Tamil Bayan Points

4) ஏற்கத்தகாத ஆதாரங்கள்

நூல்கள்: ஜகாத் ஓர் ஆய்வு

Last Updated on April 15, 2023 by

ஏற்கத்தகாத ஆதாரங்கள்

ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடந் தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் சில ஆதாரங்களை முன் வைக்கின்றனர். அந்த ஆதாரங்கள் அனைத்துமே பலவீனமானவையாக அமைந்துள்ளன.

அவற்றில் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் அவர்களின் வாதத்தை நிலை நாட்ட உதவுவதாக இல்லை.

மற்றும் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் இஸ்லாத்தின் வேறு பல அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

அந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. அனாதைகளின் சொத்து பற்றிய ஹதீஸ்

‘அனாதைகளின் சொத்துக்களுக்கு ஒருவர் பொறுப்பேற்றால் அதை வியாபாரத்தில் முதலீடு செய்யட்டும். அவ்வாறு செய்யாமல் விட்டு வைத்தால் ஜகாத் அதனைச் சாப்பிட்டு விடும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுஐப்

நூல்: திர்மிதீ 581

அவர்களின் வாதம்

இந்த ஹதீஸை அவர்கள் தமது ஆதாரமாக முன் வைக்கின்றனர். இந்த ஹதீஸிலிருந்து அவர்கள் எவ்வாறு வாதத்தை எடுத்து வைக்கின்றனர் என்பதை அறிந்து விட்டு இந்த ஹதீஸின் தரத்தையும், இவர்களின் வாதம் சரியானது தானா என்பதையும் ஆராய்வோம்.

கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லையென்றால், ‘ஜகாத் அதனைச் சாப்பிட்டு விடும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். ஒரு தடவை இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுத்து விட்டால் மீதி தொன்னூற்று ஏழரை சதவிகிதம் மிச்சமாக இருந்து விடும். ஆனால் வருடா வருடம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருந்தால் படிப்படியாக சொத்து கரைந்து கொண்டே வரும். எனவே தான் அனாதையின் சொத்துக்கள் கரைந்து விடாமல் இருப்பதற்கேற்ப வியாபாரத்தில் முதலீடு செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதிலிருந்து ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுத்து வர வேண்டும் என்பது தெரிகின்றது என அவர்கள் வாதிடுகின்றனர்.

ஹதீஸின் தரம்

மேற்கண்ட ஹதீஸின் தரம் சரியானதல்ல என்பதால் எடுத்த எடுப்பிலேயே இவர்களின் வாதம் அடிபட்டுப் போகின்றது.

இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் திர்மிதீ அவர்கள், ‘இதன் அறிவிப்பாளர் தொடரில் விமர்சனம் உள்ளது. ஏனெனில் முஸன்னா பின் ஸப்பாஹ் என்பவர் பலவீனமானவர்’ என்று ஹதீஸின் கடைசியில் குறிப்பிடுகின்றார்கள்.

இதே ஹதீஸ் தாரகுத்னீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாரகுத்னீ 2/109 எண் 1

மேற்கண்ட ஹதீசும் முஸன்னா பின் ஸப்பாஹ் என்பவர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் காண்க. முஸன்னா பின் ஸப்பாஹ் பற்றிய விமர்சனம்

ஹதீஸ் கலை வல்லுனர்கள் இவரைப் பற்றிக் குறை கூறியுள்ளனர்.

லுஅஃபாவுல் கபீர் 4/249

யஹ்யா, அப்துர்ரஹ்மான் ஆகிய இரு ஹதீஸ் கலை வல்லுநர்களும் ‘முஸன்னா பின் ஸப்பாஹ் வழியாக எதையும் அறிவித்ததில்லை’ என்று அம்ரு பின் அலீ குறிப்பிடுகின்றார்கள். ‘இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் சரியானவை அல்ல; ஹதீஸ்களை இவர் மாற்றி மாற்றிக் கூறுபவர்’ என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார்கள். ‘இவரிடம் ஏற்பட்ட மனக் குழப்பத்தின் காரணமாக இவர் வழியாக எதையும் நான் அறிவிப்பதில்லை’ என்று யஹ்யா கூறுகின்றார். ‘இவர் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர் என்றாலும் ஹதீஸ் துறையில் சரியானவர் அல்லர்’ என்றும் ‘இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யலாம்; இவர் பலவீனமானவர்’ என்றும் யஹ்யா பின் மயீன் கூறுகின்றார்.

தஹ்தீபுத் தஹ்தீப் 10/32

இவர் பலவீனமானவர் என்று நஸயீ, அபூஸுர்ஆ, அலீ பின் அல்ஜுனைத், தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், இப்னு அம்மார், ஸாஜி, அபூஅஹ்மத், அபூஹாத்திம், ஜவ்ஸஜானி, திர்மிதீ, இப்னு ஸஅது, இப்னு அம்மார், ஹாகிம், உகைலீ, யஹ்யா அல் கத்தான், யஹ்யா பின் ஸயீத், யஹ்யா பின் மயீன் ஆகியோர் கூறியதாக ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது தஹ்தீப் நூலில் (10/32) குறிப்பிடுகின்றார்கள்.

இந்தச் செய்தியை அறிவிக்கும் முஸன்னா பின் ஸப்பாஹ் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.

மற்றொரு அறிவிப்பு

இதே ஹதீஸ் முஸன்னா பின் ஸப்பாஹ் வழியாக அல்லாமல் வேறு வழியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தாரகுத்னீ 2/110-2)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் உபைத் பின் இஸ்ஹாக் என்பவரும் மின்தல் என்பவரும் இடம் பெற்றுள்ளனர். இவ்விருவரும் பலவீனமானவர்கள்.

மின்தல் பற்றிய விமர்சனம்

(தஹ்தீபுத் தஹ்தீப் 10/264)

அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், அலீ பின் மத்யனி, புகாரி, அபூஸுர்ஆ, நஸயீ, இப்னு அதீ, அபூ ஹஸ்ஸான், ஜவ்ஸஜானி, அபூ அஹ்மத், ஹாகிம், ஸாஜி, அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, இப்னு கானிஃ, தாரகுத்னீ, தஹாவீ உள்ளிட்ட பல அறிஞர்கள் இவரைப் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர். இப்னு மயீன் அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியதாகவும் நம்பகமானவர் என்று கூறியதாகவும் முரண்பட்ட இரண்டு அறிவிப்புக்கள் உள்ளன. முஆத் பின் முஆத், அஜலீ, ஆகியோர் மட்டும் தான் இவரது ஹதீஸ்களை ஏற்கலாம் என்று கூறியுள்ளனர் என்றாலும் இவரைக் குறை கூறியவர்கள் மோசமான நினைவாற்றல் உள்ளிட்ட பல குறைபாடுகள் உள்ளவர் என தக்க காரணத்துடன் குறை கூறியுள்ளதால் அதையே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே இவர் இடம் பெறும் மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.

உபைத் பின் இஸ்ஹாக் பற்றிய விமர்சனம்

மேற்கண்ட ஹதீஸில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளரான உபைத் பின் இஸ்ஹாக் என்பவரும் பலவீனமானவர்.

