Tamil Bayan Points

4) பிராணியை அறுத்தல்

நூல்கள்: குர்பானியின் சட்டங்கள்

Last Updated on February 23, 2022 by

எங்கே கொடுப்பது?

முஸல்லா எனும் திடலில் நபி (ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தார்கள்.” 

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி). நூற்கள் : புகாரி(5552), அபூதாவூத் (2428), நஸயீ (1571)

நபி (ஸல்) அவர்கள் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் முஸல்லா என்ற திடலில் குர்பானி கொடுத்துள்ளார்கள். பொதுவான ஒரு இடத்தில் வெளிப்படையாக அறுக்கும் போது ஏழை எளியவர்கள் இதைக் கண்டு கொள்வார்கள். குர்பானி கொடுத்தவர்களிடம் சென்று இறைச்சியை அவர்கள் வாங்குவதற்கு இம்முறை உதவியாக இருக்கும். இந்த நோக்கத்திற்காக நபி (ஸல்) அவர்கள் முஸல்லாவில் சென்று குர்பானி கொடுத்திருக்கலாம். விரும்பினால் வீட்டில் கொடுப்பதற்கும் அனுமதி உள்ளது. இரு முறைகளும் பெருமானாரின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டதாகும்.

இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (இல்லத்திற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம்.

அறிவிப்பவர் : பரா(ரலி). நூற்கள் : புகாரி(5545), முஸ்லிம் (3627)

இந்த ஹதீஸில் நாம் திரும்பிச் சென்று என இடம் பெற்றுள்ள வாசகம் கவனிக்கத் தக்கது. இந்த வாசகம் திடல் இல்லாத வேறொரு இடத்தைச் சுட்டுகிறது. வீட்டில் அறுக்கலாம் என்பதை உணர்த்துவதற்கு நபி (ஸல்) இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய கருப்பு நிறத்தால் அமரக்கூடிய கருப்பு நிறத்தால் பார்க்கக்கூடிய கொம்புள்ள ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பிறகு அதை கல்லில் தீட்டு என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டை கீழே படுக்க வைத்து அறுத்தார்கள்.

நூல் : முஸ்லிம் (3637). அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

ஆயிஷா (ரலி) அவர்களிடம் கத்தியை எடுத்து வரும் படி கட்டளையிட்டிருப்பது அறுத்தல் வீட்டில் நடந்திருக்கிறது எனத் தெரிவிக்கிறது. திடலுக்குச் சென்றிருந்தால் கத்தியுடனே அங்கு சென்றிருப்பார்கள். கத்தியை எடுத்து வரும்படி கூறுவதற்கு எந்த அவசியமும் இருந்திருக்காது. இதன்படி குர்பானிப் பிராணியை ஈத்கா திடலில் அல்லது வீட்டில் அறுக்கலாம் என்பது தெளிவாகிறது.

வீடு அல்லது திடலில் அறுக்காமல் வீட்டிற்கு முன்பு தெருவில் சிலர் அறுக்கிறார்கள். இவர்களது இச்செயல் தெருக்களில் அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இடையூராக அமைந்து விடுகிறது. இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை

பிராணியை அறுக்கும் முன் அதன் வாயில் சிறிது நீரை விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. இதனால் அப்பிராணிக்கு வேதனை குறையும் என்று நம்புவதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை. கத்தியைக் கூர்மையாக வைத்துக் கொள்வதே அவசியம். கூர்மையற்ற கத்தியினால் பிராணியை அறுத்து சித்திரவதை செய்யக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எம்முறை பிராணிக்குச் சிரமத்தைக் குறைக்குமோ அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி). நூற்கள் : முஸ்லிம் (3615), திர்மிதி(1329) நஸயீ(4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது(16490)

 

ஆயிஷாவே! கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) நூற்கள் : முஸ்லிம் (3615)

கால்நடைகளை முறையாக ஒரு பக்கமாகப் படுக்கவைத்து அவை எழாமல் இருப்பதற்காக அவற்றின் கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பலிப்பிராணியை அறுக்கும் போது அது துள்ளி பூரணமாக அறுப்பதைத் தடுத்துவிடும். இதற்காக நபி (ஸல்) அவர்கள் இம்முறையைக் கடைப்பிடித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கருப்பும் வெள்ளையும் கலந்த இரு ஆடுகளைக் குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவர்கள் தம்முடைய பாதத்தை அவற்றின் கழுத்தில் வைப்பதை நான் பார்த்தேன். பிஸ்மிலாஹ்வையும் தக்பீரையும் கூறி அவற்றை தம் கையால் அறுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி). நூல் : புகாரி (5558)

