Tamil Bayan Points

பெண்கள் காது மூக்கு குத்தலாமா ?

கேள்வி-பதில்: பெண்கள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

பெண்கள் காது மூக்கு குத்தலாமா ?

அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுள்ள சட்டங்களில் காது மூக்கு குத்துவதும் ஒன்றாகும். சிலர் கூடும் என்றும் சிலர் கூடாது என்றும் கூறுகின்றனர். காது குத்தலாம் என்பதற்கோ காது குத்தக் கூடாது என்பதற்கோ நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை என்பதே இந்த கருத்து வேறுபாட்டிற்குக் காரணம்.

ஆனால் இது தொடர்பாக முடிவெடுப்பதற்கு வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளைக் கிழிப்பதும் அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது.

“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

அல்குர்ஆன் (4 : 119)

அல்லாஹ் வடிவமைத்ததில் மாற்றம் செய்யக் கூடாது என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது. காதுகளிலும் மூக்கிலும் துளையில்லாமலே அல்லாஹ் மனிதர்களை வடிவமைத்துள்ளான். காது மூக்கு குத்தினால் இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அடிப்படையில் காது மூக்கு குத்துவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ் படைத்த உறுப்புக்களில் மாற்றம் செய்வதை நபி (ஸல்) அவர்களும் தடை செய்துள்ளார்கள்.

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி (5931)

மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்ட காரியங்களை புரியம் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். இவர்கள் சபிக்கப்படுவதற்கான காரணத்தையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இறைவன் அளித்த உருவத்தை மாற்றம் செய்வது தான் இவர்கள் சபிக்கப்படுவதற்குக் காரணம். அப்படியானால் இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்வது என்ற அம்சம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவை அனைத்தும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

காது மூக்கு குத்துவதில் இந்த அம்சம் இருப்பதால் இது தடை செய்யப்பட்டதாகும்.

மேல கூறப்பட்ட காரியங்களைப் பெண்கள் அழகிற்காக செய்கிறார்கள். அழகிற்காக அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்யும் குணம் குறிப்பாக பெண்களிடம் இருப்பதால் பெண்களை நபியவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். மேலும் ஒரு பெண் தனது அலங்காரத்தை மார்க்கத்திற்கு உட்பட்டே அமைத்துக் கொள்ள வேண்டும். அழகைக் காரணம் காட்டி இது போன்ற காரியங்களைச் செய்ய முடியாது.

இன்றைக்கு காது குத்தும் பெண்கள் தங்களை அலங்கரிப்பதற்காகவே காது மூக்கு குத்திக் கொள்கிறார்கள். இந்தக் காரியத்தை செய்பவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். எனவே மேற்கண்ட செய்தி காது குத்தக் கூடாது என்ற கருத்துடன் கச்சிதமாக பொருந்திப் போகின்றது.

காதுகளிலும் மூக்கிலும் துளையிட்டு அதில் ஆபரணங்களைச் சேர்த்தால் தான் அழகான தோற்றம் வரும் என்று நாம் நினைப்பதால் காது மூக்கு குத்திக் கொள்கிறோம். காதுகளிலும் மூக்கிலும் துளை இருப்பது தேவையான ஒன்றாகும். இந்தத் தேவையான அம்சத்தை இறைவன் ஏற்படுத்தாமல் விட்டு விட்டான் என்றக் கருத்தை இந்தச் செயல் பிரதிபலிக்கின்றது. ஆனால் இவற்றில் துளையில்லாமல் பிறக்கும் மனிதன் அழகான தோற்றமுள்ளவன் என்றும் அல்லாஹ் சிறப்பாக படைக்கக் கூடியவன் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.

அல்குர்ஆன் (95 : 4)

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

அல்குர்ஆன் (23 : 14)

“அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு “பஅல்’ எனும் சிலையைப் பிரார்த்திக்கிறீர்களா?

அல்குர்ஆன் (37 : 125)

எனவே காது மற்றும் மூக்கில் துளையிடுவது இறைவனுடைய படைப்பில் குறைகாணுவதைப் பிரதிபலிப்பதால் இதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தச் சட்டம் தெரியாத நேரத்தில் குத்திக் கொண்டவர்கள் துளையை அடைக்க வேண்டியதில்லை. அதில் ஆபரணங்களை இட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் சஹாபிய பெண்கள் காதுகளில் தோடுகளை அணிந்திருந்ததார்கள். காது குத்துவதால் ஏற்பட்ட துளையை அடைக்க வேண்டுமென்றோ அத்துளையில் ஆபரணங்களை அணியக் கூடாது என்றோ நபி (ஸல்) அவர்கள் அப்பெண்களுக்குக் கூறவில்லை. மாறாக ஒப்புதல் வழங்கினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (98)

காது குத்தலாம் என்று கூறுபவர்கள் மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று குர்ஆனும் ஹதீஸும் கூறுகிறது. காது மூக்கு குத்துவது அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வது தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியானால் மேற்கண்ட ஹதீஸை இதற்கு முரணில்லாத வகையில் விளங்க வேண்டும்.

நாம் முன்பு கூறியதைப் போல் சட்டம் தெரியாமல் இருக்கும் நேரத்தில் காது குத்தியிருந்தால் துளையிடப்பட்ட அந்த காதில் ஆபரணங்களை போடுவதை நபியவர்கள் தடை செய்யவில்லை என்ற விளக்கமே இந்த ஹதீஸிற்குப் பொருந்திப் போகின்றது.

ஏனெனில் நபியவர்களுக்கு முன்னிலையில் யாராவது காதுகுத்தியதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மேற்கண்ட ஹதீஸில் கூட பெண்கள் நபியவர்களுக்கு முன்னால் காது குத்தியதாக கூறப்படவில்லை. ஏற்கனவே காது குத்திய பெண்கள் குத்திய காதுகளோடு நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் காட்சிதந்தார்கள் என்றே ஹதீஸ் கூறுகிறது.

மார்க்கச் சட்டத்தை அறிவதற்கு முன்னால் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியத்தை ஒருவர் செய்தால் அதற்காக அவர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார். தவறு என்று தெரிந்த பிறகு செய்தாலே அவர் குற்றவாளியாவார். இது ஒரு பொதுவான அடிப்படை விதி.

ஆபரணங்களைக் காதில் தொங்க விடுவதை மார்க்கம் தடை செய்யவில்லை. இறைவன் படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்ற காரணத்தக்காகத் தான் காது குத்தக் கூடாது என்று கூறப்படுகின்றது. ஒருவர் சட்டம் தெரியாமல் குத்திவிட்டால் துளையிடப்பட்ட காதை அவர் என்ன செய்வது? சட்டம் தெரிந்த பிறகு முன்பு துளையிட்ட காதில் ஆபரணங்களை அணிவது எந்த அடிப்படையிலும் தவறல்ல.

எனவே காது மூக்கு குத்தக்கூடாது என்ற மார்க்கச் சட்டம் தெரிந்த பிறகு அதை குத்துவது கூடாது. சட்டம் தெரியாத நேரத்தில் குத்தியிருந்தால் அதில் ஆபரணங்களை தொங்க விடுவதற்குத் தடையில்லை.

இது குறித்து ஆடியோ உரையைக் கேடக ஆடியோ1 ஆடியோ2