Tamil Bayan Points

பொறுமையின் எல்லை என்ன?

கேள்வி-பதில்: பண்பாடுகள்

Last Updated on November 22, 2020 by Trichy Farook

பொறுமையின் எல்லை என்ன?

இஸ்லாத்தில் எந்த அளவு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்?

முஹம்மத் இஸ்மாயீல்

பொறுமை என்பது இரு வகைப்படும்.

ஒன்று அல்லாஹ் நமக்குத் தரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது. நூறு சதவிகிதம் இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். துன்பத்தை முறையிட்டாலும் அழுதாலும் அல்லாஹவை விமர்சிக்காமல் இருந்தால் நாம் பொறுமையைக் கடைபிடித்தவர்களாவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அழுதுள்ளனர்.

ஆனால் மனிதர்கள் நமக்கு அநியாயம் செய்யும் போது பொறுமை காக்க வேண்டுமென்பது கட்டாயம் அல்ல.

நாம் விரும்பினால் பதில் நடவடிக்கையில் இறங்கலாம். விரும்பினால் மன்னிக்கலாம். மன்னிப்பதே சிறந்தது.

பின்வரும் வசனங்களை வாசிக்கவும்

உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:194

போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்” என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன்22:39

இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யாரேனும் தாம் துன்புறுத்தப்பட்டது போல் (அதற்குக் காரணமானவர்களைத்) துன்புறுத்தும் போது அதற்காக அவர் மீது மீண்டும் அநீதி இழைக்கப்பட்டால் அல்லாஹ் அவருக்கு உதவுவான். அல்லாஹ் மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.

திருக்குர்ஆன்22:60

அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன்4:148

தீமையின் கூலி அது போன்ற தீமையே. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்.. தமக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் யார் உதவி பெறுகிறாரோ அவருக்கு எதிராக எந்த வழியும் இல்லை.மக்களுக்கு அநீதி இழைத்து நியாயமின்றி பூமியில் வரம்பு மீறுவோருக்கு எதிராகவே குற்றம் பிடிக்க வழி உண்டு. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.

திருக்குர்ஆன்42:40-43

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்” என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்” என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன்24:22