Tamil Bayan Points

ஆர்ப்பாட்டம் மாநாடுகளுக்குப் பெண்கள் வரலாமா?

கேள்வி-பதில்: பெண்கள்

Last Updated on December 25, 2021 by Trichy Farook

ஆர்ப்பாட்டம் மாநாடுகளுக்குப் பெண்கள் வரலாமா?

பெண்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிவதைத் தான் இஸ்லாம் கண்டிக்கின்றது. பெண்கள் பயனுள்ள தேவையான விஷயங்களுக்கு வெளியே செல்வதை மார்க்கம் தாராளமாக அனுமதிக்கின்றது. பெண்கள் வெளியே செல்லலாமா என்ற பிரச்சனை நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே ஏற்பட்டது. அப்போது தேவையிருந்தால் பெண்கள் வெளியே செல்லலாம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.

பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி நபி (ஸல்) அவர்கüன் துணைவியாரானன சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு “சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீஙகள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!” என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள்.

சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம் சொன்னார்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு “வஹீ‘ (வேதவெüப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி-4795 

விவாகரத்துக்குப் பிறகு இத்தா கடைப்பிடிக்கும் பெண் வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் அதையும் மார்க்கம் அனுமதிக்கின்றது.

என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (“இத்தா‘வில் இருந்தபோது) தமது பேரீச்சை மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)த போது நபி (ஸல்) அவர்கள், “ஆம்; நீ (சென்று) உமது போரீச்சை மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள். ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்” என்றார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம்-2972 

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் போர்க்களத்திற்கு வந்து காயம்பட்ட போர் வீரர்களுக்கு மருத்துவம் செய்யும் பணியைச் செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் அந்நிய ஆண்கள் பெண்களைப் பார்க்கும் நிலையும் காயம்பட்ட அந்நிய ஆண்களைப் பெண்கள் தொட்டுத் தூக்கும் நிலையும் இருந்தது. முஸ்லிம்களின் நன்மை கருதி இதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்.

(பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனித்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் “எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)

நூல்: புகாரி-324 

இஸ்லாத்தில் ஆண்கள் மட்டுமே ஆயுதம் ஏந்திப் போரிட அனுமதியுள்ளது. இதைப் பெண்கள் மீது இஸ்லாம் விதிக்கவில்லை. ஆனால் அநியாயம் செய்யும் அரசனிடம் நீதியை எடுத்துச் சொல்வது சிறந்த ஜிஹாத் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்தப் போராட்டம் ஆண்கள் மட்டும் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக இந்தப் போராட்டம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாகவே மார்க்கம் கூறுகின்றது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “எந்த அறப்போர் சிறந்தது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அக்கிரமம் புரியும் அரசனிடம் சத்தியத்தை எடுத்துரைப்பது” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

நூல்: நஸாயீ-4209 (4138)

எனவே பெண்கள் நன்மையான காரியத்துக்காக வெளியே செல்வதைக் குறை கூறுபவர்கள் மேற்கண்ட நபிமொழிகளுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். போராட்டங்கள் அனைத்தும் இஸ்லாமிய சமுதாயத்தின் நன்மையை மட்டுமே கவனத்தில் கொண்டு நடத்தப்படுகின்றன. பெண்கள் இது போன்ற நன்மையான காரியங்களில் கலந்து கொள்ளக்கூடாது என தடை செய்யும் உரிமை யாருக்கும் இல்லை.