Tamil Bayan Points

நேசிப்பதிலிருந்து தர்மம் செய்யாதவரை

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனத்திற்கு பின் நடந்தவை

Last Updated on April 29, 2022 by Trichy Farook

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அபூ தல்ஹா(ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.

அது மஸ்ஜிது(ன்னபவி)க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்’ என்ற (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டதும். அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹு தஆலா, ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்’ எனக் கூறுகிறான்.

என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் என்னுடைய மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே ‘இறைத்தூதர் அவர்களே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் ‘ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொறுத்தமாகக் கருதுகிறேன்’ எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவ்வாறே செய்கிறேன்!’ எனக் கூறிவிட்டு, அத் தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளும் பங்கிட்டுவிட்டார்.

( புகாரி-1461 )