(அல்காமில் 5/347)

புகாரி, யஹ்யா ஆகியோர் இவரது ஹதீஸ்கள் முன்கர் (நிராகரிக்கத்தக்கது) என்ற தரத்தில் அமைந்தவை என்று குறிப்பிட்டுள்ளனர். இவர் அறிவித்துள்ள தவறான பல ஹதீஸ்கள் தக்க சான்றுகளுடன் மேற்கண்ட நூலில் விளக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளதால் இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

மற்றொரு அறிவிப்பு

மேற்கண்ட ஹதீஸ் மற்றொரு வழியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் உபைத் பின் இஸ்ஹாக் இடம் பெறாவிட்டாலும் மின்தல் பின் அலீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்பதை மேலே விளக்கியுள்ளோம்.

(தப்ரானியின் அவ்ஸத் 1/298 – 998)

மற்றொரு அறிவிப்பு

மேற்கண்ட ஹதீஸ் மேற்கூறப்பட்ட மூவர் வழியாக இல்லாமல் வேறு சில அறிவிப்பாளர்கள் மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தாரகுத்னீ 2/110 – 3)

இந்த ஹதீஸில் மேற்கண்ட மூவரில் எவரும் இடம் பெறாவிட்டாலும் முஹம்மத் பின் உபைதுல்லாஹ் (அல்அஸ்ரமி) என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் நம்பகமானவர் அல்லர்.

முஹம்மத் பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமி பற்றிய விமர்சனம்

(அல்மஜ்ரூஹீன் 2/246)

இவர் உண்மையாளராக இருந்தாலும் இவரது நூற்கள் அழிந்து விட்டன. இவர் நினைவாற்றல் குறைந்தவராக இருந்தார். தனது நினைவில் உள்ளதை இவர் அறிவிக்கும் போது தவறாக அறிவித்து விடுவார். நிராகரிக்கப்படும் ஹதீஸ்கள் பலவற்றை இவர் அறிவித்துள்ளார். இப்னுல் முபாரக், யஹ்யா பின் அல்கத்தான், இப்னு மஹ்தீ, யஹ்யா பின் மயீன் ஆகியோர் இவரை விட்டு விட்டனர்.

எனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.

மற்றொரு அறிவிப்பு

மேற்கண்ட நால்வர் வழியாக அல்லாமல் வேறு அறிவிப்பாளர்கள் மூலமாகவும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தப்ரானியின் அவ்ஸத் 4/264 – 4152)

இந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதில் ஃபுராத் பின் முஹம்மத் என்பவரும் உமாரா பின் கஸிய்யா என்பவரும் இடம் பெறுகின்றார்கள். இவ்விருவரும் பலவீனமானவர்கள் ஆவர்.

ஃபுராத் பின் முஹம்மத் பற்றிய விமர்சனம்

(லிஸானுல் மீஸான் 4/432)

இவர் பலவீனமானவர் மட்டுமின்றி பொய்யர் என்று சந்தேகிக்கப் பட்டவராகவும் இருந்தார் என்று லிஸானுல் மீஸானில் கூறப்பட்டுள்ளது.

உமாரா பின் கஸிய்யா

மற்றொரு அறிவிப்பாளரான உமாரா பின் கஸிய்யா என்பவரும் பலவீனமானவராவார்.

(லுஅஃபாவுல் உகைலீ 3/315)

‘இவருடன் எத்தனையோ தடவை நான் அமர்ந்துள்ளேன். ஆயினும் இவரிடமிருந்து எந்த ஹதீஸையும் நான் மனனம் செய்ததில்லை’ என்று சுஃப்யான் கூறுகின்றார். ‘இவரைப் புகழ்ந்து கூறும் விமர்சனம் எதையும் நாம் காணவில்லை’ எனவும் கூறுகின்றார்.

ஆக ‘அனாதைகளின் சொத்துக்களுக்குப் பொறுப்பேற்றவர் அதை வியாபாரத்தில் முடக்க வேண்டும். இல்லாவிட்டால் ஜகாத் கொடுத்தே அந்தச் சொத்து கரைந்து விடும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் எந்தவொரு அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல.

எனவே இதன் அடிப்படையில் எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.

இது தவிர உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக மேற்கண்ட கருத்து தாரகுத்னீ 2/110, பைஹகீ 4/107 மற்றும் 6/2, முஸ்னத் ஷாஃபி 1/204, முஅத்தா 1/251, முஸன்னப் அப்துர்ரஸாக் 4/69 ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தையும் மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்ற எவருக்கும் வஹீ வராது என்பதால் அதை வைத்து எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.

மற்றொரு அறிவிப்பில் பைஹகீ (4/107) நபிகள் நாயகத்தின் கூற்றாக சரியான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப் பட்டிருந்தாலும் அதில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளதாக பைஹகீ அவர்களே கூறுகின்றார்கள்.

(பைஹகீ 4/107)

ஆக இவர்கள் எடுத்து வைத்த முதல் ஆதாரம் ஏற்புடையதாக இல்லை.

 

வருடா வருடம் என்று ஹதீஸில் இல்லை

இது தவிர ஒரு வாதத்துக்காக மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதத்தை இந்த ஹதீஸிலிருந்து நிலை நாட்ட முடியாது.

ஜகாத் கொடுத்தால் அனாதையின் சொத்து கரைந்து விடும் என்று மட்டும் தான் மேற்கண்ட பலவீனமான ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வருடா வருடம் என்று கூறப்படவில்லை. வருடா வருடம் என்பது இவர்களாக செருகிக் கொண்டதாகும்.

‘ஜகாத் கொடுத்துக் கொண்டிருந்தால் அனாதைகளின் சொத்து கரையும் என்றால் வருடா வருடம் கொடுப்பதை விட மாதந்தோறும் கொடுத்தால் இன்னும் சீக்கிரமாகக் கரைந்து விடும். எனவே மாதாமாதம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்’ என்று நாம் வாதிட்டால் அவர்களிடம் ஏற்கத்தக்க எந்தப் பதிலும் இருக்காது.

இன்னும் ஒருவர் வாரா வாரம் ஜகாத் கொடுப்பதைத் தான் இது குறிப்பிடுகின்றது. சொத்தைக் கரைத்து விடும் என்ற கருத்து வாரா வாரம் கொடுத்தால் தான் பொருந்தும் என்று வாதிடலாம். வேறொருவர் தினமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு இதை ஆதாரமாகக் காட்டலாம்.

தினசரி ஐந்து வேளை தொழுகை போல் தினசரி ஐந்து வேளை ஜகாத் கொடுப்பதைத் தான் இது குறிப்பிடுகின்றது என்றும் கூறலாம். இவையெல்லாம் எப்படி ஹதீஸில் இல்லாமல் திணிக்கப்பட்டதாக உள்ளதோ அது போல் தான் வருடா வருடம் என்பதும் மேற்கண்ட ஹதீஸில் திணிக்கப்பட்டதாகும்.

இதை ஒரு வாதத்துக்காகவும், மேலதிக விளக்கத்திற்காகவும் தான் குறிப்பிடுகின்றோம். அந்த ஹதீஸ் பலவீனமானது என்பது தான் அடிப்படையான விஷயமாகும்.

