Tamil Bayan Points

அனைத்து வகையான இத்தாக்கள்

முக்கிய குறிப்புகள்: குடும்ப வழக்குகள்

Last Updated on November 17, 2020 by Trichy Farook

அனைத்து வகையான இத்தாக்களின் கால அளவு.
கணவனை இழந்த பெண்களின் இத்தா.
(4 மாதம் 10 நாள். கற்பிணி பெண்கள் தவிர வேறு யாருக்கும் இதில் விதிவிலக்கு இல்லை)
————————-
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். திருக்குர்ஆன் 2:234
மேலுள்ள வசனம் கணவனை இழந்த பெண்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இத்தா இருக்க வேண்டும் எனப் பொதுவாகக் கூறுகிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், கறர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்களுக்கும், குழந்தை பேறு அற்ற பெண்களுக்கும் இச்சட்டத்தில் விதிவிலக்கு இருப்பதாக குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை.
கணவனை இழந்த கற்பமாக இருக்கும் பெண்
கற்பமாக இருக்கும் பெண், விவாகரத்து செய்யப்பட்டாலோ அல்லது கணவர் இறந்தாலோ குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். 
கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையிலாகும். (அல்குர்ஆன் 65:4)
தலாக் விடப்பட்ட பெண்களின் இத்தா.
————————-
தலாக் கூறப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும் வரை பொறுத்(து காத்)திருக்க வேண்டும். இந்தப் பொழுதுகளில் அவளுக்கு கற்பத்தை அல்லாஹ் உருவாக்கி இருந்தால் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பும் பெண் அதை மறைக்கக் கூடாது (அல்குர்ஆன் 2:228)
தாய்மையை அடைய வாய்ப்புள்ள பொழுதில் இத்தா இருக்க வேண்டிய நிலைக்கு ஒரு பெண் வந்து விட்டால் மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரை அவள் இத்தா (காத்திருக்க) வேண்டும்.  இந்தப் பொழுதில் அவள் கற்பம் தரித்திருந்தால் அப்போது அவள் இத்தாவின் கால கட்டம் மூன்று மாதவிடாயிலிருந்து குழந்தைப் பெற்றெடுக்கும் வரை நீண்டு விடும்.

விவாகரத்து செய்தவுடன் மூன்று மாதவிடாய் காலம் மனைவி மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம் இத்தா எனப்படும்.

இப்படி தலாக் சொன்னபின் மனைவி, கணவனின் வீட்டில் தான் இருக்க வேண்டும். அவளை கணவன் வெளியேற்றக் கூடாது. அவளும் வெளியேறக் கூடாது.

நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர். திருக்குர்ஆன் 65:1

திருமண பந்தம் இன்னும் முழுமையாக நீங்காததால் மனைவிக்கு கணவன் வீட்டில் இருக்க முழு உரிமை உண்டு. மனைவி விபச்சாரம் செய்த காரணத்துக்காக விவாகரத்து நடந்தால் அப்போது மட்டும் விவாகரத்து நடந்தவுடன் அவர்களை வெளியேற்றலாம் என்பதும் இதில் சொல்லப்பட்டுள்ளது.

 

தலாக் விடப்பட்ட கற்பமாக இருக்கும் பெண்
கற்பமாக இருக்கும் பெண், விவாகரத்து செய்யப்பட்டாலோ அல்லது கணவர் இறந்தாலோ குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும்.
கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையிலாகும். (அல்குர்ஆன் 65:4)
தலாக் விடப்பட்ட கிழவி மற்றும் மாதவிடாய் ஏற்படாத பெண்கள்.
————————-
உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும். (அல்குர்ஆன் 65:4)
கிழவி மற்றும் மாதவிடாய் கோளாறு உள்ளவர்கள் அல்லது மாதவிடாய் நின்று போனவர்கள்,  மூன்று மாதம் இத்தா (காத்து) இருக்க வேண்டும்.
By Farook.