Tamil Bayan Points

பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் குளிக்கலாமா?

கேள்வி-பதில்: பெண்கள்

Last Updated on December 18, 2023 by

பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் குளிக்கலாமா?

பெண்கள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்களுக்குச் சென்று குளிப்பது தவறில்லை. ஆனால் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நீச்சல் குளத்தின் பொறுப்பாளர் உட்பட எந்த அந்நிய ஆணும் அவர்கள் குளிப்பதைப் பார்க்க முடியாதவாறு பாதுகாப்பு இருக்க வேண்டும்.

பெண்களோடு குளிக்கும் போது தனது அந்தரங்கப் பகுதிகளை மற்ற பெண்களிடம் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து நீச்சல் குளத்தில் குளிப்பது தவறல்ல.

பாதுகாப்பான சூழ்நிலை இருந்தாலும் பெண்கள் நீச்சல் குளங்களுக்கு அறவே செல்லக்கூடாது என்று சிலர் தவறாகக் கூறுகின்றனர். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அபுல் மலீஹ் அல்ஹதலீ கூறுகிறார்:

ஹிம்ஸ் அல்லது ஷாம் நாட்டைச் சார்ந்த சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “உங்கள் பெண்களை குளியல் குளங்களுக்கு நீங்கள் தான் அனுப்புகின்றீர்களா? “ஒரு பெண் தன்னுடைய கணவன் வீடு அல்லாத வேறு இடத்தில் தன் ஆடையை (கழற்றி) வைத்தால் அவள் தனக்கும் தன்னுடைய இறைவனுக்கும் இடையேயுள்ள திரையைக் கிழித்து விடுகிறாள்‘ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள். 

நூல்: திர்மிதீ-2727

இந்தச் செய்தியை சரியான அடிப்படையில் புரிந்து கொண்டால் இவர்கள் கூறும் கருத்துக்கு இது ஆதாரமில்லை என்பதை அறியலாம். ஆயிஷா (ரலி) அவர்கள் குளிப்பது தொடர்பாக இதைக் கூறினாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தை எதுவென நாம் பிரித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு பெண் தன்னுடைய கணவன் வீடு அல்லாத வேறு இடத்தில் தன் ஆடையை (கழற்றி) வைத்தால் அவள் தனக்கும் தன்னுடைய இறைவனுக்கும் இடையேயுள்ள திரையைக் கிழித்து விடுகிறாள்.

–இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன வாக்கியமாகும். பெண்கள் ஆடையை அவிழ்ப்பது பற்றித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆடையை அவிழ்க்காமல் குளிக்கும் நிலை இருந்தால் அதை இந்தத் தடை கட்டுப்படுத்தாது.

மேலும் கணவனுடைய வீடு என்றால் வீடு என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. “கணவன் அல்லாத மற்றவர்கள் முன்னால்’ என்று தான் பொருள் கொள்ள வேண்டும்

கணவனும் மனைவியும் வேறு ஒரு உறவினரின் வீட்டுக்குச் செல்கின்றனர். இது கணவனுடைய வீடு இல்லை. இந்த வீட்டில் கணவன் முன்னால் மனைவி ஆடையை அவிழ்க்கக் கூடாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். கணவன் முன்னால் என்பதைத் தான் கண்வன் வீடு என்ற சொல்லால் நபிகள் நாயகம் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அடுத்தவர் வீடு என்ற காரணத்தால் அங்கு பெண்கள் குளிக்கவோ அல்லது கணவனுக்கு முன்னிலையில் ஆடை அவிழ்க்கக் கூடாது என்றோ யாரும் கூறுவதில்லை. பாதுகாப்பு ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு இதை அனுமதிக்கின்றனர்.

பெண்கள் நவீன நீச்சல் குளத்தில் அன்னியர்கள் பார்க்காமலும் ஆடை அவிழ்க்காமலும் குளிக்கும் நிலை இருந்தால் அங்கே குளிப்பது தவறல்ல. இன்றைக்குப் பெண்களுக்கான நவீன பாதுகாப்பான நீச்சல் குளங்கள் இருப்பதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. குளம், குட்டை போன்ற நீர் நிலைகளே பொது இடங்களில் இருந்தது. அங்கு சென்று பெண்கள் குளித்து வந்தனர்.

இவர்கள் குளிப்பதை அந்நிய ஆண் பார்க்க நேரிடும் என்பதால் பாதுகாப்பற்ற இது போன்ற நீர்நிலைக்குச் சென்று குளிக்கக் கூடாது என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் தற்போது இஸ்லாமியப் பெண்கள் ஆறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று அரை குறை ஆடையுடன் குளிக்கக் கூடாது என்று கூறலாமே தவிர பாதுகாப்புள்ள இடங்களுக்கும் செல்லக்கூடாது என்று கூற முடியாது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி பகுதி ஒதுக்கப்பட்டு மறைக்கப்பட்டு இருந்தால் அப்போது இது தவறாகாது.

குற்றாலம் போன்ற இடங்களிலும் தீம் பார்க்குகளிலும் ஆண்கள் பார்வையில் படாமல் பெண்கள் குளிக்க முடியாது என்பதால் அதுபோன்ற இடங்களில் குளித்து ஆண்களின் காட்சிப் பொருளாக ஆகக் கூடாது. ஆனால் இன்று விடுதிகளில் தங்கும் தம்பதிகள் கூட ரகசியமாகப் படம் பிடிக்கப்படுகின்றனர். அது போல் குளியலறையிலும் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *