Tamil Bayan Points

சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்யலாமா?

கேள்வி-பதில்: பித்அத்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்யலாமா?

சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் இரத்த தானம் செய்து வருகின்றனர். நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத வணக்கத்தையும், வழிபாடுகளையும் நன்மை என்று கருதி செய்வது தான் பித்அத்தாகும்.

‘நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில் அதில் இல்லாததைப் புதிதாக யார் உண்டாக்குகின்றானோ அது நிராகரிக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 2697

வணக்க வழிபாடுகள் அல்லாத ஏனைய உலக விஷயங்களை பித்அத் என்று கூறக் கூடாது. அப்படிப் பார்க்க ஆரம்பித்தால் சைக்கிள் ஓட்டுவதையும், கார் ஓட்டுவதையும் பித்அத் என்று கூற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். இந்த அடிப்படை வித்தியாசத்தை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மறுமையில் கூடுதல் நன்மை கிடைக்கும் என்று கருதி யாரும் சுதந்திர தினத்தில் இரத்ததானம் செய்வதில்லை.

முஸ்லிம்கள் தேசநலனில் அக்கறை இல்லாதவர்கள் என்று விதைக்கப்பட்டுள்ள நச்சுக் கருத்தை நீக்கவும், இந்த நாட்டுக்குக் அன்னியர்கள் அல்ல என்பதைக் காட்டவும் தான் விடுதலை நாளைத் தேர்வு செய்து இரத்ததானம் செய்கிறார்கள்.

மேலும் சுதந்திர தினம் என்பது எந்த மதத்தின் பண்டிகையும் அல்ல. நாடு சுதந்திரம் அடைந்ததைக் குறிக்கும் ஒரு நாள் தான். வணக்க வழிபாடுகள் சம்பந்தமில்லாத ஒரு செயலை பித்அத் என்று கூறுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.