Tamil Bayan Points

கொள்கையே தலைவன்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

Last Updated on September 15, 2023 by Trichy Farook

கொள்கையே தலைவன்

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 3:31)

இந்த வசனம் அல்லாஹ்வின் நேசத்தையும், அவனது தூதரைப் பின்பற்றுவதையும் வலியுறுத்துகின்றது.

قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ‌‌ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ‏

“அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 3:32)

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட இவ்வசனம் ஆணையிடுகின்றது.

وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ‌ ۚ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ؕ‏

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

(அல்குர்ஆன்: 4:69)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதால் அவர்களுடன் சுவனத்தில் சேர்ந்திருக்கின்ற பாக்கியம் கிடைக்கும் என இவ்வசனம் தெரிவிக்கின்றது.

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ

“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் நட்டத்தை அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 9:24)

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விட மற்றவர்களை நேசத்திற்குரியவர்களாக ஆக்கக்  கூடாது என்று இவ்வசனம் கட்டளையிடுகின்றது.

நபித்தோழர்கள் அல்லாஹ் கூறுகின்ற அடிப்படையில் அவனது தூதரைப் பின்பற்றினார்கள்; கட்டுப்பட்டார்கள்; பிரியம் கொண்டார்கள்; தங்கள் உயிர், உடல், உடைமை அத்தனையையும் அவர்கள் அவனது தூதருக்காக அர்ப்பணம் செய்தார்கள்.

அப்படிப்பட்ட தோழர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹத் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி கிடைக்கின்றது. அவ்வளவு தான்! அது அவர்களுடைய உள்ளங்களில் பெரும் அதிர்வலைகளையும், அதிர்ச்சிகளையும் ஏற்படுத்தியது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே இறந்து போய் விட்டார்கள். இனிமேல் நமக்கு இந்த உலகத்தில் என்ன இருக்கின்றது? என்று நபித் தோழர்கள் தம்மையே மறந்தார்கள். இனிமேல் வாழ்வதில் அர்த்தமேது? என்ற விரக்தி நிலைக்கும், வெறுமை உணர்வுக்கும் சென்று விட்டார்கள். இதைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் (அல்குர்ஆன்: 3:144) வது வசனத்தை அருளுகின்றான். தூதர் போய் விட்டதால் தூதுச் செய்தி போய் விடாது என்று உணர்த்துகிறான்.

وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ  ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ؕ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌ؕ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا‌ ؕ وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

(அல்குர்ஆன்: 3:144)

இறைத்தூதர் இறந்து விட்டால் அவர் கொண்டு வந்த கொள்கை இறந்து விடாது. அது சத்தியக் கொள்கை என்று அல்லாஹ் பிரகடனம் செய்கிறான். இறைத்தூதர் இருந்தாலும், இறந்தாலும் இந்தக் கொள்கை இருக்கும் என்று அவர்களுக்கு உணர்த்துகின்றான். உஹத் போர்க் களத்தில் அவர்களுக்கு இந்தப் பாடத்தை நடத்தி விடுகின்றான்.

உண்மையில், எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குரிய ஓர் ஒத்திகை மரணத்தை நபித்தோழர்களுக்கு நடத்திக் காட்டினான். விமான நிலையங்களில், விமான நிலைய ஊழியர்களுக்குத் தெரியாமல், எதிரிகள் தாக்குதல் நடத்துவது போன்று ஒரு போலி தாக்குதலை ஆட்சியாளர்களே நடத்துவார்கள். இந்த செயற்கைத் தாக்குதலின் போது விமான ஊழியர்கள் எப்படி செயல்படுகின்றார்கள் என்று பார்ப்பார்கள்.

அதுபோன்று உஹத் போர்க்களத்தில் இப்படி மரண ஒத்திகையை நடத்தி  நபித்தோழர்களுக்கு அல்லாஹ் ஒரு பாடமெடுத்து விடுகின்றான். இந்தப் பாடம் அவர்களுக்கு உஹதுக்குப் பிறகு உடனே பலனளிக்கவில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு பயனளித்தது.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்த போது) உமர் (ரலி) எழுந்து, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் – நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே – தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும், கால்களையும் துண்டிப்பார்கள்’ என்று கூறினார்கள்.

