் பற்றி பல இடங்களில் வலியுறுத்தியுள்ளது.

ஈமானின் பாதி தூய்மை

இஸ்லாத்தை ஏற்றவரிடம் இருக்க வேண்டிய இறைநம்பிக்கையின் ஒரு அம்சமாக தூய்மையை இஸ்லாம் சொல்லியிருப்பது இஸ்லாம் தூய்மைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளது என்பதற்கு சான்றாகும். ஈமானின் பாதி, தூய்மை என்று நபிகளார் கூறியுள்ளது முஸ்லிம்களை தூய்மையின் பிறப்பிடமாக வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளது.

الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، …

“தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்…”

நூல்: முஸ்லிம்-381

வணக்க வழிபாடுகளுக்கும் தூய்மை

இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் போதும் இந்த தூய்மை கண்டிப்பாக கடைபிடிக்கப்படுகிறது. ஒருவர் ஐவேளைத் தொழும் போது முகம், கை, கால், தலை மற்றும் வாய், மூக்கு ஆகியவற்றை தூய்மை செய்கிறார். இவ்வாறு செய்த பின்னரே தொழ வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ

“அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மமும் ஏற்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

நூல் : முஸ்லிம்-382  

இஸ்லாத்தின் ஒழுங்குகளை கடைபிடிக்கும் ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஐந்து தடவை தன் உடலின் முக்கிய பகுதிகளை தூய்மை செய்துவிடுகின்றான். இதைப் போன்று, சிறுநீர் கழித்தாலோ, மலம் கழித்தாலோ அவன் தண்ணீரால் தூய்மை செய்யவும் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. சிறுநீர் மூலம் ஏராளமான நோய்கள் தொற்றுகின்றன. எனவே சிறுநீர் கழிப்பதில் ஒருவர் தூய்மையை கடைபிடித்தால் அவர்பெரும்பாலான நோய்களிலிருந்து விடுதலை பெற்றுவிடலாம்.

தூய்மையின் பிரதிபலன் மறுமையிலும் தெரியும்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக் குச் சென்று “அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்’ (அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறி விட்டு, “நம் சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள்” என்று கூறினார்கள். மக்கள், “உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்து கொள்ள மாட்டாரா, கூறுங்கள்” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர். “(அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் (பிரதான) உறுப்புகள் பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன்.

அறிந்து கொள்ளுங்கள்! வழி தவறி(விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து)விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் “வாருங்கள்’ என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, “இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றிவிட்டார்கள்” என்று சொல்லப்படும். அப்போது நான் “(இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக; அப்புறப்படுத்துவானாக!” என்று கூறுவேன்.

நூல் : முஸ்லிம்-419  

உடலுறவு கொண்ட பின்னரும்

உடலுறவு கொண்ட பின்னரும் அவர்கள் தம் மர்ம உறுப்புகளை தூய்மை செய்ய வேண்டும் என்றும் பின்னர் குளித்து தூய்மையாகிக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. இந்த தூய்மையின் மூலமாக அந்தரங்க உறுப்புகள் பல நோய்களிலிருந்து விடுதலை பெற முடியும்.

கொடிய நோய்கள் ஏற்பட்டால்

தற்போது உலகத்தை பயமுறுத்திக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலின் ஹெச்1 என்1 வைரஸ் தொற்று அதிகமாக வாய், நாசி வழியாக பரவுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் வாய் மற்றும் நாசியை தொடர்ந்து சுத்தமாக வைத்திருந்தால் இந்த பயங்கர நோயிலிருந்து விடுதலை பெறலாம். ஒருவர் ஐவேளைத் தொழுபவராக இருந்து உளூச் செய்யும்போது வாய் மற்றும் நாசியை தூய்மை செய்து வந்தால் இந்த தொற்று நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

இதைப்போன்று தொற்று நோய்கள் வரும்போது இஸ்லாம் கூறிய வழி முறைகளை இவ்வுலகம் பின்பற்றியிருந்தால் மெக்சிகோவில் உருவான இந்த காய்ச்சல் உலகம் முழுவதும் பரவாமல் தடுத்திருந்திருக்கலாம்.

கொடிய நோய்கள் ஒரு பகுதியில் தாக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு நபிகளார் பின்வருமாறு அறிவுரை கூறியுள்ளார்கள் :

 فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ، فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ، وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا، فِرَارًا مِنْهُ

அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று சொன்னார்கள்.”

நூல் : புகாரி-3473 

நோய் தாக்கிய ஊருக்கு போகக்கூடாது, நோய் தாக்கியவர் அடுத்த ஊருக்குப் போக்கக்கூடாது என்ற அடிப்படையை பின்பற்றியிருந்தால் உலகம் முழுவதும் இந்த நோய் பரவியிருக்காது.

இந்த நோய் தாக்கியவர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து சிக்கசை அளித்து அந்த நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்களை முழுமையாக பரிசோதனை செய்து நோய் தாக்கியவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் இருந்திருந்தால் இந்த நோய் உலகம் முழுவதும் பரவியிருக்காது. மேலும் நோய் தாக்கிய நாட்டிற்கு பயணம் செய்வதை மற்றவர்கள் தவிர்த்திருந்தாலும் இவ்வளவு நபர்கள் இந்த நோய்க்கு பலியாகி இருக்கமாட்டார்கள்.

இந்த இஸ்லாத்தின் வழிகாட்டுதல் இந்நேரத்தில் மிகமிக முக்கியமாக அனைவரும் பேண வேண்டிய கட்டாயமாகும்.