Tamil Bayan Points

மார்க்க முரணான காரியங்கள் நடக்கும் சபைகளில் பங்கேற்கலாமா?

கேள்வி-பதில்: பித்அத்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

மார்க்க முரணான காரியங்கள் நடக்கும் சபைகளில் பங்கேற்கலாமா?

மார்க்க முரணான சபைகளில் பங்கேற்பது

பிறமத சகோதரர்களின் திருமணம் மற்றும் இதர விசேஷங்களிலும், விருந்துகளிலும் கலந்து கொள்வது மார்க்கத்திற்கு முரணான காரியமா? அவர்கள் வரதட்சணை வாங்கித் திருமணம் முடித்தாலும் கலந்து கொள்ளலாமா?

பொதுவாக பிற மதத்தவர்களின் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் மற்றும் விருந்துகளில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறாவிட்டால் அதில் கலந்து கொள்வதில் தவறில்லை.

மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும் இடத்துக்குச் சென்றால் அதைத் தடுக்கும் கடமை நமக்கு உள்ளது. அவ்வாறு தடுக்க முடியாத பட்சத்தில் அங்கு செல்லாமல் இருப்பது அவசியம்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

தீமைகள் நடக்கும் ஒரு சபையில் நாம் பங்கேற்றால் அத்தீமையை நாம் செய்யாவிட்டாலும் அல்லாஹ்வின் பார்வையில் நாமும் அதில் பங்காளிகளாகக் கருதப்படுவோம். எனவே தீமை நடக்கும் எந்தச் சபைக்கும் நாம் செல்லக் கூடாது.

صحيح مسلم حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ – وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ – قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ.

‘உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : முஸ்லிம் 70

வரதட்சணை ஒரு சமூகக் கொடுமை என்பதை யாரும் மறுக்க முடியாது. இது போன்ற தீமைகளை விட்டு வெறுத்து ஒதுங்குவது தான் ஈமானில் மிகப் பலவீனமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதைக் கூட செய்யாமல் இந்தத் திருமணங்களில் கலந்து கொண்டு விருந்து சாப்பிடுவது ஈமானுக்கே பங்கம் விளைவிக்கின்ற விஷயம்.

மனிதாபிமானமற்ற முறையில் பெண் வீட்டில் வரதட்சணை வாங்குவோரிடம் அதைத் தீமை என்று உணர்த்துவது எப்படி? அவன் தருகின்ற விருந்தைச் சாப்பிட்டு விட்டு உணர்த்த முடியுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

முஸ்லிம் அல்லாதவர்களின் திருமணமாக இருந்தாலும் அதே சட்டம் தான். அவர்களுக்கும் இது ஒரு சமூகக் கொடுமை என்பதை உணர வைப்பதற்காக இந்தத் திருமணங்களைப் புறக்கணித்தே ஆக வேண்டும்.