Tamil Bayan Points

தவறான புரிதல்கள்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

Last Updated on September 15, 2023 by Trichy Farook

தவறான புரிதல்கள்

தற்போதுள்ள காலச் சூழ்நிலையில் எங்கு நோக்கினும்  சரியான புரிதல் இல்லை (மிஸ் அன்டஸ்டேன்டிங்), ஒத்துழைப்பு இல்லை என்பன போன்ற வார்த்தைகளை நாம் அதிகம் கேள்விப்படுகின்றோம்.

குறிப்பாகக் கணவன் மனைவி, மாமியார் மருமகள், அண்ணன் தம்பி, அக்கா தங்கை, தாய் மகள், சக நண்பர்களுக்கு மத்தியில், சக ஊழியர்களுக்கு மத்தியில், முதலாளி, தொழிலாளி போன்ற எல்லா உறவுகளுக்கு மத்தியிலும் பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருப்பது மேலே நாம் குறிப்பிட்ட தவறான புரிதல் தான்.

எதையுமே நேரான சரியான பார்வையில் பார்க்காமல் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது சமூகத்திற்கோ பாதகமாகவே உற்று நோக்குவதின் விளைவு தான் தவறான புரிதல். அதாவது பிறரைத் தவறாக எடை போடுவது.

இவ்வாறு எந்தப் பிரச்சனையையுமே தவறாக உற்று நோக்குபவர்களிடத்தில் நாம் எவ்வளவு தான் பக்குவமாக எதார்த்தமாக பேசினாலும் அதற்கான காரண காரியத்தை அவர்கள் தேடுவார்கள். இது போன்ற நபர்களிடத்தில் நாம் பேசுவதை விட பேச்சைக் குறைப்பது மிகவும் நல்லது.

ஏனெனில் ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும் என்று கூறுவார்கள். அதுபோல நம்மைப் பற்றி அவர்கள் தவறாகப் புரிந்ததை நாம் விளக்க முற்படும் போது அதிலும் ஆயிரத்தெட்டு குறைகளைக் கண்டுபிடிப்பார்கள். இதன் விளைவாகப் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்காமல் தொடர்ந்து கொண்டே செல்லும் நிலை ஏற்படுகின்றது. இது போன்ற மூடர்களைச் சந்திக்க நேரிட்டால் ஸலாமுடன் நிறுத்திக் கொண்டு அவர்களைப்  புறக்கணிக்குமாறு திருமறை நமக்குப் போதிக்கின்றது.

25:63 وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا‏

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும் போது ஸலாம் என்று கூறிவிடுவார்கள்.

(அல்குர்ஆன்: 25:63)

பெருமை, கர்வம் கொண்டு பிறரைத் தாழ்வாகக் கருதாமல் எல்லோரிடத்திலும் பழக வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுவிட்டு, மூடர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இறைவன் நமக்கு விளக்குகின்றான்.

وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَاۤ اَعْمَالُنَا وَلَـكُمْ اَعْمَالُـكُمْ سَلٰمٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِى الْجٰهِلِيْنَ

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை நாங்கள் விரும்பமாட்டோம் எனவும் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 28:55)

மேற்கண்ட வசனத்தில் நம்மைப் பற்றிய அவப்பேச்சுக்களைப் பிறர் பேசும் போது அதற்காக வருந்தாமல் அதை அலட்சியப்படுத்துமாறு நமக்கு திருமறைக் குர்ஆன் போதிக்கின்றது. ஆனால் நம்மில் பலரோ அதை நினைத்து நினைத்து வாடுவதைக் காண்கின்றோம். இது போன்ற சமயங்களில் நாம் எவ்வாறெல்லாம் நடக்க வேண்டும் என்பதை நமக்கு  இஸ்லாம் போதிக்கின்றது

பெருந்தன்மையை மேற்கொள்ள வேண்டும்

خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِيْنَ‏

பெருந்தன்மையை மேற்கொள்வீராக நன்மையை ஏவுவீராக அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக 

(அல்குர்ஆன்: 7:199)

பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.

وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ‏
وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا‌ۚ وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ‏

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே பகைமையை தடுப்பீராக! எவருக்கும் உமக்கும் பகைமை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகிவிடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப்பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர மற்றவர்களுக்கு இது வழங்கப்படாது. 

