Tamil Bayan Points

இருப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

கேள்வி-பதில்: ஜகாத்

Last Updated on September 28, 2016 by Trichy Farook

கேள்வி : நான் கடந்த மூன்று வருடங்களாக வங்கியில் 2 இலட்சம் ரூபாய் வைத்துள்ளேன். நான் ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு தடவை கொடுத்தால் போதுமா? ஒருவரிடம் ஐந்து இலட்சம் மதிப்புள்ள கடை உள்ளது. வாடகையாக மாதாமாதம் 12,000 ரூபாய் வருமானம் வருகிறது. இப்போது அவர் ஐந்து இலட்சத்திற்கு மட்டும் ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது வாடகையாக வரும் 12,000க்கும் ஸகாத் கொடுக்க வேண்டுமா?

முதல் கேள்விக்கான பதில் :

கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றோ, அல்லது வருடத்திற்கு ஒருமுறை தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றோ எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீசும் கிடையாது.

எனவே ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுத்துவிட்டால் போதுமானதாகும். அது பரிசுத்தமாகிவிடும். மீண்டும், மீண்டும் அல்லது வருடத்திற்கொருமுறை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

இரண்டாவது கேள்விக்கான பதில்  :

ஒருவரிடம் ஐந்து இலட்சம் மதிப்புள்ள கடை இருந்தால் அவர் அதற்கு ஒரு முறை ஸகாத்தை நிறைவேற்றிவிட்டால் அது பரிசுத்தமாகிவிடும்.

பிறகு ஒவ்வொரு மாதமும் அந்தக் கடையின் மூலம் வரும் வருமானம் 12,000 ரூபாய்க்கும் இரண்டரை சதவிகிதம் ஸகாத்தை அவர் நிறைவேற்ற வேண்டும்.

ஒருவருக்கு வரும் வருவாய், அவரது சொத்துக்கள், இருப்புக்கள் ஆகிய அனைத்துக்கும் ஜகாத் உண்டு.

இதில் ஏழைகள் அடங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு எல்லைக் கோட்டை இஸ்லாம் வகுத்துள்ளது. சுமார் 11 பவுன் தங்கம் அல்லது அதன் மதிப்புடைய ரொக்கம் ஒருவரிடம் எப்போதும் மிச்சமிருந்தால் அவர் செல்வந்தர் ஆவார். ஒருவரிடம் 40 ஆடுகள் அல்லது ஐந்து ஒட்டகங்கள் இருந்தால் அவர் செல்வந்தராவார் என்று இஸ்லாம் வரையறை செய்துள்ளது.

ஒருவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அவரிடம் வேறு எந்த இருப்பும்இல்லை. அவர் ஜகாத் கொடுக்க மாட்டார். சிறிது சிறிதாக மிச்சம் பிடித்து 11 பவுன் நகை அளவுக்கு அவரிடம் இருப்பு வந்து விட்டது என்றால் அந்த 11 பவுனுக்கும் அதன் பின் அவருக்கு வரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

எப்போது 11 பவுனுக்கும் கீழ் குறைந்து விடுகிறதோ அப்போது ஜகாத் கடமை இல்லை.

ஒருவர் மாதம் மூவாயிரம் சம்பளம் வங்குகிறார். ஆனால் அவரிடம் ஏற்கனவே 20பவுன் நகை உள்ளது என்றால் இவர் அந்த 20 பவுனுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். அந்த மூன்றாயிரம் ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

எப்போதெல்லாம் அவருக்கு செல்வம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஜகாத் கடமையாகி விடும்.