Tamil Bayan Points

08) அன்னியப் பெண்ணுடன் நபியவர்கள் நெருக்கமாக இருந்தார்களா?

நூல்கள்: பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

Last Updated on March 5, 2022 by

இதுபோல் அமைந்த இன்னொரு ஹதீஸைக் காணுங்கள்.

7001 حدثنا عبد الله بن يوسف، أخبرنا مالك، عن إسحاق بن عبد الله بن أبي طلحة، أنه سمع أنس بن مالك، يقول: كان رسول الله صلى الله عليه وسلم يدخل على أم حرام بنت ملحان وكانت تحت عبادة بن الصامت، فدخل عليها يوما فأطعمته، وجعلت تفلي رأسه، فنام رسول الله صلى الله عليه وسلم ثم استيقظ وهو يضحك،

7002 قالت: فقلت: ما يضحكك يا رسول الله؟ قال: ” ناس من أمتي عرضوا علي غزاة في سبيل الله، يركبون ثبج هذا البحر، ملوكا على الأسرة، أو: مثل الملوك على الأسرة ” – شك إسحاق – قالت: فقلت: يا رسول الله، ادع الله أن يجعلني منهم، فدعا لها رسول الله صلى الله عليه وسلم، ثم وضع رأسه ثم استيقظ وهو يضحك، فقلت: ما يضحكك يا رسول الله؟ قال: «ناس من أمتي عرضوا علي غزاة في سبيل الله» كما قال في الأولى، قالت: فقلت: يا رسول الله ادع الله أن يجعلني منهم، قال: «أنت من الأولين» فركبت البحر في زمان معاوية بن أبي سفيان، فصرعت عن دابتها حين خرجت من البحر، فهلكت

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியராவார். அவ்வாறே ஒரு நாள் (பகலில்) நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் அவர்களுக்குப் பேன் பார்த்து விடலானார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

7002 தொடர்ந்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களாக அல்லது மன்னர்களைப் போன்று இருந்தார்கள் என்று கூறினார்கள். உடனே நான், அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். அப்போது எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தமது தலையைக் கீழே வைத்து (உறங்கி)விட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான், ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள் என்று முன்பு போலவே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு நான், அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் (கடல் பயணம் செய்து அறப் போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியபடியே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்ட போது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டார்கள்.

நூல் : புகாரி 7001, 7002

இந்த ஹதீஸ் சொல்லும் செய்தி என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்த சம்மந்தமான உறவோ, பால்குடி உறவோ இல்லாத அந்நியப் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார்கள் என்று இச்செய்தி கூறுகிறது. அதுவும் அடிக்கடி செல்வார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. சென்றது மட்டுமில்லாமல் அந்தப் பெண் பேன் பார்த்து ஒருவரை ஒருவர் தொடும் அளவுக்கு நெருக்கமாக இருந்துள்ளதாகவும் இச்செய்தி கூறுகிறது. மேலும் அங்கேயே படுத்து உறங்கியதாகவும் இச்செய்தியில் கூறப்படுகிறது. அவர்கள் திடீரென விழித்து சிரித்த போதெல்லாம் அந்தப் பெண்மணி நபிகள் நாயகத்தின் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டே இருந்துள்ளார் என்ற கருத்தும் இதில் அடங்கியுள்ளது.

இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து இருப்பார்களா? அவர்கள் அன்னியப் பெண்கள் விஷயத்தில் எந்த அளவு விலகி இருப்பார்கள் என்பது ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்களிடம் உறுதிமொழி வாங்கும் போது அவர்களின் கைகளைப் பிடித்து உறுதி மொழி வாங்குவார்கள். ஆனால் பெண்களிடம் பைஅத் எனும் உறுதிமொழி போது பெண்களின் கையை தொடமாட்டார்கள். (பார்க்க புகாரி 7214)

ewthaஎந்த ஆணும் மஹ்ரமல்லாத எந்தப் பெண்ணுடனும் தனித்திருக்கக் கூடாது. கணவனின் சகோதரன் போன்ற உறவினருடன் கூட எந்தப் பெண்ணும் தனித்து இருக்கக் கூடாது என்று கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பார்க்க புகாரி 5232) அந்தக் கட்டளையை தாமே மீறி இருப்பார்களா?

