Tamil Bayan Points

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா?

கேள்வி-பதில்: இதர சட்டங்கள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா?

நாம் செய்த சத்தியத்தை முறித்தால் மார்க்கம் அதற்குரிய பரிகாரத்தைக் கற்றுத் தந்துள்ளது. சத்தியத்தை முறித்தவர்கள் இதைச் செய்வது அவர்களின் கடமை.

لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُمُ الْأَيْمَانَ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (89)5

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் (5 : 89)

சத்தியத்தை முறித்தவர்கள் பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு உடையளிக்க வேண்டும். இதற்கு இயலாவிட்டால் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். இதுவே அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பரிகாரம்.

பாவமான காரியத்தைச் செய்யமாட்டேன் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறியவர் பிறகு அந்த காரியத்தைச் செய்தால் சத்தியத்தை முறித்துவிடுகிறார். இப்போது செய்த பாவத்துக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்பதுடன் சத்தியத்தை முறித்ததற்காக பரிகாரமும் செய்ய வேண்டும்.

சத்தியத்தை முறித்து அதற்கான பரிகாரமும் செய்து விட்டதால் அதன் பின்ன அவர் அதே பாவத்தை எத்தனை முறை செய்தாலும் அந்தப் பாவத்தைச் செய்தவராவாரே தவிர சத்தியத்தை முறித்தவராக மாட்டார். ஏனெனில் சத்தியத்தை முன்னரே அவர் முறித்து விட்டு அதற்கான பரிகாரத்தையும் செய்து விட்டார்.