அடிப்படையான விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் உதாரணத்திற்காகவும், வலுப்படுத்துவதற்காகவும் நாம் கூறும் விஷயங்களுக்கு சிலர் நீண்ட மறுப்பு (?) கூறுவது தான் இதை நாம் அடிக்கடி இந்தத் தொடரில் வலியுறுத்துவதற்குக் காரணம் .

அவர்கள் மேற்கண்ட ஹதீஸ்கள் பலவீனமானவை அல்ல என்பதற்குத் தான் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.

 

அனாதைக்கு அநீதி

அறிவிப்பாளர்களில் பலவீனம் என்பதுடன், வருடா வருடம் என்ற வார்த்தை இந்த ஹதீஸில் இடம் பெறவில்லை என்பதை மேலே கண்டோம். அது மட்டுமின்றி இந்த ஹதீஸ் கூறும் கருத்தும் இஸ்லாமிய நெறிகளுக்கு உகந்ததாக இல்லை.

பருவ வயதை அடைவதற்கு முன்பு தான் ஒருவரை அனாதை என்று கூற முடியும். இவர்களும் ஒப்புக் கொண்ட இஸ்லாமியச் சட்டப்படி பருவ வயது வராதவர்களின் எந்த ஒப்பந்தமும் செல்லாது.

அனாதையின் சொத்தை வியாபாரத்தில் முடக்க வேண்டுமானால் அனாதையின் சம்மதம் அவசியம்.

அனாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும். (அல்குர்ஆன் 17:34) அனாதை சம்மதம் கொடுக்கும் வயதுடையவனாக இல்லாததால் அனாதை சொத்தை வியாபாரத்தில் போடுவதற்கு பொறுப்பாளனுக்கு உரிமை இல்லை.

இந்தக் காரணத்தாலும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் பலவீனப்படுகின்றது. இதையும் மேலதிக விளக்கமாகத் தான் கூறுகிறோம். இதற்கு விளக்கம் என்று எதையோ கூறி மழுப்பி விட்டு அடிப்படையான விஷயத்தை விட்டு விடக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

வியாபாரம் என்பது லாபமும், நட்டமும் ஏற்படும் என்ற இரண்டு தன்மைகளைக் கொண்டதாகும்.

அனாதைச் சொத்தை வியாபாரத்தில் போடாமல் இருந்தால் இவர்களின் வாதப்படி ஜகாத் கொடுத்தே கரைவதற்குப் பல வருடங்கள் ஆகும். ஆனால் வியாபாரத்தில் போட்டு, நட்டம் ஏற்பட்டால் ஒரு மாதத்திலேயே, ஏன் ஒரு நாளில் கூட அனாதையின் சொத்து அழிந்து விடும்.

மேலும் இவர்களது வாதப்படி ஜகாத் கரைந்து கொண்டே வந்து ஒரு குறிப்பிட்ட தொகை வந்ததும் ஜகாத் கடமையாகாத நிலை ஏற்படும். அப்போது அந்தத் தொகை மட்டுமாவது அனாதைக்காக மிஞ்சியிருக்கும். ஆனால் வியாபாரத்தில் நட்டமடைந்து விட்டால் எதுவுமே மிஞ்சாத நிலை கூட ஏற்படலாம்.

ஜகாத் கொடுத்தே சொத்து கரைந்து விடும் என்ற கருத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இந்தப் பலவீனமான ஹதீஸ் கூறுகின்றது.

ஒரு காலத்திலும் முழுமையாகக் கரையாது இவர்கள் வாதப்படியே ஆண்டுக்கு ஒரு முறை ஜகாத் கொடுப்பதாக வைத்துக் கொண்டாலும் ஒரு காலத்திலும் முழுமையாகக் கரைவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு வயதுடைய அல்லது அன்று பிறந்த குழந்தை அனாதையாகி விட்ட நிலையில் சொத்தை ஒருவன் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அனாதை பருவ வயது அடையும் வரை தான் பராமரிக்க வேண்டும். அதாவது அதிகப்பட்சமாக 15 வருடங்கள் வரை ஒருவர் அனாதையின் சொத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும். சொத்தில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் என்ற அடிப்படையில் இதைக் கணக்கிடுவோம்.

ஒரு லட்ச ரூபாய் அனாதைச் சொத்தை ஒருவர் பராமரிக்கின்றார். இவர்களின் வாதப்படி ஓர் ஆண்டுக்கு இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அதாவது 2500 ரூபாய் கொடுக்க வேண்டும். அடுத்த வருடம் 2437 ரூபாய் ஐம்பது காசுகள் ஜகாத் கொடுக்க வேண்டும். 15 வருடங்கள் இப்படியே கொடுத்தால் கூட அதிகபட்சமாக 31,598 ரூபாய் தான் ஜகாத் கொடுக்க வேண்டி வரும். மீதி 68,402 ரூபாய் கண்டிப்பாக மீதம் இருக்கும். அப்படிப் பார்க்கும் போது மேற்கண்ட பலவீனமான ஹதீஸ்களின் கூறப்பட்டுள்ளது போல் ஜகாத் கொடுத்தே சொத்து கரைந்து விடுவதற்கோ, அல்லது சொத்தை ஜகாத் விழுங்கி விடுவதற்கோ வாய்ப்பில்லை.

எனவே இது போன்ற பொருத்தமற்ற வாதங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் இது மேலும் பலவீனப்படுகின்றது.

இதுவும் மேலதிகமான விளக்கத்திற்காகத் தான் கூறப்படுகின்றது. அடிப்படையான விஷயம் மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்பது தான். அதற்குத் தான் இவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.

மேலும் அனாதைச் சொத்தை மோசடி செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடும்.

‘உன் சொத்தை வியாபாரத்தில் போட்டேன். எல்லாம் நட்டமாகி விட்டது’ என்று சொத்தைப் பராமரித்தவர் அனாதை வளர்ந்து பெரியவனாகும் போது கூறும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்படுத்த மட்டார்கள் என்பதும் மேற்கண்ட ஹதீஸை இன்னும் பலவீனப்படுத்துகின்றது.

 

2. இரண்டு வருட ஜகாத்தை முன் கூட்டியே வாங்கிய ஹதீஸ்

ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள் மற்றொரு ஹதீஸையும் தங்களின் வாதத்துக்குச் சான்றாக எடுத்து வைக்கின்றனர்.

அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஜகாத் வசூலிக்க உமர் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) ஜகாத்தைக் கேட்டார்கள். அவர்களிடம் அப்பாஸ் (ரலி) கடுமையாக நடந்து கொண்டார். உடனே உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அப்பாஸ் இந்த வருட ஜகாத்தையும் வரும் ஆண்டின் ஜகாத்தையும் முன் கூட்டியே தந்து விட்டார்’ எனக் கூறினார்கள்.

மேற்கண்ட கருத்தில் சில ஹதீஸ்கள் சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை ஆதாரமாகக் கொண்டு, கொடுத்த பொருளுக்கே ஆண்டு தோறும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

‘வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு வருட ஜகாத்தை முன் கூட்டியே வாங்கியுள்ளனர்’ என்பது இவர்களின் வாதம்.

இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா என்பதையும், ஆதாரப்பூர்வமானவை என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதத்துக்கு இதில் இடம் உள்ளதா என்பதையும் விரிவாக நாம் ஆராய்வோம்.

மேற்கண்ட கருத்தில் அமைந்த எந்த அறிவிப்பும் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதாக இல்லை.

முதல் அறிவிப்பு

(தாரகுத்னீ 2/124 – 6)

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹஸன் பின் உமாரா என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.

ஹஸன் பின் உமாரா பற்றிய விமர்சனம்

(தஹ்தீபுத் தஹ்தீப் 2/263)

‘ஹஸன் பின் உமாரா, ஹகம் என்பாரின் பெயரைப் பயன்படுத்தி 70 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவற்றில் ஒன்றுக்குக் கூட அடிப்படை இல்லை’ என்று ஷுஃபா கூறுகின்றார். (மேற்கண்ட ஹதீஸையும் ஹகம் வழியாகவே ஹஸன் பின் உமாரா அறிவித்துள்ளார்.) ‘ஹஸன் பின் உமாரா வழியாக எதையும் அறிவிக்காதே! அவர் பொய் சொல்பவர்’ என்று ஜரீர் பின் ஹாஸிம் என்பாரிடம் ஷுஃபா கூறினார். இவரது ஹதீஸ்களை விட்டு விட வேண்டும் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார். மேலும் இவரது ஹதீஸ்கள் யாவும் இட்டுக் கட்டப்பட்டவை, அவற்றைப் பதிவு செய்யக் கூடாது என்றும் அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார். இப்னு மயீன் அவர்களும் இதே கருத்தைக் கூறியுள்ளனர். அப்துல்லாஹ் பின் அல்மத்யனி, அபூஹாதம், முஸ்லிம், நஸயீ, தாரகுத்னீ ஆகியோரும் இவரது ஹதீஸ்களை விட்டு விட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

எனவே பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்ட இவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முடியாது.

மற்றொரு அறிவிப்பு (பைஹகீ 4/111)

மேற்கண்ட கருத்தில் அமைந்துள்ள இந்த ஹதீஸிலும் ஹஸன் பின் உமாரா என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகின்றார். அத்துடன் முஹம்மத் பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ என்பவரும் இத்தொடரில் இத்தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

இவரும் பலவீனமானவர் என்பதற்கான ஆதாரத்தைப் பக்கம் 35ல் குறிப்பிட்டுள்ளோம். எனவே இது முந்தையதை விட இன்னும் பலவீனமானதாகும்.

மற்றோர் அறிவிப்பு

இவை தவிர இன்னோர் அறிவிப்பும் உள்ளது.

(தாரகுத்னீ 2/124)

இதன் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மத் பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ இடம் பெற்றுள்ளதைக் காண்க!

இவர் பலவீனமானவர் என்பதற்கான ஆதாரத்தை பக்கம் 35ல் குறிப்பிட்டுள்ளோம். எனவே இந்த அறிவிப்பையும் ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.

மற்றோர் அறிவிப்பு

(தாரகுத்னீ 2/124-8)

இதே கருத்தில் தாரகுத்னீயில் இடம் பெற்ற இந்த அறிவிப்பில் ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டியுள்ள உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ என்பாரும், அனாதைகளின் சொத்து பற்றிய ஹதீஸில் நாம் சுட்டிக் காட்டிய மின்தல் பின் அலீ என்பாரும் இடம் பெற்றுள்ளார். பலவீனமான இருவர் வழியாக அறிவிக்கப்படுவதால் இதுவும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ் அல்ல.

இன்னோர் அறிவிப்பு

மேற்கண்ட அறிவிப்பாளர்கள் அல்லாத வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தப்ரானியின் அவ்ஸத் 1/299)

(தப்ரானியின் கபீர் 10/72)

மேற்கண்ட இரண்டு அறிவிப்புக்களிலும் முஹம்மத் பின் தக்வான் என்பவர் இடம் பெறுகின்றார்.

(லுஅஃபாவுல் கபீர் 4/65)

இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கத் தக்கவை என்று புகாரி இமாம் கூறுகின்றார்கள். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள இயலாது.

மற்றோர் அறிவிப்பு

(பைஹகீ 4/111)

மேற்கண்ட ஹதீஸ் மற்றொரு வழியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலீ (ரலி) வழியாக அபுல் பக்தரி என்பார் அறிவிப்பதாக மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் அபுல் பக்தரி என்பார் அலீ (ரலி) அவர்களைச் சந்தித்து எதையும் அறிவித்ததில்லை.

இதை இந்த ஹதீஸின் இறுதியில் பைஹகீ அவர்களே குறிப்பிடுகின்றார்கள். அலீ (ரலி), அபுல் பக்தரி ஆகிய இருவருக்குமிடையே தொடர்பு இல்லாததால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

இந்தக் கருத்தில் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் சரியான அறிவிப்பு ஒன்று உள்ளது என்று இந்த ஹதீஸின் இறுதியில் பைஹகீ குறிப்பிடுகின்றார்கள். அந்தச் சரியான அறிவிப்பு புகாரியிலும், முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது. ஆயினும் அந்த ஹதீஸ் இந்தக் கருத்தைக் கூறவில்லை என்பதை பக்கம் 51ல் காணுங்கள்.

இன்னோர் அறிவிப்பு

மேற்கண்ட அறிவிப்பாளர்கள் இன்றி வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் தாரகுத்னீயில் ஓர் அறிவிப்பு உள்ளது.

(தாரகுத்னீ 2/125-9)

இதன் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் மக்கீ என்பார் இடம் பெறுகின்றார். இவரும் பலவீனமானவர்.

இவை தவிர பஸ்ஸார், அபூ யஃலாவிலும் இந்த ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளராக ஹஸன் பின் உமாரா இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

(பஸ்ஸார் 4/303)

பஸ்ஸாரில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் முஹம்மத் பின் தக்வான் இடம் பெறுகின்றார். இவரும் பலவீனமானவர் என்பதை முன்பே விளக்கியுள்ளோம்.

(அபூயஃலா 2/12)

பஸ்ஸார் நூலின் மற்றொரு அறிவிப்பில் ஹஸன் பின் உமாரா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்பதையும் விளக்கியுள்ளோம்.

மற்றோர் அறிவிப்பு

அஹ்மத், ஹாகிம், திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத் உள்ளிட்ட நூல்களில் இந்தக் கருத்தில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹுஷைம் என்பார் அறிவிக்கும் போது அலீ (ரலி) கூறியதாகவும், சில வேளை ஹஸன் பின் முஸ்லிம் என்ற நபித்தோழர் அல்லாத ஒருவர் கூறியதாகவும் முரண்படுகின்றார். இதை ஆய்வு செய்த தாரகுத்னீ, அபூதாவூத் ஆகியோர் நபித்தோழர் அல்லாதவர் அறிவிப்பதாகக் கூறுவது தான் சரியான அறிவிப்பாகும் என்று கூறுகின்றனர்.

