Tamil Bayan Points

நமது கூட்டங்களில் பெண்கள் திரள்வது ஏன்?

கேள்வி-பதில்: பெண்கள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

நமது கூட்டங்களில் பெண்கள் திரள்வது ஏன்?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் சாதாரண பொதுக்கூட்டங்களுக்கு கூட “மாநாடு” போல மக்கள் குறிப்பாக பெண்கள் திரண்டு வரக் காரணம் என்ன?

பொதுவாக மக்கள் திரண்டு வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெண்கள் திரண்டு வரக் காரணங்கள் பல உள்ளன. ஆண்களுக்கு கடவுள் அல்லாஹ், பெண்களுக்கு கடவுள் அவ்லியா எனக் கூறாமல் கூறி பெண்களை இறை வழிபாட்டில் இருந்து தூரமாக்கி வைத்திருந்தனர். பள்ளிவாசலுக்கு வருவதற்குக் கூட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலைமை இருந்தது. இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய இந்த உரிமையை அவர்களுக்கு மீட்டுக் கொடுத்தது தவ்ஹீத் ஜமாஅத்.

பெண்களிடம் சம்மதம் கேட்காமல் கட்டாயக் கல்யாணம் செய்யப்பட்டு வந்த நிலையை மாற்றி பெண்களுக்கு தமது மண வாழ்வைத் தேர்வு செய்ய உரிமை உண்டு என்பதை நிலைநாட்டியது தவ்ஹீத் ஜமாஅத். தலாக் விடப்படும் பெண்களுக்கு எவ்வித பரிகாரமும் காணப்படாமல் இருந்த நிலையை மாற்றி பெண்களை விவாகரத்து செய்தால் அவர்களுக்கு பாதுகாப்பு தொகை வழங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியதும் தவ்ஹீத் ஜமாஅத்தான்.

கணவனைப் பிடிக்காத பெண்கள் வழி தவறிச் செல்லவும் வேதனை அனுபவிக்கவும் காரணம் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய விவாகரத்து உரிமையை மறுத்தது தான்.

இந்த உரிமையை மீட்டுக் கொடுத்ததும் தவ்ஹீத் ஜமாஅத் தான். வரதட்சணை எனும் வன்கொடுமையால் பெண்கள் பட்ட இன்னல்கள் ஓரளவாவது குறைந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் தவ்ஹீத் ஜமாஅத் தான். இஸ்லாத்தை தூய வடிவில் கடைப்பிடித்தால் மட்டுமே பெண்கள் தமது உரிமையைப் பெற முடியும் என்ற கொள்கையை பெண்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளதால் பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள்.

அது போல் தங்கள் குடும்பத்து ஆண்களிடம் காணப்பட்ட மது சூது புகையிலைப் பழக்கம் உள்ளிட்ட பல தீமைகள் இந்த ஜமாஅத்தின் காரணமாக விலகி இருப்பதையும் அவர்கள் புரிந்து கொண்டதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
உணர்வு 16:9