Tamil Bayan Points

11) மாற்றாரின் வாதங்கள்

நூல்கள்: நபித் தோழர்களும் நமது நிலையும்

Last Updated on December 12, 2019 by

மாற்றாரின் வாதங்கள்

திருக்குர்ஆனும், நபிவழியும் மட்டுமின்றி நபித்தோழர்களையும் நாம் பின்பற்ற வேண்டும் என்று வாதிடுவோர் தமது வாதத்தை நிலைநாட்ட சில சான்றுகளை முன் வைக்கிறார்கள்.

நபித்தோழர்களின் நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு திருக்குர்ஆனும், நபிமொழிகளும் கட்டளையிடுவதால் தான் நாங்கள் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என வாதிடுகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் பின்பற்றுதல்

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன் 9:100

மார்க்கத்துக்காக மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களையும், ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தவர்களுக்கு உதவியவர்களையும் இவ்வசனம் புகழ்ந்து பேசுவதுடன் அவர்களைப் பின்பற்றியவர்களையும் புகழ்ந்து பேசுகிறது. அவர்களைப் பொருந்திக் கொண்டதாகவும் அவர்களுக்காக சொர்க்கம் தயார் நிலையில் உள்ளதாகவும் இவ்வசனம் கூறுகிறது.

நபித் தோழர்களைப் பின்பற்றுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டதால் தான் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம் என அவர்கள் வாதிடுகின்றனர்.

இவ்வசனத்தை உரிய கவனத்துடன் அணுகாத காரணத்தால் தங்களின் தவறான கொள்கைக்கு இதை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

பின்பற்றுதல் என்ற சொல், பயன்படுத்தப்படும் இடத்துக்கு ஏற்ப பொருள் தரும் சொல்லாகும்.

குறிப்பிட்ட மனிதனின் பெயரைப் பயன்படுத்தி அவனைப் பின்பற்றி நடங்கள் எனக் கூறப்பட்டால் எல்லா வகையிலும் அவனைப் பின்பற்றுங்கள் எனப் பொருள் வரும்.

ஒரு மனிதனின் பதவி, தகுதியைக் குறிப்பிட்டு அவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டால் அந்தத் தகுதியுடன் தொடர்புடைய விஷயங்களில் அவரைப் பின்பற்றுங்கள் என்று பொருள் வரும். காவல்துறை அதிகாரியைப் பின்பற்றுங்கள் என்றோ காவல்துறை அதிகாரியான மூஸாவைப் பின்பற்றுங்கள் என்றோ கூறப்பட்டால் காவல்துறை அதிகாரி என்ற முறையில் அவருக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் பின்பற்றுங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். வியாபாரம், திருமணம், வணக்கம் போன்றவற்றில் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வராது.

கொடை வள்ளலை அல்லது கொடைவள்ளலான இப்ராஹீமைப் பின்பற்றுங்கள் எனக் கூறப்பட்டால் வாரி வழங்கும் தன்மையில் மட்டும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வரும். அவர் என்ன சொன்னாலும் கேளுங்கள்! அவர் என்ன செய்தாலும் அதையே செய்யுங்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

9:100 வசனத்தை எடுத்துக் கொள்வோம். இவ்வசனத்தில் எந்த மனிதரையும் பின்பற்றுமாறு கூறப்படவில்லை. மாறாக ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு தான் இவ்வசனம் கூறுகிறது.

அதாவது ஹிஜ்ரத் செய்வதில் யார் முந்திக் கொண்டார்களோ அவர்களைப் பின்பற்றி சிலர் தாமதமாக ஹிஜ்ரத் செய்தனர் என்பதே இதன் பொருள். உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களைப் பின்பற்றினார்கள் என்றால் உதவுவதில் அவர்கள் வழியில் சென்றார்கள் என்பது தான் பொருள்.

ஆரம்ப காலத்தில் ஹிஜ்ரத் செய்வதில் யார் முந்திக் கொண்டார்களோ அவர்கள் மட்டுமின்றி அவர்களைப் பின்பற்றி ஹிஜ்ரத் செய்தவர்களும் இறை திருப்திக்கு உரியவர்கள். இதே போல் ஆரம்ப கால அன்ஸார்கள் எவ்வாறு இறை திருப்திக்கு உரியவர்களோ அது போல் பிற்காலத்தில் உதவிய அன்ஸார்களும் இறை திருப்திக்கு உரியவர்களே என்பதைத் தான் 9:100 வசனம் கூறுகிறது.

முஹாஜிர்கள், அன்ஸார்கள் என அல்லாஹ் கூறுவது சஹாபாக்களைத் தான் என்றாலும் அவர்களைப் பின்பற்றுமாறு இதில் நமக்கு எந்தக் கட்டளையும் இல்லை. அவர்களை யார் பின்பற்றுகிறார்களோ என்று வருங்கால வினைச் சொல்லாக இறைவன் கூறாமல் பின்பற்றினார்களோ என்று இறந்த கால வினைச் சொல்லாகக் கூறுகிறான். பின்பற்றுகிறார்களோ என்று கூறினால் இப்போதும் அவர்களைப் பின்பற்றலாம் என்ற பொருள் வரும். பின்பற்றினார்களோ என்று கூறினால் இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னர் பின்பற்றி நடந்தவர்களைத்தான் அது குறிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

எனவே முஹாஜிர்கள், அன்ஸார்கள் என்பது எவ்வாறு நபித்தோழர்களைக் குறிக்குமோ அது போல் முஹாஜிர்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் அன்ஸார்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் நபித்தோழர்களைத் தான் குறிக்கும் என்பதையும் கவனிக்கத் தவறி விட்டனர்.

