Tamil Bayan Points

பெண்கள் ஆண்களிடம் முஸாபஹா செய்யலாமா?

கேள்வி-பதில்: பெண்கள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

பெண்கள் ஆண்களிடம் முஸாபஹா செய்யலாமா?

பெண்கள், அந்நிய ஆண்களைத் தொடுவதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. இதை மார்க்த்தின் பெயரால், முஸாபஹா என்று கூறி ஹஜ்ஜுக்குச் சென்று வந்த ஹாஜிகள் செய்வது தான் கொடுமை!

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(திருக்குர்ஆனின் 60:10 முதல் 12 வரையிலான) இந்த வசனங்களின் கட்டளைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறை நம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள். இந்த (வசனத்திலுள்ள) நிபந்தனையை இறை நம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக் கொண்டாரோ அவரிடம், “உன் விசுவாசப் பிரமாணத்தை நான் ஏற்றுக் கொண்டேன்” என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வழங்கும் போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், “நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்” என்று அவர்கள் வாய் மொழியாகவே தவிர வேறு எந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.

நூல்: புகாரி 4891, 2713

நபித்தோழியரிடம் விசுவாசப் பிரமாணம் எடுக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி தான் விசுவாசப் பிரமாணம்! இதை அல்குர்ஆன் 48:10 வசனத்தில் காணலாம். அத்தகைய விசுவாசப் பிரமாணத்தைக் கூட நபி (ஸல்) அவர்கள் பெண்களின் கையைப் பிடித்து எடுத்ததில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.

ஆனால் முஸ்லிம் சமுதாயத்தில், இஸ்லாத்தின் பெயரால் முரீது வியாபாரம் செய்யும் ஷைகுகள் பைஅத் என்ற பெயரிலும், ஹஜ்ஜுக்குச் சென்று வரும் ஹாஜிகள் முஸாபஹா என்ற பெயரிலும் பெண்களின் கையைப் பிடித்து வருகின்றனர். இது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயலாகும்.

திருமணம் செய்து கொள்வதற்குத் தடுக்கப்பட்ட உறவுமுறைகளான தந்தை, சகோதரன், மகன், தாய் தந்தையின் சகோதரர்கள், சகோதர சகோதரியின் மகன்கள் போன்றவர்களையும், கணவனையும் தவிர வேறு எவரிடமும் பெண்கள் முஸாபஹா செய்யக் கூடாது

(குறிப்பு: 2004 மார்ச் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை)