Tamil Bayan Points

15) நோன்பு நோற்க கூடாத நாட்கள்

நூல்கள்: நோன்பின் சட்டங்கள்

Last Updated on April 15, 2023 by

தொடர் நோன்பு நோற்கத் தடை

ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நோற்கப்படும் நோன்பும், நோன்பைத் துறக்காமல் இரவு பகலாக நோற்பதும் விசால் எனப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இத்தகைய தொடர் நோன்புகளை நோற்றுள்ளார்கள். ஆனாலும் நாம் அவ்வாறு நோற்கக் கூடாது என்று தடை விதித்து விட்டார்கள். அதிகமாக நோன்பு நோற்க ஆசைப்படுபவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்கலாம். இதை விட அதிகமாக நோன்பு நோற்க அனுமதி இல்லை. இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசால் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். நீங்கள் மட்டும் நோற்கிறீர்களே? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், என் இறைவன் எனக்கு உண்ணவும், பருகவும் வழங்குகின்றான் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1962, 1922

ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைப்பீராக! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்கூலி கொடுக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும் என்றார்கள். என்னால் இதைவிட சிறப்பானதைச் செய்ய முடியும் என்று நான் கூறினேன். அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டு விடுவீராக! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, என்னால் இதை விடச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன் என்று கூறினேன். அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக! இது தான் தாவூத் நபியின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே சிறந்ததாகும் என்றார்கள். என்னால் இதை விட சிறப்பாகச் செய்ய முடியும் என்று நான் கூறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை விடச் சிறந்தது எதுவும் இல்லை என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 1976, 1975, 1977

 

நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், அதையடுத்த மூன்று நாட்கள் ஆகிய ஐந்து நாட்கள் நோன்பு நோற்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஷஅபான் முப்பதாம் இரவா? ரமளானின் முதல் இரவா? என்ற சந்தேகம் ஏற்படும் நாளிலும் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: புகாரி 1197, 1864, 1996

தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் பிறை 11, 12, 13) உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.

நூல்: முஸ்லிம் 1920

(ரமளானா? ஷவ்வாலா? என்று) சந்தேகம் உள்ள நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.

அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் (ரலி)

நூல்: திர்மிதி 622