அதாவது நபித்தோழர் அறிவிப்பதாகக் கூறுவது தவறு என்று கூறுகின்றார்கள். இந்த விபரம் தல்கீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித் தோழர் அல்லாதவர் அறிவித்தால் அது ஏற்கத்தக்கதல்ல.

இந்தக் கருத்தில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. எனவே இதை அடிப்படையாகக் கொண்டு சட்டம் வகுக்க முடியாது.

ஆதாரப்பூர்வமான ஹதீசுக்கு முரண்

அறிவிப்பாளர் சரியில்லை என்பதாலும், தொடர்பு அறுந்துள்ளதாலும் இந்த ஹதீஸ்கள் பலவீனமாக இருப்பதுடன் ஆதாரப்பூர்வமான பின் வரும் ஹதீசுடன் முரண்படுவதால் இது இட்டுக் கட்டப்பட்ட செய்தி என்ற நிலைக்கு மேலும் இறங்குகிறது.

அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஜகாத் வசூலிக்க உமர் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பிய போது அப்பாஸ் (ரலி) அவர்கள் மறுத்தார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, ‘அது என்னைச் சார்ந்தது. அது போல் ஒரு மடங்கும் என்னைச் சார்ந்தது’ என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1634

புகாரியின் அறிவிப்பில் (1468) ‘அதுவும், அத்துடன் அது போன்றதும் அவர் மீது கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்களில் எந்தக் குறைபாடும் இல்லை. இந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் இரண்டு வருட ஜகாத்தை அப்பாஸ் (ரலி)யிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசூலிக்கவில்லை என்பதும், மாறாக அவர் மீதுள்ள ஜகாத்தையும் அது போல் இன்னொரு மடங்கையும் வசூலித்தார்கள் என்பதும் தெரிய வருகின்றது.

ஜாகத் கொடுக்க மறுத்ததற்காக இன்னொரு மடங்கை வாங்கினார்கள் என்பது இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது, சாதாரண அறிவு படைத்தவருக்கும் தெரியும். பத்து ரூபாய் தர வேண்டியவர் அதைத் தர மறுக்கும் போது 20 ரூபாய் கொடு என்று கூறினால், அது மறுத்ததற்கான தண்டனை என்பதை யாரும் விளங்கலாம்.

புகாரியின் விரிவுரை நூலான ஃபத்ஹுல்பாரியில் இது பற்றிக் கூறப்பட்டதை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

இப்னு ஹஜர் விளக்கம்

அவரது ஜகாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு மடங்காக வாங்கியதற்கான காரணம் தமது தகுதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தம் மீது பழி சேரக் கூடாது என்பதற்காகவும் தான். இதன் கருத்து, அவர் அந்த ஜகாத்தைக் கொடுத்தாக வேண்டும். அது போன்ற இன்னொரு மடங்கை உபரியாக வழங்க வேண்டும் என்பது தான். (ஃபத்ஹுல் பாரி 3/333)

அவர் மீது கடமையான ஜகாத் போன்று இன்னொரு மடங்கை வாங்கியது இரண்டு வருடத்துக்காக அல்ல. உபரியாகத் தான் வாங்கினார்கள் என்று இப்னு ஹஜர் அவர்கள் தெளிவு படுத்துகின்றார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜகாத் கொடுக்க மறுத்த சம்பவம் புகாரி, முஸ்லிம் நூற்களில் ஒரு விதமாக உள்ளது. இது ஆதாரப்பூர்வமாக உள்ளது.

மற்ற நூற்களில் வேறு விதமாக உள்ளது. அது பலவீனமானதாக உள்ளது.

மேலும் ஆதாரப்பூர்வமான இந்த ஹதீசுக்கு முரண்படுவதாலும், இரண்டு வருட ஜகாத்தை முன் கூட்டியே வசூலித்தார்கள் என்பது இட்டுக்கட்டப்பட்ட நிலைக்குத் தரம் குறைந்து விடுகின்றது.

ஜகாத்தை முன் கூட்டியே வாங்கலாமா?

அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை முன் கூட்டியே வாங்கி விட்டனர் என்பது ஆதாரமற்றது என்பதால் இதை ஆதாரமாகக் கொண்ட இவர்களது வாதமும் அடிபட்டுப் போகின்றது.

மேலும் பல காரணங்களால் அந்த ஹதீஸ்களின் பலவீனம் மேலும் அதிகரிக்கின்றது.

ஜகாத் கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்ற படியே வைத்துக் கொண்டாலும் முன் கூட்டியே இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை வாங்குவது நடைமுறை சாத்தியமற்றது.

ஜகாத் என்பது தலைக்கு இவ்வளவு என்று வசூலிக்கப்படுவதன்று. மாறாக, ஒருவரது சொத்துக்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப வசூலிக்கப்படுவதாகும்.

இவர்களின் வாதப்படி இந்த வருடத்துக்கான ஜகாத்தை ஒருவரிடம் வசூலித்து விட முடியும். ஏனெனில் அவரிடம் உள்ள இந்த வருடச் சொத்துக்களைக் கணக்கிடுவது சாத்தியமானது தான்.

ஆனால் அடுத்த வருடம் அவரது சொத்துக்கள் எவ்வளவு இருக்கும் என்பதை இந்த ஆண்டு கணக்கிட முடியுமா?

இவர்களின் வாதப்படி வருடம் முடிவடையும் போது தான் ஜகாத் கடமையாகும். அடுத்த வருடம் முடிவடையாத போது இப்போதே வசூலிப்பது அநீதியாகி விடும் அல்லவா?

இந்த வருடம் கணக்குப் பார்க்கும் போது 5 லட்சம் ஒருவரிடம் இருந்தால் அடுத்த வருடமும் அதே 5 லட்சத்திற்கு நாம் ஜகாத் வாங்க இயலுமா? அடுத்த வருடம் வருவதற்குள் அவரிடம் இருந்த 5 லட்சமும் முடிந்து போய் விட்டால் அவரிடம் வாங்கிய அந்த ஜகாத் அநீதியாக ஆகாதா?

அல்லது வருடம் முடிவதற்கு இடையில் அவர் மரணித்து விட்டால், இவர்களின் வாதப்படி அவர் அந்த வருடத்தின் ஜகாத்தைக் கொடுக்கத் தேவையில்லை. அப்படியானால் அட்வான்ஸாக வாங்கிய ஜகாத் எந்த வகையில் நியாயமாகும்?

பலவீனமான இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு வாதிக்கும் இவர்கள், ஒரு மனிதன் 10 வருட ஜகாத்தை இப்போதே வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி வழங்கினால் அதை வாங்கலாம் என்பார்களா? பத்து வருடத்தில் ஆயிரம் மடங்கு அவனது சொத்து பெருகி விட்டாலோ, அல்லது சொத்துக்கள் அழிந்து விட்டாலோ, அல்லது அவனே மரணித்து விட்டாலோ அந்த அநீதியை எப்படிச் சரி செய்வார்கள்?

இதைச் சிந்திக்கும் போது இரண்டு வருட ஜகாத்தை அட்வான்ஸாக வாங்கியது கட்டுக் கதை என்பது மேலும் உறுதியாகின்றது.

