Tamil Bayan Points

நபியின் மனைவிக்கான பர்தா தொடர்பான வசனம்

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

Last Updated on April 30, 2022 by Trichy Farook

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். ஆகவே, தாங்கள் (தங்களுடைய துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே! என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.

( புகாரி-4790 )

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (‘வலீமா’விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டுவிட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர். அப்போதுதான் அல்லாஹ்’ இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்கவேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்துவிட்டார்கள்.

( புகாரி-4792 )

அனஸ் (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ரொட்டியும் இறைச்சியும் விருந்தாக அளித்து, ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (வலீமா விருந்து) உணவுக்காக, மக்களை அழைப்பதற்கு நான் அனுப்பப்பட்டேன். ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் உண்பார்கள். புறப்பட்டுவிடுவார்கள்.

பிறகு, மற்றொரு கூட்டத்தார் வருவார்கள். உண்பார்கள். போய்விடுவார்கள். இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லை என்பது வரை நான் மக்களை அழைத்தேன். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழைப்பதற்கு இனி ஒருவரும் இல்லை’ என்றேன்.

அவர்கள், ‘உங்கள் உணவை எடுத்துச் செல்லுங்கள்! என்றார்கள்.

(விருந்து முடிந்தும்) மூன்று பேர் மட்டும் வீட்டில் பேசிக்கொண்டே இருந்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா(ரலி) அவர்களின் அறைக்குச் சென்று ‘வீட்டாரே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!)’ என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி), ‘வ அலைக்குமுஸ்ஸலாம், வரஹ்மத்துல்லாஹ் (தங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!) தங்களின் (புதிய) துணைவியாரை எப்படிக் கண்டீர்கள்? பாரக்கல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும்!)’ என்று (மணவாழ்த்துச்) கூறினார்கள்.

பிறகு, நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியர் அனைவரின் அறைகளையும் தேடிச்சென்று ஆயிஷா(ரலி) அவர்களுக்குச் சொன்னது போன்றே, (முகமன்) சொல்ல, அவர்களும் ஆயிஷா(ரலி) அவர்களுக்குச் சொன்னது போன்றே, (முகமன்) சொல்ல, அவர்களும் ஆயிஷா(ரலி) கூறியது போன்றே (பிரதி முகமனும், மணவாழ்த்தும்) கூறினார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் (புதுமணப் பெண் ஸைனப்(ரலி) அவர்களிடம்) திரும்பி வர, அப்போதும் வீட்டில் அந்த மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்களோ அதிக வெட்க(சுபாவ)ம் உடையவர்களாய் இருந்தார்கள்.

எனவே, (அவர்களைச் சீக்கிரம் போகச் சொல்லாமல்,) ஆயிஷா(ரலி) அவர்களின் அன்றைய நோக்கி நடந்தபடி (மீண்டும்) புறப்பட்டார்கள்.

அந்த மூவரும் வெளியேறிவிட்டார்கள் என்று ‘நான் அவர்களுக்குத் தெரிவித்தேனா?’ அல்லது, ‘(மற்றவர் மூலம்) தெரிவிக்கப்பட்டதா?’ என்று எனக்குத் தெரியவில்லை. (இதைக் கேட்ட உடன்) நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்கு) திரும்பி வந்தார்கள்.

அவர்கள் ஒருகாலை வாசல்படியிலும் மற்றொன்றை வெளியேயும் வைத்தபோது, எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். (அப்போதுதான்) பர்தா (சட்டம்) தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது.

( புகாரி-4793 )