Tamil Bayan Points

5) பங்கிடுதல் மற்றும் பிற சட்டங்கள்

நூல்கள்: குர்பானியின் சட்டங்கள்

Last Updated on February 23, 2022 by

பங்கிடுதல்

குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.

அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.

அல்குர்ஆன் (22 : 36)

இந்த வசனத்தில் அல்லாஹ் இத்தனை சதவிகிதம் கொடுக்க வேண்டுமென கட்டளையிடவில்லை. பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்றே கூறுவதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள் இறைச்சி முழுவதையும் தர்மம் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி தோல் சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்கு கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

நூல் : புகாரி (1717)

நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து அதை அனைத்தையும் பங்கிட்டு ஏழைகளுக்கு வழங்குமாறு அலீ(ரலி) அவர்களுக்கு கட்டளையிட்ட செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் ஒரு துண்டு எடுத்து அதை மட்டும் நபி (ஸல்) அவர்கள் சமைத்துச் சாப்பிட்டுள்ளார்கள். எனவே குறிப்பிட்ட அளவில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் தர்மம் வழங்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பை பருகினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (2137)

 

மாமிசத்தில் நமக்குத் தேவையான அளவை எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது மதீனாவிற்கு வரும் வரை அளவில்லாமல் குர்பானிப் பிராணியின் இறைச்சியை உண்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியை பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக்கொடுத்துக் கொண்டே இருந்தேன்.

அறிவிப்பவர் : சவ்பான் (ரலி)

நூல் : முஸ்லிம் (3649)

 

மாற்றப்பட்டச் சட்டம்

பஞ்சம் மிகைத்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் மாமிசத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்று மக்களுக்குத் தடைவிதித்திருந்தார்கள். பின்பு எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சேமித்துக் கொள்வதற்கு சலுகை வழங்கினர்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஈதுல் அல்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா? என்று கேட்டேன். அவர்கள் மக்கள் (பஞ்சத்தால்) பசிபட்டினியோடு இருந்த ஒரு ஆண்டில் தான் அவர்கள் அப்படி (த் தடை) செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதியுள்ளவர் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக்காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதை சாப்பிட்டு வந்தோம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆபிஸ் பின் ரபீஆ

நூல் : புகாரி (5423)

 

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் வரும் போது கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் (மாமிசத்தை எதிர் பார்த்து எங்களிடம்) வருவார்கள். ஆகையால் நபி (ஸல்) அவர்கள் (அவர்களுக்காக மக்களிடம்) மூன்று நாட்களுக்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமுள்ளதை தர்மம் செய்து விடுங்கள் என்று கூறினார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் பலவீனமான மக்களுக்காகத்தான் நான் தடுத்தேன். ஆகையால் நீங்கள் சாப்பிடுங்கள். (எவ்வளவு வேண்டுமானாலும்) சேமித்துக் கொள்ளுங்கள். தர்மமும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (3643)

 

பங்கில் அவசியம் சேர்க்கப்பட வேண்டியவர்கள்

ஏழைகள் பட்டினியால் வாடாமல் இருப்பதற்காக பணக்காரர்கள் சேமித்து வைப்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்ததை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழைகளைக் கவனத்தில் வைத்தே பெருமானார் இவ்வாறு செய்துள்ளார்கள். நமது பகுதியில் ஏழைகள் மிகுதியாக இருப்பதினால் அவர்களையும் அவசியம் பங்கில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாளன்று அண்டை வீட்டார்கள் உறவினர்கள் ஏழைகள் ஆகியோருக்கு நபித்தோழர்கள் இறைச்சியைக் கொடுத்து வந்தார்கள். இதற்கு பின்வரும் செய்திகள் சான்றாக உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும் என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் இது இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள் என்று சொல்லிவிட்டு தம் அண்டை வீட்டாரின் தேவை( யினால் தொழுகைக்கு முன்பே அறுத்து விட்டதாக) குறிப்பிட்டார். நபி (ஸல்) அவர்கள் அவர் சொன்ன காரணத்தை ஏற்றுக் கொண்டதைப் போல் இருந்தது. .

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (5561)

 

அபூபுர்தா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நானும் சாப்பிட்டுவிட்டு எனது குடும்பத்தாருக்கும் அண்டை வீட்டாருக்கும் உண்ணக் கொடுத்து விட்டேன் என்று கூறியதாக புகாரியில் 983 வது செய்தியில் பதிவாகியுள்ளது.

நான் அபூஅய்யூப் அல்அன்சாரீ அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் (இதன் மூலம்) பெருமையடித்துக்கொள்வதை நீங்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.

அறிவிப்பவர் : அதா பின் யசார். நூல் : திர்மிதி (1425)

 

குர்பானி மாமிசத்தைக் முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை. (22 : 36) இந்த வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும் தான் கூறப்படுகிறது. ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் முஸ்லிமல்லாத ஏழைக்கும் வழங்குவதில் எந்தக் குற்றமும் இல்லை. முஸ்லிம்களுக்கு குர்பானி இறைச்சியை தர்மமாகக் கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறாமல் பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்று கூறியிருப்பதினாலும் முஸ்லிமல்லாதவர்களுக்கு வழங்குவது குற்றமல்ல.

(குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள். சேமித்துக் கொள்ளுங்கள். தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் வாகித் (ரலி). நூல் : முஸ்லிம் (3643)

 

எனினும் முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றும் சிரன்ப்படக் கூடாது என்ற நோக்கத்தில் குர்பானி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாமிசத்தை வழங்குவதில் முஸ்லிம்களுக்குத் தான் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்குப் போக மிச்சம் இருந்தால் முஸ்லிமல்லாதவர்களுக்கும் வழங்கலாம்.

தோல்

குர்பானிப் பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதைத் தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.

அறிவிப்பவர் : அலீ(ரலி). நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2320)

 

தோல்கள் ஏழைகளுக்குச் சேரவேண்டியது என்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை கூலியாகக் கொடுப்பதைத் தடுத்து தர்மம் செய்யுமாறு கட்டடையிட்டுள்ளார்கள். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் இதை வழங்காமல் இருப்பது நல்லது. இது அல்லாத மற்ற பணத்தை அவற்றிற்கு வழங்கலாம்.

மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தமாக வாரிச் சென்று விடும் போது நம்மூரில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதை நாம் உணர வேண்டும். நம்பிக்கைக்குரிய இயக்கம் ஏழைகளுக்குத் தருவதாகக் கூறி தோட்களை வாங்கினால் அவர்களிடத்தில் தோல்களை ஒப்படைப்பது தவறல்ல.

 

இரத்தம்

பிராணிகளை அறுக்கும் போது நரம்புகள் நன்கு துண்டிக்கப்பட்டு அவற்றின் இரத்தம் வெளியேற்றப்பட வேண்டும். ஏனென்றால் இரத்தம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதையறியாமல் பலர் ஆடுகளை அறுக்கும் போது வெளிவரும் இரத்தத்தை எடுத்து சமைத்துச் சாப்பிடுகிறார்கள். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியம்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்

அல்குர்ஆன் (2 : 173)

இறந்துவிட்டவர்கள் சார்பாகக் குர்பானி

இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்மான ஹதீஸுடன் மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பஸ்ன் தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி). நூல் : முஸ்லிம் (3084)

 

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்.

நூற்கள் : திர்மிதீ (1425), இப்னுமாஜா (3138). அறிவிப்பவர் : அபூ அய்யூப்(ரலி)

 

மேற்கண்ட ஹதீஸ் நபித்தோழர்கள் தன் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காகக் கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

நபி (ஸல்) அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப்பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹிம் மகள் ஜைனப் மனைவி கதீஜா ஆகியோர் மரணித்தனர். இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபி (ஸல்) அவர்கள் முதலில் இவர்களுக்குக் குர்பானி கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாததால் இறந்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்கள் குர்பானி கொடுக்கக்க கூடாது.

 

அல்லாஹ் அல்லாதவர்களுக்குக் குர்பானிகொடுக்கலாமா?

அல்லாஹ்விற்காகக் குர்பானி கொடுப்பதைப் போன்றே அவ்லியாக்களின் பெயர்களைக் கூறி அவர்களுக்காகச் சிலர் குர்பானி கொடுக்கிறார்கள். இது அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மாபாதகச் செயலாகும். குர்பானி என்பது தொழுகை நோன்பு ஹஜ் ஆகிய வணக்கங்களைப் போன்று ஒரு வணக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுப்பதை வணக்கம் என்று சொல்கிறார்கள்.

யார் தொழுகைக்குப் பின்னால் அறுத்தாரோ அவருடைய வணக்கம் பூர்த்தியாகி விட்டது. அவர் முஸ்லிம்களின் வழியைப் பின்பற்றியவர் ஆவார்.

அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)

நூல் : புகாரி (5545) முஸ்லிம் (3624)

 

பொதுவாக எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ்வைத் தவிர மற்ற எவருக்கும் நிறைவேற்றக் கூடாது. அப்படிச் செய்தால் செய்பவர்கள் இணை வைத்தவர்களாகக் கருதப்படுவார்கள். குர்பானி உட்பட அனைத்து வணக்கத்தையும் அல்லாஹ்விற்கு மட்டும் செய்யும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்” என்றும் கூறுவீராக! அல்குர்ஆன் (6 : 162)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா? என்று அலீ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை. இதோ இந்த வாளுரையில் இருப்பதைத் தவிர என்று கூறிவிட்டு ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கிறான், பூமியில் அடையாளச் சின்னங்களை திருடியவனை அல்லாஹ் சபிக்கிறான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கிறான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கிறான்,

அறிவிப்பவர் : அபுத்துஃபைல் (ரலி). நூல் : முஸ்லிம் (3659)

 

அவ்லியாக்களுக்காகவோ அல்லது மகான்களுக்காகவோ அறுப்பது மட்டுமல்லாமல் அவ்வாறு அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை சாப்பிடுவதும் தடுக்கப்பட்டுவிட்டது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. அல்குர்ஆன் (5 : 3)

 

எனவே குர்பானியின் சட்டங்களை தெரிந்து அதன் அடிப்படையில் இவ்வணக்கத்தை நிறைவேற்றி ஈருலகிலும் இறையருளைப் பெறுவோமாக!