 

ஒட்டகத்தைப் பொறுத்தவரை நிற்க வைத்து அதன் ஒரு காலை கயிற்றால் கட்டி வைத்துக் கொண்டு அறுக்க வேண்டும். ஒட்டகம் என்பது ஆட்டைப் போன்றதல்ல. ஆட்டை அறுப்பதைப் போன்று படுக்க வைத்து அதை அறுக்க இயலாது. ஆகையால் ஒட்டகத்தில் இம்முறையைக் கடைபிடிக்க வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறுப்பதற்காக அவரது ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக அதுவே முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்று கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : ஸியாத் பின் ஜுபைர் (ரலி) நூல் : புகாரி (1713)

நபி (ஸல்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்து தமது கையாலேயே அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில் பெரிய கொம்புகளுடைய கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (1712)

 

பிராணியைப் படுக்க வைப்பதற்கு முன்பாகவே கத்தியைக் கூர்மைபடுத்திக் கொள்ள வேண்டும். அதைப் படுக்க வைத்துக் கொண்டு அதன் கண்ணெதிரே கத்தியைத் தீட்டுவதினால் பிராணி மிரள ஆரம்பிக்கும். இவ்வாறு செய்வது பிராணியைத் துன்புறுத்துவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவர் ஆட்டை அறுப்பதற்காக அதைப் படுக்க வைத்துக் கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) இப்பிராணியைப் பலமுறை கொல்வதை நீ நாடுகிறாயா? இதை நீ படுக்கவைப்பதற்கு முன்பாகவே உன் கத்தியை நீ கூர்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : ஹாகிம் பாகம் : 4 பக்கம் : 257

 

குடும்பத்தினர் ஆஜராக வேண்டுமா?

குர்பானி கொடுக்கும் போது குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் வந்து நிற்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது தொடர்பாக வந்துள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானதாக உள்ளது.

ஃபாத்திமா ! எழு! உன்னுடைய பிராணியிடத்தில் ஆஜராகு! ஏனெனில் குர்பானி பிராணியின் முதலாவது சொட்டு இரத்தம் விழும் போதே உனது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில் இதனுடைய இரத்தமும் மாமிசமும் எழுபது மடங்கு கூடுதலாகக் கொண்டு வரப்படும். இதை உன்னுடைய மீஸானில் (நன்மைத் தட்டில்) வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த பாக்கியம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்குரியதா? அல்லது எல்லா மக்களுக்கும் உரியதா? எனக் கேட்டார்கள். முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானது தான் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி) மற்றும் இப்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல் : பைஹகீ (19161) (19162)

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அமீர் பின் காலித் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆகையால் குடும்பத்தினர் வந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதில் கூறப்பட்டுள்ள சிறப்புகளும் நபி (ஸல்) அவர்களின் கூற்றாகாது.

ஆனால் அறுப்பதைப் பார்க்க குடும்பத்தினர்கள் விரும்பி அவர்களாகவே முன்வந்தால் அதில் எந்த குற்றமும் இல்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நின்று பார்த்துள்ளார்கள் என்ற தகவலை முன்பே பார்த்தோம்.

 

கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டுமா?

குர்பானிப் பிராணியை கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை. இது தொடர்பாக பைஹகியில் இடம் பெறுகின்ற ஹதீஸை இமாம் பைஹகீ அவர்களே பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே எந்தத் திசை அறுப்பவருக்கு தோதுவாக உள்ளதோ அந்தத் திசையில் அறுக்கலாம்.

சில ஊர்களில் அறுப்பதற்கு முன்னால் பிராணியைக் குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கண்களில் சுர்மா இடுவது, கொம்புகளில் பூச்சுற்றுவது போன்ற செயல்களைச் செய்கின்ற னர். இவை எல்லாம் மாற்றுமதக் கலாச்சாரங்களாகும். மேலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட பித்அத்’தான நடைமுறைகளாகும். இவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியமானதாகும்.

பிராணியை அறுப்பதற்கு முன்பு கூற வேண்டியவை

பிராணியை அறுக்கும் போது வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ என்ற துஆவை சிலர் ஒதுகின்றனர். இது பற்றி அபூதாவுத் பைஹகீ இப்னுமாஜா ஆகிய நூற்களில் ஒரு பலவீனமான ஹதீஸ் இடம் பெறுகிறது. ஆகயால் இதை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக சஹீஹான ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் சில வார்த்தைகளைக் கூறியதாக உள்ளது.

