Tamil Bayan Points

பெண்கள் உலகக் கல்வி கற்கலாமா?

கேள்வி-பதில்: பெண்கள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

பெண்கள் உலகக் கல்வி கற்கலாமா?

இஸ்லாமிய மார்க்கம், கல்வியின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பேசவில்லை. பொதுவாகவே பேசுகிறது. திருக்குர்ஆனில் கூறப்படும் கட்டளைகள் உபதேசங்கள் பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை. கல்வியாளர்களுக்கு ஏராளமான சிறப்புகள் இருப்பதாக குர்ஆன் கூறுகிறது.

يَرْفَعْ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ(11)58

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் (58 : 11)

يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُوْلُوا الْأَلْبَابِ(269)2

தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடை யோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.

அல்குர்ஆன் (2 : 269)

மேலும் அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில், அடிமைப் பெண்களுக்கும் கூட நபி (ஸல்) அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.

“மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்) இரண்டு விதக் கூலிகள் உண்டு. ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்குக் கல்வியைக் கற்பித்து, அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து அவளை மணந்து கொண்டவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரீ (97)

இது போன்ற செய்திகள் மூலம், நபிகளார் பெண்களை எழுதப் படிக்க ஆர்வமூட்டிருக்கிறார்கள் என்பதையும் அதை ஆட்சேபணை செய்யவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் கல்வி இல்லாத காரணத்தால் தான் இன்று பெண்கள் பரவலாக ஏமாற்றப்படுகிறார்கள்.

படிப்பு அவர்களிடம் இருக்குமானால் அதன் மூலம் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும். மேலும் மார்க்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இவை பேருதவியாக இருக்கும்.

எனவே பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை! மாறாக ஆர்வமூட்டவே செய்கிறது.

ஆனால் இஸ்லாமிய நெறிமுறைகளை மீறாத வகையிலும் நமது உயிருக்கும் மானத்துக்கும் உலை வைக்காமல் கல்வி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும்.

கண்ணை விற்று சித்திரம் வாங்குவதில் எந்தப் பயனும் இல்லை.

இந்த உரையைக் கேட்கவும்

இதையும் கேட்கவும்

இதையும் பார்க்கவும்