வலுப்படுத்துவதற்காக நாம் கூறிய இந்தக் காரணங்களைப் பற்றி தத்துவங்களை உதிர்க்காமல் மேற்கண்ட ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். புகாரி, முஸ்லிம் ஹதீஸின் நிலை என்ன? என்பதற்கும் பதில் சொல்ல வேண்டும்.

 

3. ஒரு வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை என்ற ஹதீஸ்

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் மற்றொரு ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.

‘ஒருவன் ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் கடக்கும் வரை அப்பொருளுக்கு ஜகாத் இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதியில் (572) இடம் பெற்ற ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று திர்மிதீ இமாம் அவர்களே அடுத்த ஹதீஸின் இறுதியில் கூறுகின்றார்கள். அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மத்யனீ உள்ளிட்ட பலர் இவரைப் பலவீனமானவர் என்று முடிவு செய்திருப்பதாகவும் திர்மிதீ இமாம் தெரிவிக்கின்றார்கள்.

மற்றோர் அறிவிப்பு

மேலும் இதே கருத்துடைய ஹதீஸ் இப்னுமாஜாவிலும், பைஹகீ 4/95லும் தாரகுத்னீ 2/90லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹாரிஸா பின் முஹம்மத் என்பார் இடம் பெறுகின்றார். இவரது செய்தி நம்பத்தக்கதல்ல என்று பைஹகீ குறிப்பிடுகின்றார்கள்.

இந்த ஹதீசும் பலவீனமானது என்பதால் இதனடிப்படையில் இவர்கள் எழுப்பிய வாதமும் விழுந்து விடுகின்றது.

மற்றோர் அறிவிப்பு

மேலும் இந்தக் கருத்துடைய ஹதீஸ் தாரகுத்னீ 2/91லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஹஸ்ஸான் பின் ஸியாஹ் என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் பலவீனமானவர் ஆவார்.

மற்றோர் அறிவிப்பு

இவை தவிர அபூதாவூத், பைஹகீ 4/95, 4/137 ஆகிய நூற்களிலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் நம்பகமானவர்கள் இடம் பெறுவதால் இது ஆதாரப்பூர்வமானது என்று நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றார். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதைக் கவனித்த அல்பானி இதிலுள்ள மற்றொரு குறைபாட்டைக் கவனிக்கத் தவறி விட்டார்.

எனவே இது பற்றி விரிவாக நாம் விளக்கியாக வேண்டும். இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.

1. அலீ

2. ஹாரிஸ் அல் அஃவர் – ஆஸிம் பின் ளமுரா

3. அபூ இஸ்ஹாக்

4. ஸுஹைர்

5. அப்துல்லாஹ் பின் முஹம்மத்

* அதாவது அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்பார் தனக்கு ஸுஹைர் கூறியதாகத் தெரிவிக்கின்றார்.

* ஸுஹைர் என்பார் தனக்கு அபூ இஸ்ஹாக் கூறியதாகத் குறிப்பிடுகிறார்.

* அபூ இஸ்ஹாக் என்பார் தனக்கு ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவர் கூறியதாகக் கூறுகிறார்.

* ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவரும் தமக்கு அலீ (ரலி) கூறியதாகக் குறிப்பிடுகின்றார்கள்.

இந்தத் தொடரில் அலீ (ரலி) அவர்களிடம் கேட்ட இருவரில் ஹாரிஸ் என்பார் பெரும் பொய்யர் என்றாலும் அவர்களிடம் செவியுற்ற மற்றொரு அறிவிப்பாளர் ஆஸிம் பின் ளமுரா என்பார் ஏற்கத் தக்கவராவார். எனவே இந்த அடிப்படையில் இது சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதாக அமைந்து விடுகின்றது. எனவே இது சரியான அறிவிப்பு தான் என்று அல்பானி கூறுகின்றார்.

ஆனாலும் அலீ (ரலி) அவர்கள் தமது சொந்தக் கூற்றாக இதைக் கூறினார்களா? அல்லது நபிகள் நாயகத்தின் கூற்றைத் தெரிவிக்கிறார்களா? இது பற்றி மேற்கண்ட ஹதீஸில் திட்டமாகக் கூறப்படவில்லை.

அலீ (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை எடுத்துக் கூறுவதாகத் தான் நினைக்கிறேன் என்று ஸுஹைர் என்பார் கூறுகின்றார். இந்த வாசகம் இந்த ஹதீஸின் துவக்கத்தில் இடம் பெறுகின்றது.

அலீ (ரலி) அவர்கள் நபியவர்களின் கூற்றை எடுத்துக் காட்டியதாக நினைக்கிறேன் என்று அலீ (ரலி) அவர்களைச் சந்தித்திராத ஸுஹைர் என்பார் யூகத்தின் அடிப்படையில் கூறுகின்றார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அதை அலீ (ரலி) அவர்கள் தெளிவாகக் கூறியிருக்க வேண்டும்.

ஆனால் ஸுஹைர் என்பார் யூகமாகக் கூறுவதால் இது நபிமொழியாக ஆகாது.

எனவே இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இக்கூற்று அலீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றே ஆகும். எனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது.

4. ஒவ்வொரு வருடமும்…

ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டாலும் ஆண்டு தோறும் அப்பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற வாதத்தை நிலைநாட்ட மற்றொரு ஹதீஸையும் எடுத்து வைக்கின்றார்கள்.

‘மூன்று காரியங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியைச் சுவைத்து விட்டார். 1. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டும் வணங்குதல். 2. ஒவ்வொரு வருடமும் தனது பொருளின் ஜகாத்தை மன விருப்பத்துடன் வழங்குதல். 3. கிழப் பருவம் அடைந்தது, சொறி பிடித்தது, நோயுற்றது, அற்பமானது ஆகியவற்றைக் கொடுக்காமல் நடுத்தரமானதை வழங்குதல் ஆகிய மூன்று காரியங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் பைஹகீ 4/95லும் தப்ரானியின் ஸகீர் என்ற நூலிலும் அபூதாவூதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது மிகவும் ஆதாரப்பூர்வமானது என்று இக்கருத்துடையவர்கள் கூறுகின்றனர் ஆனால் மேற்கண்ட மூன்று அறிவிப்புகளுமே பலவீனமான அறிவிப்புகளாகும்.

பைஹகீயின் அறிவிப்பு

(பைஹகீ 4/95)

இந்த அறிவிப்பாளர் தொடரில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பார் இடம் பெற்றுள்ளார்.

(தஹ்தீபுத் தஹ்தீப் 1/189)

இவரைப் பற்றி இப்னு மயீன் புகழ்ந்து கூறியிருக்கின்றார். ஆயினும் நஸயீ அவர்கள் இவர் பலமான அறிவிப்பாளர் அல்ல எனக் கூறுகின்றார். இவர் பொய் சொல்பவர் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை என்று முஹம்மத் பின் அவ்ன் கூறுகின்றார்.

