Tamil Bayan Points

32) இரவுத் தொழுகை

நூல்கள்: தொழுகையின் சட்டங்கள்

Last Updated on November 27, 2023 by Trichy Farook

இரவுத் தொழுகை

கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلَاةِ، بَعْدَ الْفَرِيضَةِ، صَلَاةُ اللَّيْلِ»

ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம்-2157

இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.

இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ-990

இரவுத் தொழுகையின் நேரம்

இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்-1340 (1216)

இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது 11 ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ-7452

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்-428 (376)

நபி (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ-183

நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ-996

ரக்அத்களின் எண்ணிக்கை

8+3 ரக்அத்கள்

‘ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விடையளித்தார்கள்.

‘அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?’ என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸலமா
நூல்கள்: புகாரீ-1147, முஸ்லிம் 1220

12+1 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி (ஸல்) அவர்களும், அவர்களது மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதி வரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபி (ஸல்) அவர்கள் தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தைக் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று, தொங்க விடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூவை நல்ல முறையில் செய்தார்கள். நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்து விட்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். எனது வலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுது விட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ-183, முஸ்லிம் 1275

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ-1138, முஸ்லிம் 1276

10+1 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்-1339

8+5 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்-1341

9 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: புகாரீ-1139

7 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: புகாரீ-1139

5 ரக்அத்கள்

‘வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
நூல்கள்: நஸாயீ-1711 (1692), அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

3 ரக்அத்கள்

‘வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்கள்: நஸாயீ-1711 (1692), அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

1 ரக்அத்

‘வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்கள்: நஸாயீ-1711 (1692), அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

தொழும் முறை

நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றுக்கிடையே ஸலாமைக் கொண்டோ,அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: நஸாயீ-1714 (1695), இப்னுமாஜா 1182, அஹ்மத் 25281

நபி (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸாயீ-1717 (1698) 

நபி (ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள். அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸாயீ-1718 (1699)

… நபி (ஸல்) அவர்கள வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸாயீ-1719 (1700)