Tamil Bayan Points

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

Last Updated on September 16, 2023 by Trichy Farook

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது.

சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற – பாவச்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தம் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இன்றைக்கு நிகழும் பாவச் செயல்கள் அனைத்தும் புலன்களின் தூண்டுதலின் பெயராலேயே நடைபெறுகின்றன.

விபச்சாரம், திருட்டு, கொலை, பாலியல் சீண்டல்கள், அவதூறு என அத்தனைக்குமான அடிப்படை புலன்களின் தூண்டுதலாகவே உள்ளது. இத்தீமைகள் புரிவதிலிருந்து விலக விரும்புவோர் புலன்களின் தூண்டுதலுக்குப் பலியாகி விடாமல் அவைகளை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பழக வேண்டும். 

அனைத்து புலனடக்கம் குறித்தும் அல்குர்ஆனும், அண்ணல் நபியவர்களும் போதிக்கின்றார்கள். எந்தெந்த புலன்களால் தனக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் அதிகக் கேடுகள் உண்டாகுமோ அவற்றைக் கண்டிப்பாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இஸ்லாமிய மார்க்கம் அறிவுறுத்துகிறது.

மறை உறுப்பும் – நாவும்!

புலனடக்கம் பற்றி பேசினால் அதில் தவிர்க்க முடியாத இரு உறுப்புகள் நாவும், மறை உறுப்புமாகும். இவ்விரண்டு உறுப்புக்களை அடக்க வேண்டும். ஆனால் அது அத்தனை எளிதல்ல. யார் இவ்விரண்டு உறுப்புகளின் கட்டுப்பாட்டிற்குள் செல்லாமல் இவற்றைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றாரோ அவர்கள் சொர்க்கம் செல்ல நபி (ஸல்) அவர்கள் பொறுப்பேற்கின்றார்கள்.

مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الجَنَّةَ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளதற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளதற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருக்கு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன். 

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி),
நூல்: புகாரி-6474 

நாவையும், மறை உறுப்பையும் அடக்குவது எவ்வளவு சிரமம் நிறைந்த காரியம் என்பதை இதிலிருந்து அறியலாம். இவ்விரு உறுப்புக்களாலும் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் தீமைகளை யாராலும் பட்டியலிட முடியாது. மனித சமுதாயத்திற்கு எழுதப்பட்ட அறிவுரை நூல்கள் பலவும் இவற்றை மையப்படுத்தியதாகவே உள்ளன.

விபச்சாரத்திற்கு முறையான சட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற உரிமை (?) குரல்கள் எழுப்படுவதிலிருந்து மனிதர்கள் எதன் பிடியில் இருக்கிறார்கள்? எதன் கட்டுப்பாட்டில் இயங்குகிறார்கள் என்பதை விளங்கலாம். குடும்பத் தகராறு, சொத்துப் பிரச்சனை, ஏன் கொலைக்கான காரணமாகக் கூட நாவும், அதனிலிருந்து வெளிப்படும் தடித்த வார்த்தைகளும் காரணமாகிறது என்பதை அன்றாடம் நாளிதழ்களில் வெளிவரும் செய்திகள் உணர்த்துகின்றன.

எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறை உறுப்பையும், நாவையும் கட்டுப்படுத்திக் கொள்வோருக்கு சொர்க்கத்திற்கான உத்தரவாதத்தை நான் அளிக்கின்றேன் என்கிறார்கள். இதிலிருந்து இவ்விரு புலனடக்கத்தின் மகிமையை அறியலாம். பின்வரும் செய்தியும் இவ்விரு புலன்களின் எல்லை மீறலை அடக்கத் தவறுவதால் ஏற்படும் மறுமை விளைவை கடுமையாக எச்சரிக்கின்றது.

سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الجَنَّةَ، فَقَالَ: «تَقْوَى اللَّهِ وَحُسْنُ الخُلُقِ»،
وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ، فَقَالَ: «الفَمُ وَالفَرْجُ»

மனிதனை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது இறையச்சமும், நன்னடத்தையுமே என்று பதிலளித்தார்கள்.

