Tamil Bayan Points

சூரத்துல் ஃபாத்திஹாவின் சிறப்புகள்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

Last Updated on September 15, 2023 by Trichy Farook

சூரத்துல் ஃபாத்திஹாவின் சிறப்புகள்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!
நபித்தோழர்களால் வரிசைப்படுத்தப்பட்ட திருமறை அத்தியாயங்களின் முதலாவது அத்தியாயமாக ”சூரத்துல் ஃபாத்திஹா” இடம் பெற்றுள்ளது. இந்த அத்தியாயம் அருளப்பட்டதற்கான பின்னணிக் காரணங்கள் ஏதும் கிடையாது. ஆனால் இந்த அத்தியாயம் தொடர்பாக ஏராளமான சிறப்புகள் ஹதீஸ்களில் வந்துள்ளன. இந்த அத்தியாயத்திற்குப் பல பெயர்களை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
உம்முல் குர்ஆன் (குர்ஆனின் தாய்)
 قال : قال رسول الله صلى الله عليه و سلم
 الحمد لله أم القرآن وأم الكتاب والسبع المثاني

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
”அல்ஹம்து லில்லாஹ்” (அத்தியாயமாகிறது) உம்முல் குர்ஆன் (குர்ஆனின் தாய்), இன்னும் உம்முல் கிதாப் (வேதத்தின் தாய்), இன்னும் அஸ்ஸப்வுல் மஸானி (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும்) ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: திர்மிதீ-3124 (3049) அஹ்மத் (9789)

மகத்தான குர்ஆன் என்பதும், திரும்பத்திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் என்பதும் அல்ஹம்து சூராவிற்குரிய பெயர்களில் உள்ளதாகும். அல்லாஹ் தனது திருமறைக்குர்ஆனில் அல்ஹம்து சூராவை மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றான்.

وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ

(முஹம்மதே!) திரும்பத் திரும்ப ஓதப்படும் (வசனங்கள்) ஏழையும், மகத்தான குர்ஆனையும் உமக்கு வழங்கினோம்.

(அல்குர்ஆன்: 15:87)

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: فِي أُمِّ الْقُرْآنِ:
هِيَ أُمُّ الْقُرْآنِ، وَهِيَ السَّبْعُ الْمَثَانِي، وَهِيَ الْقُرْآنُ الْعَظِيمُ

நபி (ஸல்) அவர்கள் உம்முல் குர்ஆன் தொடர்பாக கூறும் போது ”அது தான் உம்முல் குர்ஆன் (குர்ஆனின் தாய்), அதுதான் ”அஸ்ஸப்வுல் மஸானீ” (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு), அதுதான் ”அல்குர்ஆனுல் அளீம்” (மகத்தான குர்ஆன்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : அஹ்மத்-9788 

அபூசயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின்), “அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்த போது) நான் தொழுது கொண்டிருந்தேன்” என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள், “உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்தூதர் உங்களை அழைக்கும் போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (அல்குர்ஆன்: 8:24) ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு என்னிடம், “குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்” என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டார்கள்.

அவர்கள் வெளியே செல்ல முனைந்த போது நான் அவர்களிடம், “நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொல்லவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ (என்று தொடங்கும் அல்ஃபாத்திஹா‘ அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும்” என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி-4474 

அஸ்ஸலாத் (தொழுகை)

பின்வரும் நபிமொழியில் அல்ஹம்து சூரா ”அஸ்ஸலாத்” (தொழுகை) என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்‘ என்று கூறுவான்.

அடியான் “அர்ரஹ்மானிர் ரஹீம்‘  (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைத் துதித்துவிட்டான்‘ என்று கூறுவான்.

அடியான் “மாலிக்கி யவ்மித்தீன்‘ (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், “என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான்‘ என்று கூறுவான். -(நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் “என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான்‘ என்றும்  கூறியுள்ளார்கள்.)

மேலும், அடியான் “இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன்‘ (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால்,  அல்லாஹ், “இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்‘ என்று கூறுவான்.

அடியான் “இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்‘ (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் “இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்‘  என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம்-655 

இந்த ஹதீஸ் ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்பை உணர்த்துவதோடு, அதன் அமைப்பையும் நமக்குத் தெளிவாக்குகின்றது.

  1. முதல் மூன்று வசனங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றும் விதமாக அருளப்பட்டுள்ளன. இந்த வசனங்களை ஒருவன் கூறும் போது அல்லாஹ்வை உரிய விதத்தில் புகழ்ந்தவனாக இறைவனால் கருதப்படுகிறான்.
  2. நான்காவது வசனம், இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத் தெளிவாக்குகின்றது. அல்லாஹ்வை எஜமானனாக ஏற்றுக் கொண்டு அவனை மட்டுமே வணங்கி வருவதும் அவனிடம் மட்டுமே உதவி தேடுவதும் தான் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் உள்ள உறவாகும். எஜமான், அடிமை என்ற உறவைத் தவிர வேறு எந்த உறவும் இறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் இல்லை என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.
  3. இறுதியில் இடம் பெற்றுள்ள வசனங்கள் இறைவனிடம் மிக முக்கியமான கோரிக்கையை முன் வைக்கும் விதமாக அருளப்பட்டுள்ளன. அந்தக் கோரிக்கை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற உத்திரவாதத்தை இந்த ஹதீஸ் அளிக்கின்றது.

அல்லாஹ் இந்த அத்தியாயத்தை மூன்று பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளதை இந்த ஹதீஸ் மூலம் அறிகிறோம்.

“ருக்யா” ஓதிப்பார்ப்பதற்குரிய அத்தியாயம்

அல்ஹம்து அத்தியாயத்திற்கு “ருக்யா” என்றும் பெயர் கூறுவார்கள். “ருக்யா” என்றால் ஓதிப் பார்ப்பதற்குரியது என்று பொருளாகும். இந்தப் பெயருக்கான காரணத்தைப்  பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித் தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்த போது, ஓர் அரபிக் குலத்தாரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அச்சயமம் அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

அப்போது அவர்களில் சிலர், இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்! என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித்தோழர்களிடம் வந்து, கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா? என்று கேட்டனர்.

அப்போது, நபித்தோழர்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது! என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்…. என்று ஓதலானார்.

உடனே பாதிக்கப்பட்டவர் கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். இதைப்பங்கு வையுங்கள்! என்று ஒருவர் கேட்ட போது, நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது! என்று ஓதிப்பார்த்தவர் கூறினார்.

நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப் பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்துக்கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

நூல்: புகாரி-2276 , 5007, 5736, 5749)

இவை மட்டுமின்றி இன்னும் ஏராளமான சிறப்புகள் இந்த அத்தியாத்திற்கு உள்ளன. அவற்றை புரிந்து, அதன்படி நடக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!