Tamil Bayan Points

2) திருமண ஒழுங்குகள்

நூல்கள்: இஸ்லாமியத் திருமணம்

Last Updated on April 15, 2023 by

திருமண ஒழுங்குகள்

திருமணத்தை இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குகளையும் இஸ்லாம் கற்றுத் தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண முறை மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், நடைமுறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது. அந்த ஒழுங்குகளைப் பேணி நடத்தும் போது தான் அது இஸ்லாமியத் திருமணமாக அமையும். அந்த ஒழுங்குகளைக் காண்போம்.

 

மணப் பெண் தேர்வு செய்தல்

மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் போது அவள் ஒழுக்கமுடையவளாகவும், நல்ல குணமுடையவளாகவும், இருக் கிறாளா என்பதையே கவனிக்க வேண்டும். பொருளாதாரத்தையோ, குலப்பெருமையையோ, உடல் அழகையோ பிரதானமாகக் கருதக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.

மணமகனைத் தேர்வு செய்யும் போது பெண்களும் ஆண் களின் நன்னடத்தையையே பிரதானமாகக் கொள்ள வேண்டும்.

பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் நன்னடத்தைக்காகவும் மணந்து கொள்ளப் படுகின்றனர். நீ நன்னடத்தை உடையவளைத் தேர்வு செய்து வெற்றியடைந்து கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரி 5090

 

பெண் பார்த்தல்

ஒருவரை ஒருவர் திருமணத்திற்கு முன்பே பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் தமக்குரிய வாழ்க்கைத் துணை பற்றி பல எதிர்பார்ப்புகளை மனதில் வைத்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளுக்கேற்ற வகையில் தமது வாழ்க்கைத் துணை அமையாததை திருமணத்திற்குப் பிறகு அவர்கள் அறிய நேர்ந்தால் தம்பதியரிடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். அதனால் முன்பே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தான் மணமுடிக்க விருப்பதைக் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்து விட்டாயா? எனக் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். நீ சென்று அவளைப் பார்த்துக் கொள்! அவர்களின் கண்களில் ஒரு பிரச்சினை உள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: முஸ்லிம் 2552

அன்ஸாரிப் பெண்களின் கண்கள் மற்றவர்களின் கண்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதைக் காரணம் காட்டி மனைவியை நிராகரித்து விடக் கூடாது என்பதற்காக முன்னரே மணப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மனம் பேசினார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும் என்று கூறியதாக முகீரா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். நூல்கள்: திர்மிதீ 1007, நஸயீ 3183, இப்னுமாஜா 1855

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழிகாட்டுதலை தமிழக முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றனர். திருமணத்துக்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது பாவச் செயல் எனவும் கருதுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும்.

பெண் பார்க்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் மணமகனின் தாயும், சகோதரிகளும் தான் பெண் பார்க்கின்றனர். இணைந்து வாழ வேண்டிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் உரிமையை இதன் மூலம் மறுக்கின்றனர்.
பெண் பார்ப்பதை வலியுறுத்தி இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.

 

பெண்ணின் சம்மதம்

பெண்ணின் சம்மதம் பெறாமல் திருமணம் செய்விக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அவர்களின் சம்மதம் பெறுவது மிகவும் அவசியமாகும்.

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி). நூல்: புகாரி 6971, 6964, 5137

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள். அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி). நூல்: புகாரி 5139, 6945, 6969

பெண்ணின் பொறுப்பாளர்

மணப் பெண்ணின் சம்மதம் அவசியம் என்றாலும் ஒரு பெண் தானாக தன் திருமணத்தை நடத்திக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாறாக அவளது பூரண சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் தான் நடத்தி வைக்க வேண்டும். மண மகன் சார்பில் இத்தகைய பொறுப்பாளர் எவரும் தேவையில்லை.

பொறுப்புள்ள நபரின் முன்னிலையில் திருமணம் நடக்கும் போது பெண்களை வஞ்சகமாக ஏமாற்றும் ஆண்களிடமிருந்து பெண்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது. பெண்களுக்குச் சேர வேண்டிய மஹர் தொகை போன்றவற்றைப் பெற்றுத் தருவதற்கும் பெண்கள் சார்பில் வலி என்னும் பொறுப்பாளர் அவசியமாகும்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களை மணக்காதீர்கள் என்று 2:221 வசனத்தில் ஆண்களுக்குக் கட்டளையிடும் இறைவன் இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள் என்று அதே வசனத்தில் கூறுகிறான்.

ஆண்கள் தாமாகவே திருமணம் செய்யலாம் என்பதையும், பெண்களுக்கு அவர்களின் பொறுப்பாளர்கள், பொறுப்பாளர்கள் இல்லாவிட்டால் சமுதாயத் தலைவர்கள் முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அவர்களின் குடும்பத்தார் அனுமதியுடன் அவர்களை மணந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 4:25)

இந்த வசனமும் ஒரு பெண் தானாக மணமுடித்துக் கொள்வதைத் தடை செய்கிறது.

பொறுப்பாளர் இன்றி திருமணம் கிடையாது. என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி). நூல்கள்: திர்மிதீ 1020, அபூதாவூத் 1785

 

கட்டாயக் கல்யாணம்

முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிமான ஆணை மணமுடிக்க விரும்பினால் அவளது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது பெற்றோரின் கடமையாகும். பணம், பதவி, குலம், அந்தஸ்து போன்ற எந்தக் காரணத்தையும் கூறி பெண்களின் விருப்பத்தை நிராகரிப்பது மறுமையில் கடுமையான குற்றமாகும். பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232)

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புவோர் இப்படித் தான் நடக்க வேண்டும் என்று கடுமையான வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். பெண்களின் இந்த உரிமையைப் பறிப்பவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவார்கள் என்பதற்காகவே இவ்வாறு கூறுகிறான்.

பெண்கள் தமது விருப்பத்தைத் தெரிவிப்பதைக் கூட பாவச் செயலாகக் கருதும் நிலை சமுதாயத்தில் நிலவுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண்கள் இது போன்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னை மணமுடித்துக் கொள்கிறீர்களா? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை மணமுடிக்க விரும்பாததால் மற்றொருவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். நூல்: புகாரி 2311, 5029, 5120.

வெட்கமில்லாமல் இப்படிக் கேட்கலாமா? என்று அவரை நபிகள் நாயகம் (ஸல்) கண்டிக்கவில்லை. விபச்சாரம் செய்வதற்குத் தான் வெட்கப்பட வேண்டுமே தவிர திருமணம் செய்யுமாறு கேட்க எந்த வெட்கமும் தேவையில்லை.

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவரை அபூதல்ஹா மணந்து கொள்ள விரும்பினார். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றவள். நீரும் இஸ்லாத்தை எற்றுக் கொண்டால் உம்மை மணந்து கொள்கிறேன் என்றார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
நூல்: நஸயீ 3288

பெண்கள் தமது வாழ்க்கைத் துணைவரைத் தேர்வு செய்யும் உரிமை பெற்றுள்ளார்கள் என்பதற்கு இவை சான்றுகள்.

ஆனாலும் அவர்கள் பொறுப்பாளர்கள் வழியாகத் தான் திருமணத்தை நடத்திட வேண்டும். பொறுப்பாளர்கள் மறுக்கக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.