அபூபக்ர் (ரலி) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, ‘தங்களுக்கு என் தந்தையும், என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்ய மாட்டான்’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். ‘(நபியவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்’ என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) பேசியபோது உமர் (ரலி) அமர்ந்தார்கள்.

அப்போது, அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிவிட்டு, ‘முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர் அல்லாஹ் (என்றும்) உயிருடன் இருப்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்’ என்று கூறினார்கள்.

மேலும், ‘நபியே! நீங்களும் இறப்பவர் தாம்; அவர்களும் இறப்பவர்களே’ என்னும் (அல்குர்ஆன்: 39:30) ஆம் இறை வசனத்தையும், ‘முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்’ என்னும் (அல்குர்ஆன்: 3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.

நூல்: புகாரி-3670 

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்ற கருத்தில் உமர் (ரலி) அவர்கள் மயங்கிக் கிடந்த வேளையில் உஹத் தொடர்பாய் அருளப்பட்ட (அல்குர்ஆன்: 3:144) வசனத்தை அபூபக்ர் (ரலி) எடுத்துக் காட்டுகின்றார்கள். அவ்வளவு தான். உமர் (ரலி) உட்பட அத்தனை பேர்களையும் அது உசுப்பி விட்டது என்று சொல்வதை விட அவர்களை உயிர் கொடுத்துத் தட்டி எழுப்பியது என்று சொல்லாம். அன்று அபூபக்ர் (ரலி) அந்த வசனத்தை மட்டும் ஓதிக் காட்டவில்லை என்றால் உயரிய உன்னதக் கொள்கை கால் நூற்றாண்டைத் தாண்டுவதற்கு முன்னால் முடிவுக்கு வந்திருக்கும்.

உண்மையில், இஸ்லாம் நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பிறகும் வளர்ச்சியை நோக்கியே பயணத்தைத் தொடர்கிறது. இந்த வசனத்திலிருந்தும், இது இறங்கிய பின்னணியிலிருந்தும் நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் போது அபூபக்ர் (ரலி) பொருத்தமாக அந்த வசனத்தைக் கையாண்ட சம்பவத்திலிருந்தும் பெற வேண்டிய பாடமும், படிப்பினையும் என்ன?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தால் தான் மார்க்கம்; இல்லையேல் மார்க்கம் இல்லை என்று யாரும் சென்று விடக் கூடாது என்று இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது.

ஏகத்துவக் கொள்கையில் ஒரு தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவர் இறந்து போகலாம்; அல்லது  பொறுப்பிலிருந்து விலகிப் போகலாம்; அல்லது கொள்கையிலிருந்து விலகிப் போகலாம்; அல்லது அவரது குற்றச்செயலுக்காக விலக்கப்படலாம்.

இது மாதிரியான கட்டங்களில் இன்னார் இருந்தால் நான் இருப்பேன்; இல்லையென்றால் இருக்க மாட்டேன் என்று ஒருவர் கருதினால் அவர் ஏகத்துவக் கொள்கையில் இருப்பவர் கிடையாது, அத்தகையவர்களுக்குக் கொள்கை தலைவன் கிடையாது, குருட்டு நம்பிக்கை தான் தலைவன். அத்தகையவர்கள் தனி நபர் வழிபாட்டில் தடம் புரண்டவர்கள். தவ்ஹீதில் புடம் போட்டவர்கள் அல்லர் என்பது தான் இதிலிருந்து கிடைக்கும் பாடமும் படிப்பினையுமாகும்.

ஏகத்துவக் கொள்கையில் இருக்கின்ற நாம் இந்த அடிப்படையைப் புரிந்து பயணிப்போமாக!