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பவரை சிலர் நல்லவர்கள் என்று கூறியிருந்தாலும் அவர் பொய் சொல்லுபவர் என்று தெளிவான காரணம் சொல்லப்பட்டுள்ளதால் நிறையை விட குறையை முற்படுத்த வேண்டும் என்று ஹதீஸ் கலையில் வகுக்கப்பட்டுள்ள சரியான நிலைபாட்டின் அடிப்படையில் இவர் பலவீனமானவர் என்று முடிவு எடுக்க வேண்டும்.

மேற்கண்ட பைஹகீயின் அறிவிப்பில் அம்ரு பின் ஹாரிஸ் என்ற அறிவிப்பாளரும் இடம் பெறுகின்றார்.

(தஹ்தீபுத் தஹ்தீப் 8/13)

இவரைப் பற்றி விபரம் கிடைக்கவில்லை. தஹபீ அவர்கள் இவரது நேர்மை நிரூபணமாகவில்லை என்று கூறுகின்றார்.

இவர் நம்பகமானவரா? இல்யை? என்பது தெரியாத நிலையில் மேற்கண்ட ஹதீஸ் மேலும் பலவீனமடைகின்றது.

தப்ரானியின் அறிவிப்பு

தப்ரானி அவர்களின் ஸகீர் என்ற நூலில் இடம் பெற்ற ஹதீசும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் அபூதகீ அப்துல் ஹமீத் பின் இப்ராஹீம் என்பவர் இடம் பெறுகின்றார். (அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 6, பக்கம்8)

இவர் பார்வை இழந்த முதியவராக இருந்தார். இவருக்கு நினைவாற்றலும் இருக்கவில்லை. இவர் நம்பகமானவர் அல்லர். கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவரும் அல்லர் என்று அபூஹாதம் கூறுகின்றார்.

மேற்கண்ட மூன்று அறிவிப்புகளில் இது தான் பலமானது என்று சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஹதீஸ் கலை அறிஞர்கள் அபூதகீ அப்துல் ஹமீது என்பாரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

எனவே இந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று வாதிடக் கூடியவர்கள் மேற்கண்ட அறிவிப்பாளரைப் பற்றி விமர்சனத்திற்குப் பதில் கூறி விட்டு வாதிட வேண்டும்.

இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதைத் தக்க காரணத்துடன் நாம் விளக்கியுள்ளோம். அந்தக் காரணம் இருக்கும் வரை இது பலவீனமானது என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

அபூதாவூதின் அறிவிப்பு

அபூதாவூதில் இடம் பெற்ற ஹதீஸிலும் இரண்டு குறைபாடுகள் உள்ளன.

இதை அறிவிப்பாளர்கள் இடையே தொடர்பு விடுபட்ட ஹதீஸ் என்று இமாம் முன்திரி அவர்கள் கூறுகின்றார்கள்.

அபூதாவூத் அவர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறவில்லை. ‘அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடம் அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏடு இருந்தது. அதில் வாசித்தேன்’ எனக் கூறி மேற்கண்ட ஹதீஸை அபூதாவூத் பதிவு செய்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் ஏட்டை அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அபூதாவூத் வாசிக்கவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று கூறுகின்றார்.

அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது? அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற விபரம் ஏதுமில்லை.

ஒருவரின் குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள் என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிசுடைய குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாகவில்லை என்பதால் இது பலவீனமானதாகும்.

அம்ரு பின் ஹாரிசுடைய நம்பகத்தன்மையே நிரூபிக்கப் படவில்லை என்பதை முன்னரே கண்டுள்ளோம். நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன் என்று அபூதாவூத் கூறுவதிலிருந்தே இதன் பலவீனம் தெளிவாகத் தெரிகின்றது.

ஹதீஸ் நூற்கள் அச்சிடப்பட்டு பலராலும் உறுதி செய்யப்படாத அந்தக் காலத்தில், இந்த நூலை இவர் எழுதினார் என்று கூறினால், அந்த நூலாசிரியர் அதைக் கூறியிருக்க வேண்டும்; நூலாசிரியர் அனுமதியும் அளிக்க வேண்டும்.

ஏனெனில் ஒருவர் ஒரு விஷயத்தை எழுதி வைத்து விட்டு, அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று எண்ணியிருப்பார். எனவே அவரது அனுமதியில்லாமல் வேறொருவர் அதைக் கையாளும் போது அவர் வெளியிட விரும்பாத செய்திகள் அவரது பெயரால் வெளிவந்து விடக் கூடும். இது போன்ற காரணங்களால் எழுதியவரின் அனுமதி பெற்றே அவரது நூலிலிருந்து எதையும் அறிவிக்க வேண்டும் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் முடிவு செய்தனர்.

எனவே ஒருவரது நூலை இன்னொருவரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று அபூதாவூத் கூறுவதால் இது தொடர்பு அறுந்தது என்பதில் ஐயம் இல்லை.

மற்றொரு பலவீனம்

மேலும் யஹ்யா பின் ஜாபிர் என்பவர், ஜுபைர் பின் நுஃபைர் என்பவரிடமிருந்து இதை அறிவிப்பதாக அபூதாவூத் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இருவருக்கும் இடையே அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். ஜுபைர் பின் நுஃபைர் என்பாரிடம் யஹ்யா பின் ஜாபிர் எதையும் செவியுற்றதில்லை என்பதால் இது மேலும் பலவீனம் அடைகின்றது.

இந்த மூன்று ஹதீஸ்களின் நிலையும் இது தான். பலவீனமான ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு மிக முக்கியமான கடமையான வணக்கத்தைத் தீர்மானிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

நபித் தோழர் இலக்கணம்

இது தவிர இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பவராக இருந்த அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காளிரீ என்பாரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் நபித் தோழர் என்று சில நூற்களில் எழுதப் பட்டிருந்தாலும் நபித் தோழர் என்பதை முடிவு செய்வதற்குரிய அளவுகோல் இவருக்குப் பொருந்தவில்லை.

நபித் தோழர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபித் தோழர் என்று பரவலாக அறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுவதைத் தவிர வேறு விபரம் ஏதும் இல்லை.

அல்லது ‘நான் நபியிடம் கேட்டேன்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் அறிவிக்க வேண்டும். இந்த ஹதீஸில், ‘நான் நபியிடம் கேட்டேன்’ என்பது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக ‘நபிகள் நாயகம் சொன்னார்கள்’ என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவுகோலின் படியும் இவர் ஸஹாபி என்பது நிரூபணமாகவில்லை.

அல்லது ஒரு நபித் தோழரோ அல்லது ஒரு தாபியீயோ இவரைப் பற்றி நபித்தோழர் என்று சான்றளித்திருக்க வேண்டும். அப்படி யாரும் சான்றளிக்கவில்லை.

தத்ரீப் 2/672ல் நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோல் கூறப்பட்டுள்ளது.

நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோலின் படி இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாகவில்லை. எனினும் சில நூற்களில் இவரை நபித் தோழர் என்று கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை.

இப்படிப் பல குறைபாடுகள் கொண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தான் தங்கள் வாதத்தை நிறுவுகின்றனர்.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் அதை நிரூபிக்க எந்தச் சான்றையும் முன் வைக்கவில்லை.