அறுக்கும் போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்” (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன், அல்லாஹ் பெரியவன்) என்று கூறி இவ்வணக்கத்தை நம்மிடமிருந்து ஏற்றுக் கொள்ளும்படி அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி). நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)

 

முஸ்லிமில் உள்ள இன்னொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று சொன்னதாக வந்துள்ளது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி). நூல் : முஸ்லிம் (3636)

 

கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய கருப்பு நிறத்தால் அமரக்கூடிய கருப்பு நிறத்தால் பார்க்கக்கூடிய கொம்புள்ள ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பிறகு அதை கல்லில் தீட்டு என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள்.

(அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம தகப்பல்மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன். இறைவா முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக என்று கூறி அதை அறுத்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி). நூல் : முஸ்லிம் (3637) அபூதாவுத் (2410) அஹ்மத் (23351)

பெருநாள் தொழுகை முடிந்த உடன் பள்ளிவாசலில் பணிபுரியும் ஹஜ்ரத்மார்களுக்கும் மோதினாருக்கும் கடுமையான வேலை வந்துவிடும். ஒவ்வொருவரும் குர்பானிப் பிராணியை அறுப்பதற்காக அவர்களையே நாடி இருப்பார்கள். இவர்கள் அறுத்தாலே குர்பானி ஏற்கப்படும் என்று பலர் இன்று தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கரத்தால் அறுத்துள்ளதால் குர்பானி கொடுப்பவர் தானே அறுப்பதே சிறந்ததாகும். அவ்வாறு அறுக்கும் போது பிறரை உதவிக்கு அழைத்துக் கொள்வது தவறாகாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது குர்பானிப் பிராணியை அறுப்பதற்காக அதைப் படுக்கவைத்து விட்டு ஒரு மனிதரிடத்தில் எனது குர்பானிப் பிராணியை (அறுப்பதற்கு) எனக்கு உதவிபுரியுங்கள் என்று கூறினார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உதவி புரிந்தார்.

அறிவிப்பவர் : பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபித்தோழர்

நூல் : அஹ்மத் (22086)

 

எப்போது அறுக்க வேண்டும்?

குர்பனிப் பிராணியை உலுஹியா, குர்பானி” என்று பிரித்து உலுஹியா” என்றால் தொழுகைக்கு முன்பு அறுக்கலாம் என்றும், குர்பானி” என்றால் தொழுகைக்குப் பின்பு தான் அறுக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரித்துச் செய்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உலுஹியா என்பதும், குர்பானி என்பதும் ஒன்று தான்.
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்த பின்பே குர்பானி கொடுக்க வேண்டும். அதற்கு முன்னர் கொடுத்தால் அது குர்பானியாகக் கணக்கில் கொள்ளப்படாது.

தொழுகை முடிந்த உடன் தான் அறுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்து விட்டதால் அதையே துவங்குவதற்குரிய நேரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் இதை அறியாமல் ஃபஜர் ஆரம்பித்த உடனே அறுத்து விடுகிறார்கள். தெரியாமல் தொழுகைக்கு முன் அறுத்து விட்டால் தொழுத பின் மற்றொரு பிராணியை அறுக்க வேண்டும்.

இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பரா(ரலி). நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம் (3627)

 

அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அறுப்பதற்கு முன்பே அறுத்துவிட்டார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) அல்லாஹ்வின் தூதரே இந்த நாள் இறைச்சி அதிகமாக விரும்பப்படும் நாள். (ஆகையால்) எனது வீட்டார்களுக்கும் எனது அண்டைவீட்டாருக்கும் எனது உறவினர்களுக்கும் உண்ணக்கொடுப்பதற்காக எனது குர்பானிப் பிராணியை அவசரப்பட்டு அறுத்துவிட்டேன் என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அறுப்பீராக என்று கூறினார்கள். அவர்அல்லாஹ்வின் தூதரே என்னிடத்தில் ஆறுமாதம் பூர்த்தியான பெண் வெள்ளாட்டுக் குட்டி உள்ளது. அது (அதிக) இறைச்சியுடைய இரு ஆடுகளை விட சிறந்தது என்று கூறினார். அதற்கு நபியவர்கள் இதுவே உனது இரு குர்பானிப் பிராணியில் சிறந்ததாகும் உமக்குப் பின்னால் யாருக்கும் ஆறுமாதக் குட்டி போதுமாகாது என்று கூறினார்கள். அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி). நூல் : முஸ்லிம் (3625)

 

இந்த ஹதீஸின் இறுதியில் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கப்படும் ஆறுமாதக் குட்டியே முன்பு கொடுக்கப்பட்டதை விட சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முன்பு அறுக்கப்பட்ட பிராணி வயதில் பெரிதாக இருந்தாலும் அது நபி (ஸல்) அவர்களின் பார்வையில் குர்பானிப் பிராணியாக கணிக்கப்படவில்லை.

