Tamil Bayan Points

மஹர் கொடுப்பதும் கூலி கொடுத்து விபச்சாரம் செய்வதும் ஒன்றா?

கேள்வி-பதில்: இல்லறம்

Last Updated on May 8, 2021 by Trichy Farook

மஹர் கொடுப்பதும் கூலி கொடுத்து விபச்சாரம் செய்வதும் ஒன்றா?

21:18. உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம்.  அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள்
(தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்…

17:37. பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து,  மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!…

 

ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்! 

யாரிடம் விபச்சாரம் செய்கிறானோ அவள் இவனுக்கு மட்டும் உரியவளாக மாட்டாள். இவனைப் போல் இன்னும் பலருக்கு படுக்கை விரிப்பாள்.
ஆனால் மஹர் கொடுப்பதன் மூலம்  ஒரு பெண் வேறு யாருக்கும் சொந்தமாகாமல் தடுக்கப்படுகிறாள்.

இந்த அடிப்படை வேறுபாடு புரியாமல் இப்படி அவர் கேட்டுள்ளார். விபச்சாரம் மூலம் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதில் சொற்ப  நேர இன்பம் பெறுவதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.

அந்த உறவு முடிந்தவுடன்  இருவருக்குமான மொத்த உறவும் முடிந்து விடுகிறது. விபச்சாரத்தில் உடல் சுகம் அனுபவிப்பது ஒன்றே நோக்கம். ஆனால் இஸ்லாம் மஹர் கொடுத்து திருமணம் செய்யச் சொல்வதில் உடலின்பம் மாத்திரம் நோக்கமன்று.

 

சாகும் வரை பொறுப்பாளி

அத்துடன் அவர்களுடைய பந்தம் முடிந்துவிடுவதுமில்லை. அதையும் தாண்டி ஏராளமான விஷயங்கள் இஸ்லாம் கூறும் திருமணத்தில் உள்ளன.
ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதின் மூலம் அவளின் முழுப் பாதுகாப்புக்கு அந்த ஆண் பொறுப்பாகிறான். அவன் சாகும் வரையிலும் அவளுக்காக உழைத்து, சம்பாதித்து அவளின் உணவு, இருப்பிடம், உடை, ஆரோக்கியம் போன்ற சகலத்திற்கும் பொறுப்பேற்று, அவளின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறான். அவள் மூலம், தான் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கும் அவனே பொறுப்பேற்று அவர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான்.

அதே போன்று அந்தப் பெண்ணும் தன் கணவனையும், குழந்தைகளையும் கவனிப்பதிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறாள். இவை யாவும் இஸ்லாம் கூறும் திருமண ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளது. இவ்வாறு குடும்ப மகிழ்ச்சிக்காக ஒவ்வொருவரும் செயல்படும் நல்லதொரு சூழல், அமைப்பு திருமண பந்தத்தில் காணப்படுகிறது. மேலும் திருமண பந்தத்தில் அந்தப் பெண்ணுக்கும், அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கின்றது.  இவற்றில் எந்த ஒன்றாவது விபச்சாரத்தில் உண்டா?

 

பாசம் மிக்க ஒரு உறவு 

திருமணத்தின் மூலம் ஆண், பெண் இருவருக்கும் மத்தியில்  இனம்புரியாத நேசமும் பாசப்பிணைப்பும் உண்டாகிறது. இந்த நேசத்தை இறைவனே ஏற்படுத்துகிறான்.

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும்,  இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் 30 : 21

விபச்சாரி உடல் நலக்குறைவாக இருந்தால், விபச்சாரம் செய்பவன் வேறு விபச்சாரியிடத்தில் செல்வான், அந்த விபச்சாரிக்கு மருத்துவம் பார்க்கவோ, அவளுக்காக கவலைப்படவே மாட்டான்.

கணவனுக்கு ஒரு துன்பம் என்றால் மனைவியும் மனைவிக்கு ஒரு துன்பம் என்றால் கணவனும் பரிதவிப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். இத்தகைய கலப்பற்ற நேசம், பாசம் எல்லாம் நிறைந்திருந்திருக்கிற இஸ்லாம் கூறும் திருமணமும் காசுக்காக உடலை விற்பதும் ஒன்றா?

