Tamil Bayan Points

பெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாதா?

கேள்வி-பதில்: பெண்கள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

பெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாதா?

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிப்பார்கள்.

(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை, மற்றும் கழுத்து, நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.

அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (4316)

இதுதான் நீங்கள் குறிப்பிட்ட நபிமொழி. இதில் இடம் பெற்றிருக்கும் அவர்களது தலை,மற்றும் கழுத்து, நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும் என்ற வாசகத்தை வைத்துத் தான் நீங்கள் கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.

ஒட்டகத்தின் முதுகில் முக்கோண வடிவத்தில் உயர்ந்து இருக்கும் பகுதிக்குத் தான் திமில் (அஸ்மினத்) என்று கூறப்படும். தலையில் கூடுதலான பொருட்களை வைத்து ஒட்டகத் திமில்கள் போல் தலையை ஆக்கிக் கொள்பவர்களை இந்தச் செய்தி குறிப்பிடுகிறது என்று நபிமொழி விரிவுரையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஒரு சிலர், தலையில் திமில்களைப் போன்று கொண்டை வைப்பதைக் குறிக்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

முடியை வைத்தோ அல்லது வேறு பொருட்களை வைத்தோ ஒட்டகத் திமில்கள் போல் தலையை மாற்றிக் கொள்வதை இந்த நபிமொழி கண்டிக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டு கருத்துக்கும் இடமளிக்கும் வண்ணமே இந்த நபிமொழி இருக்கிறது. எனவே அந்நிய ஆண்களை ஈர்க்கும் வண்ணம் தலையை கூடுதலான பொருட்களை வைத்து உயர்த்தி வலம் வருவது தவறாகும்.

சாதாரணமாக தலையில் இருக்கும் முடியை வைத்துக் கொண்டை கட்டினால் ஒட்டகத் திமில் போல் உயரமாக இருக்காது. எனவே இவற்றைத் தடை செய்ய முடியாது. மேலும் சாதாரணமாக கொண்டை போடுபவர்கள் தலையின் பின்புறமே போடுவார்கள். நபிமொழியில் தடை செய்யப்பட்டது, ஒட்டகத் திமில்கள் போல் உள்ளதைத் தான். ஒட்டகத் திமில்கள் வானத்தை நோக்கி இருக்கும். இவ்வாறு வானத்தை நோக்கி இருக்கும் வண்ணம் ஒரு சிலர் உயரமாகக் கொண்டை போடுவதையே இது குறிக்கும்.