Tamil Bayan Points

மஹர்  ஒரு கட்டாயக் கடமை

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

Last Updated on September 17, 2023 by Trichy Farook

மஹர்  ஒரு கட்டாயக் கடமை

மஹர் என்பது எந்த அளவுக்கு மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு நபியவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சஅத் (ரலி), “நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!’’ எனக் கூறினார்.

அப்போது நான், “இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?’’ எனக் கேட்டேன். அவர், “கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது!’’ என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் (நான் வருவதைப் பார்த்த) நபி (ஸல்) அவர்கள், “நீ மண முடித்து விட்டாயா?’’ என்று கேட்டார்கள்.

நான் “ஆம்!’’ என்றேன். “யாரை?’’ என்றார்கள். “ஓர் அன்ஸாரிப் பெண்ணை!’’ என்றேன். “எவ்வளவு மஹ்ர் (மணக்கொடை) கொடுத்தாய்?’’ என்று கேட்டார்கள். “ஒரு பேரீச்சங்கொட்டை எடைக்குத் தங்கம்!’’ என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஓர் ஆட்டையேனும் (அறுத்து வலிமா-) மணவிருந்தாக அளிப்பாயாக!’’ என்றார்கள்.

நூல்: புகாரி-2048 , 2049, 3780, 5153

இந்தச் செய்தியில் நபியவர்கள் கேட்ட கேள்வி திருமணம் முடித்தாயா? என்றுதான். ஆம் என்றதும் அடுத்த கேள்வியே மஹர் எவ்வளவு? என்றுதான். இதிலிருந்து ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் முடிப்பதாக இருப்பின் பெண்ணுக்குக் கட்டாயக் கடமையாக மஹரைக் கொடுத்துவிட வேண்டும் என்று தெரிகிறது.

எனவே வரதட்சணைக்கு எதிராக ஒட்டுமொத்த சமூகமும் பொங்கி எழவேண்டும். பயங்கரமான, மிகவும் பாரதூரமான கொடூரங்களை விளைவிக்கும் இந்த வரதட்சணையை ஒழித்துக் கட்டினால்தான் நம் குடும்பங்கள் இஸ்லாமியக் குடும்பங்களாக மாறும்.

அஸ்திவாரமே தவறாக இருந்தால் மற்றவை சரியாகாது. அதாவது மனைவியாக ஆக்கும் போதே ஹராமான வழியிலும் பெண்ணுக்கு அக்கிரமம் செய்தும் திருமணம் முடித்தால் எப்படி வாழ்க்கை சரியாக இருக்க முடியும்? எனவே இந்தக் கொடுமைக்கு எதிராக பெற்றோர்களையும் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் பெற்றோர்களை எதிர்ப்பதால் இஸ்லாமிய மார்க்கத்தில் குற்றம் பிடிக்கப்படாது. ஏனெனில் மறுமை நாளில் நம் பெற்றோர்கள் நம்மைக் காப்பாற்ற முடியாது. இறைவனிடம் நாம்தான் பிடிபடுவோம் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

எனவே மறுமை வாழ்க்கை சம்பந்தப்பட்டதில், அல்லாஹ் சம்பந்தப்பட்டதில், மார்க்க சம்பந்தப்பட்டதில் தாய் பிள்ளை என்றோ, கணவன் மனைவி என்றோ இறைவனிடம் பதில் சொல்லித் தப்பிக்கவே முடியாது. அதே நேரத்தில் உலக விஷயத்தில் தாய் தந்தையரை அனுசரித்து, அவர்களுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். ஆனால் அல்லாஹ் விஷயத்தில், அல்லாஹ்வா? தாய் தந்தையரா? என்ற நிலை வருமானால், உண்மையான முஸ்லிம்கள் அல்லாஹ்வைத்தான் தேர்வு செய்யவேண்டும்.

அதே போன்று இன்னும் சிலர், பெண் வீட்டாரிடம் நாம் கேட்காமல் அவர்களாகவே விரும்பித் தந்தால் வாங்குவது குற்றமில்லை என வாதிடுகின்றனர். இத்தகையோர் பணக்கார வீடுகளைத் தேடிச் சென்று அல்லது எவர்கள் வரதட்சணை தரத் தயாராக உள்ளார்களோ அந்த மாதிரி பெற்றோர்களைத் தேடிச் சென்று பெண்களை மணம் முடிக்கின்றனர்.

உங்கள் பெண்ணுக்குத் தானே நீங்கள் நகை நட்டுக்களைப் போடுகிறீர்கள், நீங்களாகப் பார்த்து ஏதாவது செய்யுங்கள், நாங்கள் கேட்கமாட்டோம் என்றெல்லாம் மறைமுகமாக வரதட்சணை கேட்கும் கூட்டங்கள் ஆங்காங்கே இருக்கிறது. அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆனில் அல்லாஹ் மஹர் கொடுப்பதை எந்த அளவிற்கு வலியுறுத்தி சொல்கிறான். 

மஹர் கொடுத்தல் ஓர் கட்டாயக் கடமை:

وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً‌

பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்’.

(அல்குர்ஆன்: 4:4)

பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குவது கட்டாயக் கடமையாகும்:

ஆதாரம்: (அல்குர்ஆன்: 4:4 , 4:24, 4:25, 4:127, 5:5, 28:27, 33:50, 60:10

மஹர் தொகைக்கு அளவு கிடையாது:

ஒரு பொற்குவியலையே மஹராகக் கொடுக்கலாம். 

وَاِنْ اَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْـــًٔا‌ ؕ اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا‏

ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?

(அல்குர்ஆன்: 4:20)

ஆகவே திருக்குர்ஆன் வழிகாட்டிய அடிப்படையிலும் நபிகளார் வழிகாட்டிய அடிப்படையிலும் மஹர் வழங்கி மனமுடிப்போமாக! அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!