(அல்குர்ஆன்: 41:34,35)

தான் தவறாகப் புரிந்ததை சம்பந்தப்பட்ட நபரிடத்தில் வெளிப்படுத்தி பேசும் போது தவறு செய்யாத அந்த நபரின் மனம் புண்படும் காட்சியை நாம் காண்கின்றோம். தான் தவறாகப் புரிந்ததை வெளிப்படுத்திப் பேசுவது சம்பந்தப்பட்டவருக்கு எந்த அளவு காயத்தை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள்; (அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள்.

(நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

நூல்: முஸ்லிம்-5006 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் ‘நிறுத்து! நிறுத்து!’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்’’ என்று கூறினார்கள்.  
எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.

பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  அழைத்து “இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்‘’ என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம்  கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதை, அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள். 

நூல்: முஸ்லிம்-480 

مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِامْرَأَةٍ تَبْكِي عِنْدَ قَبْرٍ، فَقَالَ: «اتَّقِي اللَّهَ وَاصْبِرِي» قَالَتْ: إِلَيْكَ عَنِّي، فَإِنَّكَ لَمْ تُصَبْ بِمُصِيبَتِي، وَلَمْ تَعْرِفْهُ، فَقِيلَ لَهَا: إِنَّهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَتْ بَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ تَجِدْ عِنْدَهُ بَوَّابِينَ، فَقَالَتْ: لَمْ أَعْرِفْكَ، فَقَالَ: «إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى»

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அடக்கவிடம் (கப்று) அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு!’’ என்றார்கள். அதற்கு அப்பெண், ‘‘என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை’’ என்று – நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல் – கூறினாள்.

அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். -அங்கே நபியவர்களுக்கு காவலாளிகள் எவரும் இருக்கவில்லை- நான் உங்களை (யாரென) அறியவில்லை’’ என நபி (ஸல்) அவர்களிடம் கூறினாள். “பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி-1283 

‘எனக்கு வந்த சங்கடம் உனக்கு வந்தால் தெரியும்’ என்று கூறிய உடன் அதற்குப் பிறகு அல்லாஹ்வின் தூதர் அந்தப் பெண்ணிடத்தில் வேறெதையும் பேசவில்லை. தொடர்ந்து அந்தப் பெண்ணிடத்தில் பேசுவதில் பயனில்லை. அப்படியே பேசினாலும் அதைக் கேட்கும் நிலையிலும் அவள் இல்லை என்பதை நபிகளார் உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டார்கள். ஆனால் இன்றோ பெண்களைப் போல் எதற்கெடுத்தாலும் சண்டையிடும் ஆண்களைப் பார்க்கின்றோம்.

கடுமையாக சச்சரவிட்டுக்கொண்டு இடம், பொருள், ஏவல் அறியாமல் பிறர் மனதையும் காயப்படுத்தி விடுகிறோம்.

مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

நூல்: முஸ்லிம்-78 

மேற்கண்ட செய்தி தீமையை நாம் எந்த அளவு தடுக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை விளக்குகின்றது. இருப்பினும் சொந்தப் பிரச்சனைகளுக்காகப் பிறரைப் பழி தீர்க்க எண்ணுவதும், காலமெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொண்டு அலைவதும் எவ்வகையில் நியாயம் என்பதை இவ்வேளையில் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். தனது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ்வின் தூதர் எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளார்கள். அதற்காக எடுத்ததெற்கெல்லாம் பழிவாங்கித் திரிந்தார்களா? அல்லது மனதில் குரோதத்துடன் தான் இருந்தார்களா?

மன்னர்கள் எதிரி நாட்டிற்குள் நுழைந்தால் அதை நாசமாக்குவார்கள். அங்குள்ள பெண்களின் கற்புகளை சூறையாடுவார்கள். சிறார்களையும் முதியவர்களையும் நோவினைப்படுத்துவார்கள். இந்நிலையில் தன்னையும் தன்னை ஏற்றுக் கொண்டவர்களையும் நோவினைப்படுத்திய நாட்டிற்குள் நபிகளார் நுழைந்த போது அவர்களைப் பழிவாங்கத் துடிக்கவில்லை. மாறாக அதில் உள்ள புற்பூண்டுகள் கூட பிடுங்கப்படக்கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்த போது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, “அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை.

எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை. இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது.

எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கின்றதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்’’ என்று கூறினார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள், “இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்’’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இத்கிர் புல்லைத் தவிர’’ என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்’’ என்று கேட்டார்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்’’ என்று உத்தரவிட்டார்கள்.

நூல்: புகாரி-2434 

நல்லது கெட்டதை சொல்ல மறந்துவிட்டால்…

ஒரு நல்ல காரியம் நடக்கும் போது அல்லது அனைவரும் சந்தோஷமாக இருக்கும் போது யாராவது ஒருவர் அந்த வீட்டில் முகத்தைத் திருப்பிக் கொண்டு சண்டையை இழுத்து வைக்கவில்லையென்றால் அந்தக் காரியம் சுபகாரியமாக இருக்குமா? அந்த வீடு சந்தோஷத்தில் களைகட்டுகின்றதோ இல்லையோ இதுபோன்ற சண்டையில் களைகட்டிவிடுகின்றது.

‘எனக்கு வேண்டுமென்றே தான் தெரியப்படுத்தவில்லை. ஒருத்தருக்கு மறந்தால் சரி என்று கூறலாம். வீட்டில் உள்ள அனைவருக்குமா மறக்கின்றது? என்னை அனைவருமே இழிவாகத்தான் எப்போதுமே நினைக்கின்றீர்கள். மதியாதார் வாசலை நான் எப்படி மிதிப்பது? என் கௌவரமும், சுயமரியாதையும் என்னவாவது?’ என்றெல்லாம் கூறி தன்னைத் தானே இழிவுபடுத்தியும் பிறர் மனங்களை காயப்படுத்தியும் நோகடிக்கின்றனர்.

தனக்குப் பிறரால் இலாபம், ஆதாயம் கிடைக்கும் போதெல்லாம் மாமன், மச்சான், உடன் பிறப்பு என்று உறவு பாராட்டுபவர்கள் இது போன்ற எதார்த்தமாக நடந்த விஷயங்களைப் பெரிதுபடுத்தாமல் அப்போதும் என் உடன் பிறப்பு, என் தாய், என் சகோதரன் என்று உறவு பாராட்ட வேண்டியது தானே!

பேசத் தெரியாமல் எதையேனும் ஒன்றைப் பேசிவிட்டால்…

சிலர் வார்த்தையின் கனத்தை அதன் விபரீதத்தை உணராமல் ஏதோ ஒரு அர்த்தத்தில் பேசப் போய் அது ஏதோ ஏதோ தொனிகளில் பிரதிபலித்து பூதாகரமாய் உருவெடுத்த காட்சிகளைப் பல குடும்பங்களில் காண்கின்றோம். ‘மனதில் உள்ளது தானே வார்த்தையில் வெளிவரும் அது வந்து விட்டது’ என்று கூறி மற்றவர்களைக் காயப்படுத்துகின்றனர். இது கணவன் மனைவிக்கு மத்தியில் அதிகம் காணப்படுகின்றது. கோபமாகப் பேசும் கணவனுக்குப் பயந்து எதையாவது ஒரு பதிலை இப்போது கூறித்தான் ஆக வேண்டும் என்பதற்காக எதையோ ஒன்றை மனைவி உளற, அதையே ஒரு பெரும் குற்றமாக எடுத்துக்கொண்டு தையத்தக்கா என்று நடனமாடும் கணவன்மார்கள் ஏராளம்.

தனது மனைவி இப்படி பேசுபவளா? அவளுக்கு சரியாகப் பேசத் தெரியுமா? அவள் வெகுளியாயிற்றே? அவள் பேசக்கூடாது என்ற நோக்கத்தில் பேசாமல் இருக்கிறாளா? அல்லது நம் மீதுள்ள பயத்தினால் பேசாமல் இருக்கிறாளா? என்று ஒவ்வொரு கணவனும் சிந்தித்தாலே பெரும்பாலான பிரச்சனைகளும் மனக்கசப்புகளும் குடும்பத்தில் குறைந்துவிடும்.