 

சமூகத்தை சீரழிக்கும் விபச்சாரம்

திருமண உறவின் மூலம் குழந்தைகள் பெற்று, அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்கள் மூலம் தங்களது சந்ததிகளைப் பெருகச் செய்து அதில் மகிழ்ச்சி அடைவதும் நோக்கமாக உள்ளது. இது தான் இயற்கை நியதியும், இறை நியதியுமாகும். சமூக அமைப்பைக் கட்டமைக்கக் கூடிய வழிமுறை திருமணமாகும். இந்தத் திருமணத்தால் சமூகத்திற்கு நன்மை தானே தவிர எந்த தீங்கும் ஏற்படுவதில்லை.

ஆனால் முறைகேடான ஆண்- பெண் உறவுகள் குடும்ப அமைப்பைத் தகர்க்கக் கூடியவையாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் ஈனச் செயலாகும். இவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. இன்று உலகையே அச்சுறுத்தும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸ் வருவதற்கு காரணமே முறைகேடான பாலியல் உறவுகள் தான் என்பதை அறியாதவர் எவரும் இல்லை.

மன நோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடை செய்துள்ளது சமூகத்திற்கு நன்மை பயக்கும், சமூக அமைப்பை தழைக்கச் செய்யும் திருமணமும், சமூகத்தைச் சீரழித்து சின்னாபின்னமாக்கும் விபச்சாரமும் ஒரு போதும் சமமாகாது. இப்படி திருமணத்திற்கும் விபச்சாரத்திற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.

மஹரும் கூடாது எனில், ஜீவனாம்சம் என்பது என்?

திருமண முறிவு ஏற்படும் போது பெண்களுக்கு ஜீவனாம்சம் என்ற தொகை வழங்கப்பட்டு வருவது பல சமுதாயங்களில் பரவலாக உள்ளது. இஸ்லாம் இத்தகைய ஜீவனாம்சத்தை வழங்கச் சொல்லவில்லை. மாறாக திருமணத்திற்கு முன்பே பெண்களுக்குக் கணிசமான ஒரு தொகையை வழங்கி விடுமாறு இஸ்லாம் கூறுகிறது.

இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.

இன்றைய நடைமுறையில் உள்ள ஜீவனாம்சத்தை விட இஸ்லாம் வழங்குகின்ற முன் ஜீவனாம்சம் என்ற மஹர் பாதுகாப்பானது; உத்திரவாதமானது.  மணமுறிவுக்கு பின் தந்தால், அதில் நேர்மை இருக்காது, வேண்டா வெறுப்பாக சிறிதளவு தருவான், அல்லது அதையும் தராமல் ஏமாற்ற நினைப்பான்.

பெண்களுக்கு அவர்களின் மஹர் தொகையை மனமுவந்து வழங்கி விடுங்கள்  என்பது குர்ஆனின் கட்டளை. (அல்குர்ஆன் 4:4)

மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும்  பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.

ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தாலும் அதனைத்  திரும்பப் பெறலாகாது எனவும்  குர்ஆன் கட்டளையிடுகின்றது. (அல்குர்ஆன் 4:20)

 

சரி, மஹர் ஏன் தரவேண்டும்? 

ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும்; பெண்களிடம்  வரதட்சணை கேட்கக் கூடாது என்று இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகிறது.

பெண்களுக்கு மஹர் தரவேண்டும் என்ற கட்டளையிலேயே அவர்களிடமிருந்து எதையும் கேட்கக் கூடாது என்று இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகிறது.

இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமான தீர்ப்பாகும்.  இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இன்பம் அனுபவிக்கிறார்கள். இருவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் இன்பத்தை அனுபவிப்பதால்  யாரும் யாருக்கும் எதனையும் கொடுக்கத் தேவையில்லை தான். ஆனாலும் இந்த இன்பத்தை அடைவதற்காக பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர்.
எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.

# ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே இருக்கிறான். தனது தாய், தந்தையர் மற்றும் உறவினருடன் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.

# திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காக சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.

# இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண் தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை  அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே
அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.

# பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும்,  கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.

# அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.  பெண்களுக்கு ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதை  மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.

 

وَمَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ‌ ۚ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ اَوْلِيَآءَ مِنْ دُوْنِهٖ‌ ؕ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيٰمَةِ عَلٰى وُجُوْهِهِمْ عُمْيًا وَّبُكْمًا وَّصُمًّا‌ ؕ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ ؕ كُلَّمَا خَبَتْ زِدْنٰهُمْ سَعِيْرًا‏

அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம். (குர்ஆன் 17:97)