எல்லாம் ஒவ்வொன்றாக விழுந்து விட்ட நிலையில் சம்பந்தமில்லாத ஹதீஸ்களைக் கூறி சொந்த ஊகத்தை அதில் புகுத்தி சமாளிக்க முயல்கின்றனர்.

 

5. அபூபக்ரின் ஆட்சியில்….

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிலர் ஜகாத் கொடுக்க மறுத்த போது, ‘நபிகள் நாயகத்திடம் கொடுத்து வந்த ஒரு ஆட்டுக் குட்டியை என்னிடம் தர மறுப்பார்களானால் அவர்களுடன் நான் போரிடுவேன்’ என்று குறிப்பிட்டார்கள்.

(புகாரி 1400, 1457, 6924, 7285)

இதையும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றாலும் இந்த ஹதீஸில் இவர்களின் வாதத்தை நிலை நாட்ட ஒரு சான்றும் இல்லை.

‘நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் கொடுத்து வந்த’ என்ற சொற்றொடர் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தது என்ற கருத்தைத் தான் தரும், ஒரு தடவை கொடுத்திருந்தால் கொடுத்து வந்த’ என்ற சொல்லை அபூபக்ர் (ரலி) பயன்படுத்தியிருப்பார்களா? என்பது இவர்களின் வாதம்.

இந்த வாதம் உச்சக்கட்ட அறியாமையின் வெளிப்பாடாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தனர் என்பது உண்மை தான். ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஜகாத் என்று கூறினால் தான் தொடர்ச்சி என்பது இல்லாமல் போகும்.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்று கூறினால் நமது வாதத்தின் படியும் தொடர்ச்சியாகக் கொடுத்து வர முடியும்.

இன்று ஜகாத்தாக ஓர் ஆட்டைக் கொடுத்தவுடன் மேலும் ஆடுகள் பெருகலாம். பெருகிய ஆட்டுக்காக மீண்டும் கொடுக்கலாம். மீண்டும் பெருகலாம். அதற்காகவும் மீண்டும் கொடுக்க வேண்டி வரும். ஒரு பொருளுக்கு ஒரு தடவை கொடுத்தாலும் பொருளாதாரம் பெருகுவதன் காரணமாக தொடர்ச்சியாக ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

மேலும் இவர்கள் வாதத்தின் படி பார்த்தாலும் நமக்குத் தான் மறுப்பு சொல்கிறார்களே தவிர தங்கள் வாதத்தை இந்த விளக்கத்தின் மூலம் அவர்களால் நிலை நாட்ட முடியாது. ஏனெனில் தொடர்ச்சியாக என்பது வருடந்தோறும் என்பதை மட்டும் குறிக்காது. மாதந்தோறும் என்று கூட பொருள் கொள்ளலாம். வாரந்தோறும் என்றும் பொருள் கொள்ளலாம். ஏன்? தினந்தோறும் என்றும் பொருள் கொள்ளலாம்.

எனவே வருடந்தோறும் என்பதை எதனடிப்படையில் இந்த ஹதீஸில் இவர்களாக நுழைத்தார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

 

6. கால்நடைகளுக்கான ஜகாத்

தக்க ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் தமக்குரிய ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

இந்த வகையில் அவர்களின் மற்றொரு ஆதாரம் கால்நடைகளுக்கான ஜகாத் பற்றிய ஹதீஸைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைப்பதாகும்.

ஒரு மனிதனிடம் நாற்பது முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஜகாத் ஒரு ஆடு ஆகும். 121 முதல் 200 வரை இரண்டு ஆடுகளாகும். 201 முதல் 300 வரை மூன்று ஆடுகளாகும். 300க்கு மேல் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் ஒரு ஆடு வீதம் ஜகாத் ஆகும்.

இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்களையும் தங்கள் கருத்தை நிரூபிக்கும் ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர்.

அவர்கள் தமது வாதத்தை எவ்வாறு எடுத்து வைக்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

மேற்கண்ட சட்டத்திலிருந்து இரண்டு எதிர் கேள்விகளை நம்மிடம் கேட்கின்றனர்.

1. ஒருவனிடம் 40 ஆடுகள் இருந்து அதற்குரிய ஜகாத்தை அவன் கொடுத்து விட்டான். சில நாட்களில் இன்னோர் 40 ஆடுகள் அவனுக்குக் கிடைக்கின்றன. இந்த 40 ஆட்டுக்கு ஓர் ஆடு ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்கள் என்றால் 80க்கு 2 ஆட்டை கொடுத்தவர்களாவீர்கள். இது 120க்கு 1 என்ற ஹதீசுக்கு முரணாக இருக்கிறது.

2. இரண்டாவதாக வந்த 40க்கு கொடுக்கத் தேவையில்லை என்று நீங்கள் கூறினால் முதல் 40 மட்டும் தான் சுத்தமாகி இருக்கின்றது. இரண்டாவதாக வந்த 40 எப்படி சுத்தமாகும்? என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர். நாம் என்ன சொல்கிறோம் என்பது புரியாததால் எழுந்த கேள்வி இது.

நாற்பது ஆடு இருக்கும் போது ஒருவன் ஓர் ஆட்டைக் கொடுத்தான் என்றால் அது நாற்பது ஆட்டுக்குரிய ஜகாத் அல்ல. 40 முதல் 120 வரையுள்ள ஒரு ஸ்டேஜுக்கான ஜகாத் ஆகும். எனவே 120 வரை அவன் ஏதும் கொடுக்கத் தேவையில்லை.

மேலும் ஒவ்வொரு நூறுக்கும் ஓர் ஆடு என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது. அதையும் தமது இஷ்டத்துக்கு வளைத்து வியாக்கியானம் கொடுத்து தங்கள் வாதத்தை நிலைநாட்ட முயல்கின்றனர்.

ஒருவனிடம் முன்னூறு ஆடுகள் இருந்தன. அதற்கு அவன் மூன்று ஆடுகளைக் கொடுத்து விட்டான். அதன் பின்னர் நூறு ஆடு கிடைக்கின்றது. இப்போது என்ன செய்ய வேண்டும்? எனவும் கேட்கின்றனர். ஏற்கனவே 300க்குக் கொடுத்து விட்டதால் அதிகப்படியான நூறுக்கு ஓர் ஆட்டைக் கொடுத்தால் மேற்கண்ட ஹதீஸ் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப் படுகின்றது.

இதில் அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இதிலிருந்து இவர்கள் தமது வாதத்தை, வருடந்தோறும் திரும்பத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்பதை எப்படி நிலைநாட்டுவார்கள்? என்பது தான் முக்கியமான கேள்வியாகும்.

ஜகாத், பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்பதை நாம் துணை ஆதாரமாகத் தான் காட்டியுள்ளோம். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு மேற்கண்ட சட்டத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை வசதியாக மறந்து விடுகின்றார்கள்.

வருடா வருடம் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் எனக் கூறுவோர் அதற்கான ஆதாரத்தைக் காட்டுவதை விடுத்து நமக்கு மறுப்பு தான் சொல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பது அவசியம் என்ற வாதத்துக்கு, திருக்குர்ஆனிலும், ஏற்கத்தக்க நபிமொழிகளிலும் எந்தச் சான்றும் இல்லை என்பதில் ஐயம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.