Tamil Bayan Points

ஒருவரை எந்த அளவுக்கு நம்பலாம்?

கேள்வி-பதில்: பண்பாடுகள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

ஒருவரை எந்த அளவுக்கு நம்பலாம்?

யாரையும் நூறு சதவிகிதம் நம்புமாறு இஸ்லாம் கூறவில்லை. வெளிப்படையான செயல்களை வைத்தும் தெரிந்தவர்களிடம் விசாரித்தும் ஒருவரை மனதளவில் நம்பலாம். என்றாலும் நம்பிக்கை இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அந்த அளவு எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் காட்டும் வழியாகும்.

அதாவது மனதில் தான் நம்பிக்கையை வைத்துக் கொள்ள வேண்டும். நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாதது போல் தான் அனைவரிடமும் நடந்து கொள்ள வேண்டும்.

கடன் கொடுத்தால் எழுதிக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. என்மீது நம்பிக்கையில்லையா என்று யாரும் கேட்கக் கூடாது.

எழுதும் வாய்ப்பு இல்லாவிட்டால் அடைமானமாக ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ள வெண்டும் எனவும் இஸ்லாம் கட்டளையிடுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடைமானம் குறித்து பல வழிகாட்டுதலை வழங்கியுள்ளனர். ஒருவர் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்றால் அடைமானம் என்ற தலைப்புக்கே வேலையில்லை.

யூதரிடம் கடன் வாங்கிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை அடைமானமாகக் கொடுத்தார்கள். என் மீது நம்பிக்கையில்லையா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கவில்லை.

ஒரு பொருள் தனக்குரியது என்று வாதிடுபவன் அதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்து உள்ளனர். யாரையும் நம்பி ஏமாந்து விடாமல் ஆதாரங்களைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

பல்வேறு விஷயங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. எழுதி ஒப்பந்தம் போட்டுக் கொள்வதே வாய் வார்த்தையில் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்பதற்குத் தான்.

அதுபோல் பல விஷயங்களுக்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இஸ்லாம் கூறுகிறது. முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடாக இருந்தால் சாட்சிகளுக்கு வேலை இல்லை.

தீர விசாரித்துக் கொள்ளுமாறு இஸ்லாம் கூறுவதும் இதே காரணத்துக்காகத் தான்.

விபச்சாரம் செய்ததாக குற்றம் சுமத்த நான்கு சாட்சிகள் வேண்டும் என்பதும் இதே காரணத்துக்காகத் தான்.

இஸ்லாம் கூறும் இந்த அறிவுரையை உலக மக்கள் சரியாகக் கடைப்பிடித்தால் மோசடிப்புகார்களுக்கு வேலையில்லை. ஏமாறத் தேவையில்லை.

இவர் தொழுகையாளி என்பதற்காக நம்பி அதைக் கொடுத்தேன். இவர் தாடி வைத்துள்ளார் என்பதற்காக இதைக் கொடுத்தேன்; இவர் தவ்ஹீத்வாதி என்று நம்பி மோசம் போய்விட்டேன்; இவர் சொந்தக்காரர் என்பதால் நம்பினேன் ஏமாற்றிவிட்டான் என்றெல்லாம் ஏமாளிகள் கூட்டம் பெருகுவதற்கு காரணம் இஸ்லாம் கூறும் இந்த போதனையைப் புறக்கணித்தது தான்.

எவரையும் நம்பி ஏமாறக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்