இறைச்சிக்காக அறுக்கப்பட்டதாகவே எண்ணப்பட்டது. மாறாக தொழுகைக்குப் பின்பு கொடுக்கப்படும் பிராணி குறைந்த வயதுடையதாக இருந்தாலும் அதை குர்பானிப் பிராணியாக கருதி அதுவே சிறந்தது என்று கூறியுள்ளார்கள். எனவே தொழுகைக்குப் பின்பே குர்பானி கொடுக்க வேண்டும்.

 

எத்தனை பிராணிகள் கொடுக்க வேண்டும்?

சிலர் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்றும் சிலர் மூன்று நபருக்கு ஒரு ஆடு கொடுக்க வேண்டும் எனவும் மற்றும் பலர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு கொடுத்தால் போதும் என்றும் கூறுகின்றனர்.

இவற்றில் ஒரு ஆடு ஒரு குடும்பத்திற்கு போதுமானது என்று கூறுவோரின் கருத்தே சரியான கருத்து. ஏனெனில் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சஹாபாக்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை மட்டும் குர்பானியாக கொடுத்துள்ளார்கள் என பின்வரும் செய்தி கூறுகிறது.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர் : அதா இப்னு யஸார். நூற்கள்: திர்மிதீ(1425), இப்னுமாஜா(3147)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற கறுப்பில் படுக்கின்ற கறுப்பில் பார்க்கின்ற (கால்கள் வயிறு கண் ஆகியப் பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறி ஆட்டுக்கெடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறு அது குர்பானிக்காக கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) ஆயிஷாவே அந்தக் கத்தியை எடு என்றார்கள். பிறகு அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு என்றார்கள்.அவ்வாறே நான் செய்தேன்.பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம தகப்பல்மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால் இறைவா முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக என்று கூறி அதை அறுத்தார்கள்

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி). நூல் : முஸ்லிம் (3637)

 

இதுமட்டுமல்லாமல் குர்பானிக் கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு போதுமானது என்று தெளிவுபடுத்திவிட்டார்கள்.

நான் அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) ஒவ்வொரு பெருநாளிலும் ஒவ்வொரு ரஜப் மாதத்திலும் ஒரு ஆட்டை அறுப்பது ஒவ்வொரு வீட்டின் மீதும் கடமை என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

நூல் : அஹ்மத் (19804). அறிவிப்பாளர் : ஹபீப் பின் மிஹ்னஃப்

 

பெருமையை நாடாமல் ஏழைகளின் தேவையைக் கருதி எத்தனை பிராணி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் மாமிசத்தை வீண்விரையம் செய்யக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த கொம்புள்ள இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி). நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)

 

நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பைப் பருகினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி). நூல் : முஸ்லிம் (2137)

 

நன்மையைக் கருதி அதிகமாக குர்பானி கொடுப்பது சிறந்தது என்றும் தனக்கு முடியாத பட்சத்தில் மற்றவரிடம் கொடுத்து குர்பானிப் பிராணியை அறுக்கச் சொல்லலாம் என்றும் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.

நீண்ட இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத்துண்டுகளைச் சமைத்து சாப்பிட்டதாக உள்ளது. குர்பானி கொடுப்பவர் தன்னுடைய குர்பானியின் மாமிசத்தை உண்பது நபிவழி என்பதற்கு இது சிறந்த சான்றாக உள்ளது.

ஹஜ்ஜுக்குச் சென்று துல்ஹஜ்ஜு பிறை பத்தாம் நாள் மினாவில் ஹாஜிகள் குர்பானி கொடுப்பார்கள். இவர்கள் உள்ளூரில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நபி(ஸல்) அவர்களோ, மற்ற தோழர்களோ அவ்வாறு செய்யவில்லை. எனவே ஹாஜிகள் மினாவில் கொடுத்த குர்பானியே போதுமானதாகும்.