Tamil Bayan Points

பெண்கள் முகத்தை மறைக்க ஆதாரம் இருக்கிறதே?

கேள்வி-பதில்: பெண்கள்

Last Updated on September 26, 2017 by Trichy Farook

பெண்கள் முகத்தை மறைக்க ஆதாரம் இருக்கிறதே?

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 59)

மேற்கண்ட வசனத்தில் முக்காடுகள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில் ஜலாபீப் என்ற பன்மைச் சொல் இடம் பெற்றுள்ளது. ஜில்பாப் என்பது இதன் ஒருமையாகும்.

இச்சொல்லுக்கு போர்வை விசாலமான துணி கீழாடை நீளங்கி எனப் பல பொருள் உள்ளது.

இந்த வசனத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. மாறாக பெண்கள் தங்கள் உடலை மறைக்க வேண்டும் என்று பொதுவாகத் தான் கூறப்படுகின்றது.

பெண்கள் முகம் மணிக்கட்டு வரை முன் கைப்பகுதி மற்றும் பாதம் ஆகிய குறிப்பிட்ட பாகங்களை வெளிப்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். எனவே இந்த பாகங்கள் உடலை மறைக்க வேண்டும் என மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்ட சட்டத்திலிருந்து விதிவிலக்கலானவை.

இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் தரப்பட்டுள்ளது.

அடுத்து ஆயிஷா (ரலி) அவர்கள் நபித்தோழர்களிடமிருந்து தனது முகத்தை மறைத்தார்கள் என்பதால் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற வாதம் தவறனாது. ஏனெனில் இது நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டுமே உரிய ஹிஜாபின் சட்டமாகும்.

எனவே, நபியின் மனைவிமார்களைத் தவிர, மற்ற பெண்கள் முகத்தை மறைப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. 

திருத்திக் கொள்ளப்பட்ட சட்டம்:

இதற்கு முன்னால், முகத்தை மறைப்பதற்கும் மறைக்காமல் இருப்பதற்கும், மறைப்பதற்கும் அனுமதி உண்டு என்று கூறியிருந்தோம்.  அதாவது, ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் முகத்தை மறைத்தால் அது குற்றமில்லை. அதே போன்று முகத்தை அவள் வெளிப்படுத்தினாலும் குற்றமில்லை. முகத்தை மறைப்பது கட்டாயமில்லை என்று கூறியிருந்தோம்.  பிறகு இதனை மறு ஆய்வு செய்த போது, இந்த வாதம் தவறு என்று விளங்கிய காரணத்தினால், நபியின் மனைவிமார்களைத் தவிர, மற்ற பெண்கள் முகத்தை மறைப்பதற்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை என்பதே நமது தற்போதைய இறுதி நிலைப்பாடு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.