நரகில் எது மனிதனை அதிகம் நுழைவிக்கும்? என்று கேட்கப்பட ‘நாவும் மறை உறுப்பும்’ என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: திர்மிதீ-2004 (1927)

பல இளைஞர்கள் தங்கள் பிரகாசமான எதிர்காலத்தைப் பாழாக்குவதன் பின்னணியில் இவ்விரு புலன்களுக்கும் மிக முக்கிய பங்குள்ளது. அந்நியப் பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசாக்கூடா பேச்சுக்களைப் பேசி இன்பம் அடைவதற்காக கேர்ள் பிரண்ட் என்ற நாகரீக பெயரில் அந்நியப் பெண் தொடர்பைப் பல இளைஞர்கள் விரும்புகிறார்கள். அப்படி கேர்ள் பிரண்ட் வாய்க்கப் பெறாதவர்கள் அதற்காகக் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கிறார்கள்.

சிறிது நேர சிற்றின்பத்திற்காக உடலின்ப மோகத்தில் மூழ்கி தங்கள் எதிர்காலத்தை வீணாக்குகிறார்கள். ஒரு காலத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் மாணவச் செல்வங்கள் பைகளை வெளியில் இருந்தபடியே வீட்டுக்குள் வீசி விட்டு விளையாடச் செல்வார்கள்.

வியர்க்க விறுவிறுத்து ஓடியாடி விளையாடி மகிழ்வுறுவார்கள். இருள் சூழவும் விளையாட்டை முடித்து வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு நன்கு உறங்குவார்கள். இது யாவும் இரவு ஒன்பது மணிக்குள்ளாக நடந்து முடிந்து விடும். ஆனால் இன்று நள்ளிரவு தாண்டியும் உறங்காமல் போர்வைக்குள் போனை நோண்டுவதில் சுகம் காணும் இளைஞர்களை அதிகம் அறிகிறோம்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தின் தகவல் பரிமாற்ற சாதனங்களில் ஒன்றாக விளங்குவது ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்கள். இதில் தான் இன்றைய இளைஞர்கள் மூழ்கி கிடப்பதை பார்க்கின்றோம், எனவே இவற்றை பெற்றோர்கள் தங்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்.

அவதூறைப் பரப்புவதற்கு முன்னால் அவதானியுங்கள்!

முன்னர் அவதூறை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அவர்களின் செவிகள் மட்டுமே சாதனமாக இருந்தது. ஆனால் இன்று ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் துணை நிற்கின்றன. இந்த வலைத்தளங்கள் வாயிலாக ஒரு செய்தியை உலகம் முழுவதும் பரப்புவது மிக எளிதான காரியமே.

இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குகள் வைத்திருக்கும் சிலர் தங்களுக்கு வரும் செய்தியைப் பிறருக்குப் பரப்புவதற்கு முன்னால் அந்தச் செய்தி உண்மையா? பொய்யா? என்பதை அவதானிப்பது கிடையாது. தனிமனிதர்கள் மீது கூறப்பட்ட பொய்யான செய்தி ஒருபுறம் இருக்கட்டும். நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் வந்தால் கூட அவை ஹதீஸ்கள் என்பதைப் போன்று வேகமெடுத்து பரப்புவதைக் காண்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம்-6 

எந்தச் செய்தியாயினும் நாம் பரப்புவதற்கு முன்னால் உண்மையான செய்தியா என்று அவதானித்துப் பார்க்க வேண்டும். இல்லையேல் நாம் இறைவனிடம் பொய்யன் என்ற ஸ்தானத்தைப் பெற்றுவிடுவோம்.

முகப் புத்தகமா? முகஸ்துதி பெட்டகமா?

மேலும், சிலர் தன்னைப் பாராட்ட வேண்டும், “முகநூல் போராளி’’ என்று தன்னை மெச்ச வேண்டும், தான் பதியும் பதிவின் மூலம் தனது அறிவைப் புகழ வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் உலா வரக்கூடிய நபர்களையும் இன்றைய தலைமுறையில் பார்க்கின்றோம், இதனால் என்ன பயன்?

ஒரு தகவலை ஒரு நொடியில் உலகின் மூலை முடுக்கிற்கு எடுத்துச் செல்லும் சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற நவீன சாதனங்களை வைத்து தத்தமது சமுதாயம் சார்ந்த  நலத்திட்ட செய்திகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற இன்னபிற அனுமதிக்கப்பட்ட முறையில் இளைஞர்கள் பயன்படுத்தி சமூக முன்னேற்றத்திற்கும், நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். மார்க்கம் கற்றுத்தந்த வகையில் இவ்வுலகில் வாழ்வோமாக.!