Tamil Bayan Points

பெண்களுக்கு ஜும்மா கடமையா?

கேள்வி-பதில்: பெண்கள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

பெண்களுக்கு ஜும்மா கடமையா?

திருக்குர்ஆனில் ஜும்ஆ தொழுகை பொதுவான கடமை என்று கூறப்பட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பெண்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு வழங்கி உள்ளார்கள்.

‘அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப்(ரலி)

நூல்: அபூதாவூத் 901

திருக்குர்ஆனில் ஒரு விஷயம் கடமை என்று கூறப்பட்டு, அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் விதிவிலக்கு அளிக்கப்பட்டால் அதை ஏற்றுச் செயல்படுவது தான் ஒரு முஃமின் மீது கடமையாகும். இதற்குப் பல்வேறு உதாரணங்களைக் காட்ட முடியும்.

உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 2:216

இந்த வசனத்தில் போர் செய்வது கடமை’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தொழுகைக்கும், நோன்புக்கும் எந்த வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகின்றானோ அதே வார்த்தையைப் பயன்படுத்தி போரை அல்லாஹ் கடமையாக்கி உள்ளான். இதன் அடிப்படையில் பெண்களுக்கும் போர் கடமை என்று கூற முடியாது. ஏனெனில் போரிலிருந்து பெண்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்துள்ளார்கள்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளிப்பது, இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீயின் அடிப்படையிலானது தான். எனவே இதில் ஒன்றை ஏற்று, மற்றொன்றை மறுப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமானதாகும். இவ்வாறு பாரபட்சம் காட்டுவோரை இறை மறுப்பாளர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, ‘சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்’ எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்கள் தாம் உண்மையாகவே (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

அல்குர்ஆன் 4:150, 151

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மார்க்க ஆதாரம் என்று திருக்குர்ஆனே தெள்ளத் தெளிவாக கூறுவதை அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்