திருக்குர்ஆன் கற்பிக்கும் ஒழுக்க வாழ்வுக்கான கட்டளைகளையும், விதிகளையும் நபியவர்களே மீறியுள்ளார்கள் என்ற கருத்தும் இதனால் ஏற்படுகிறது.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 24:30

அன்னியப் பெண்கள் முன்னால் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கட்டளையிடும் மார்க்கத்தில் அன்னியப் பெண் பேன் பார்க்கும் அளவுக்கு நெருக்கமாகவும், அந்நியப்பெண் வீட்டில் அந்தப் பெண் முன்னிலையில் படுத்து உறங்கி இருப்பார்களா?

நபிகள் நாயகம் ஸல் அவர்களைக் குறை கூறி இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்க யூதர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது போல் நடந்து இருந்தால் இதை வைத்தே நபிகள் நாயகத்தின் நற்பெயரைக் கெடுத்து இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து இருப்பார்கள்.

இஸ்லாத்தின் எந்த ஒரு எதிரியும் இது குறித்து விமர்சனம் செய்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. எனவே இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது மேலும் உறுதியாகின்றது.

அவர்களின் பரிசுத்த வாழ்க்கையைக் கண்டுதான் அம்மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

‘நூறு சதவிகிதம் இவரை நம்பலாம்’ என்று நபிகள் நாயகத்தின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான் இஸ்லாத்தை அவர்கள் ஏற்பதற்கு முதல் காரணமாக இருந்தது.

எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்று மக்கள் நினைக்கின்றனர்.

தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

இதை முன் வைத்தே இறைத்தூதர் என்பதை நிலைநாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.

‘அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களுடன் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன்.விளங்க மாட்டீர்களா?’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:16 )

இறைத்தூதராக ஆவதற்கு முன்னர் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்த நபியவர்கள் இறைத்தூதராக ஆன பின்னர் அதைவிட பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

ஆனால் மேற்கண்ட செய்தி இந்த அடிப்படையைத் தகர்த்து சுக்கு நூறாக்கி விடுகிறது.

அறிவிப்பாளர்கள் சரியாகத்தானே இருக்கின்றார்கள் என்று கூறி இதற்கும் முட்டுக் கொடுக்கும் அறிஞர்கள் உள்ளனர். அறிவிப்பாளர் நல்லவர் என்று பார்க்கிறார்களே தவிர அல்லாஹ்வின் தூதருடைய கன்னியத்துக்கு கடுகளவும் மதிப்பு கொடுக்க மறுக்கிறார்கள்.

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

திருக்குர்ஆன் 68:4

என்று அல்லாஹ் நற்சான்று கொடுக்கிறான். இந்தச் செய்தியில் சொல்லப்படுவது மகத்தான நற்குணம் ஆகுமா?

இந்தச் செய்தி இஸ்லாத்திற்கே விரோதமாக இருப்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி செய்திருக்க மாட்டார்கள் என்று நாம் மறுத்தாக வேண்டும்.

பெரிய பெரிய ஆலிம்களாகச் சிந்திக்க வேண்டாம். மூஃமின்களாகச் சிந்தியுங்கள். இறையச்சமுடையவர்களாகச் சிந்தியுங்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி நடந்து இருக்க முடியாது என்ற முடிவுக்குத் தான் வர முடியும்.

இது போன்ற செய்தியை நம்பினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பழி சுமத்தியது போல் ஆகுமா? ஆகாதா? அல்லாஹ்வுடைய தூதர் இப்படி நடந்து கொள்வார்களா?

இது புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இதை நம்பித்தான் ஆக வேண்டும் என்று யாரேனும் வாதிட்டால் அவர்கள் தமது கூற்றில் உண்மையாளர்களாக இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்மாதிரி என்பதால் அவர்களைப் பின்பற்றி எல்லா முஸ்லிம்களும் இப்படி அந்நியப் பெண்கள் வீட்டில் வீட்டில் போய் தங்கி நெருக்கமாக இருக்கலாம் என்று இவர்கள் மார்க்கத் தீர்ப்பு அளிப்பார்களா? அளிக்க மாட்டார்கள்.

இவர்களின் நாவு தான் இதை நம்ப வேண்டும் என்று சொல்கிறது. மனது மறுக்கத்தான் செய்கிறது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.