Tamil Bayan Points

கடனாளி ஹஜ் செய்யலாமா?

கேள்வி-பதில்: பொருளாதாரம்

Last Updated on November 12, 2022 by Trichy Farook

கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா?

பதில்:

கடன் என்பது இரண்டு வகைப்படும். வாழ்க்கைத் தேவைக்காக இல்லாமல் வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக கடன் வாங்குவது ஒரு வகை.

ஒருவர் ஒரு இலட்ச ரூபாய் கடன் வாங்கி வியாபாரம் செய்கின்றார். ஆனால் அவரிடம் இரண்டு இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களோ, பொருட்களோ இருக்கின்றது என்றால் இவர் கடனாளி ஆக மாட்டார். இவருக்கு ஹஜ்ஜுக்குச் செல்லும் சக்தி இருந்தால் ஹஜ் செய்தாக வேண்டும். அதாவது வாங்கிய கடனை நிறைவேற்றுவதற்கும், ஹஜ் செய்வதற்கும் போதிய வசதி இருந்தால் அவருக்கு ஹஜ் கடமையாகும்.

கடன் வாங்குவதில் மற்றொரு வகை வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்குவதாகும். உதாரணமாக சொந்த வீடு இல்லாமல் வீடு வாங்குவதற்காக கடன் வாங்குவதைக் கூறலாம். இது போன்ற கடனாளிக்கு முதலில் கடனை நிறைவேற்றுவது தான் கடமை.

கடன் இருந்தும் அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஹஜ் கடமையில்லை.

ஹஜ்ஜைப் பொறுத்த வரை மற்ற கடமைகளைப் போலல்லாமல் யாருக்குச் சக்தியிருக்கின்றதோ அவருக்குத் தான் கடமையாகும். இதை அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தில் தெரிவிக்கின்றான்.

3:97 فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ – وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும். யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

(அல்குர்ஆன் 3:97) 

ஒருவர் வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்கியிருக்கும் நிலையில் ஹஜ் அவருக்குக் கடமையாகாது. வாங்கிய கடனைச்செலுத்துவது தான் அவருக்கு முதல் கடமை.

“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. கடனைத் தவிர!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: முஸ்லிம்-3832 

இந்த ஹதீஸின் அடிப்படையில் கடன் என்பது இறைவனிடம் மன்னிக்க முடியாத பாவமாக உள்ளது.  எனவே வாழ்க்கைத் தேவைக்காக வாங்கிய கடனை நிறைவேற்றி விட்டுத் தான் ஹஜ் செய்ய வேண்டும்.