ஹிஜ்ரத் செய்வதிலும், ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு உதவுவதிலும் முந்திச் சென்றவர்களைப் பின்பற்றியவர்களைப் புகழ்ந்து பேசும் போது மற்றொரு நிபந்தனையையும் இறைவன் இணைத்துக் கூறுகிறான்.

அழகிய நல்ல முறையில் அவர்களைப் பின் தொடர்ந்தவர்கள் என்பது தான் அந்த நிபந்தனை.

முன்னதாக ஹிஜ்ரத் செய்தவர்களிடம் ஹிஜ்ரத்தின் போது தவறான காரியங்கள் நிகழ்ந்திருக்கலாம். அதைப் பின்பற்றக் கூடாது என்பதற்காகத் தான் அழகிய முறையில் பின் தொடர்ந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் எனக் கூறும் ஏராளமான ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் இவ்வசனத்தை விளங்கும் சரியான முறை இதுவேயாகும்.

முஹாஜிர்கள், அன்ஸார்கள் மார்க்கம் என்று எதைச் சொன்னாலும், செய்தாலும் அதை அப்படியே நாமும் பின்பற்ற வேண்டும் என்று பொருள் கொண்டால் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடைய வசனங்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படும். அல்லது நபித்தோழர்களுக்கும் வஹீ வந்தது என்ற நிலை ஏற்படும். இரண்டுமே தவறாகும்.

எனவே நபித்தோழர்களின் சொற்கள் செயல்கள் மார்க்க ஆதாரங்களாகும் என்ற கருத்தை இவ்வசனம் தரவில்லை என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

மாற்றுக் கருத்துடையவர்கள் இவ்வசனத்துக்கு அளிக்கும் விளக்கம் தவறு என்பதை இது போல் அமைந்த மற்றொரு வசனத்தின் மூலமும் நாம் அறிய முடியும்.

யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன்.

அல்குர்ஆன் 52:21

நம்பிக்கை கொண்ட பெற்றோரை அவர்களின் பிள்ளைகள் பின்பற்றுவது பற்றி இங்கே கூறப்படுகிறது.

9:100 வசனத்தை மாற்றுக் கருத்துடையவர்கள் விளங்கியது போல் இவ்வசனத்தையும் விளங்குவதாக இருந்தால் ஒவ்வொருவரும் தனது முஃமினான பெற்றோரைப் பின்பற்றலாம் என்ற கருத்து வரும். அதாவது ஸஹாபாக்களை மட்டும் பின்பற்றுவது அவசியம் இல்லை. தனது தாய் தந்தை எதை மார்க்கம் என்று கடைப்பிடித்தார்களோ அதையே நாமும் செய்ய வேண்டும் என்ற கருத்து வரும்.

ஆனால் இவ்வசனத்தை விளங்கும் போது மட்டும் அவர்களின் சிந்தனை சரியாக வேலை செய்கிறது.

சரியான முறையில் நம்பிக்கை கொண்ட பெற்றோரை அது போல் சரியான நம்பிக்கை கொண்டு பிள்ளைகளும் பின்பற்றினால் அவர்களின் கூலியைக் குறைக்காது அளிப்போம் என்பது தான் இதன் பொருள்.

பெற்றோரின் எல்லா நடவடிக்கைகளையும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல என இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு வசனங்களுக்கு வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதிலிருந்து அவர்களின் வாதம் தவறு என்பதை அறியலாம்.

என் தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள்

குர்ஆனையும், நபிவழியையும் பின்பற்றுவது போலவே நபித்தோழர்களின் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என வாதிடுவோர் பின்வரும் நபிமொழியையும் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.

என்னுடைய தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள் என்பதே அந்த ஹதீஸ்.

இந்த ஹதீஸ் பல்வேறு நபிமொழித் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

முனத் அப்துபின் ஹுமைத் என்ற நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு உமர் (ரலி) வாழியாக இதை ஹம்ஸா அன்னஸீபீ என்பவர் அறிவிக்கிறார். இவர் முற்றிலும் பலவீனமானவர்.

தாரகுத்னீ என்ற நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபிர், (நபித் தோழரான ஜாபிர் அல்ல) ஜமீல் பின் ஸைத் இவ்விருவரும் யாரென்று அறியப்படாதவர்கள் என்று தாரகுத்னியே கூறுகிறார். இதுவும் பலவீனமானதாகும்.

பஸார் என்ற நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. உமர் (ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துர் ரஹீம் பின் ஸைத் என்பார் பெரும் பொய்யர் ஆவார் என்று பஸார் கூறுகிறார். எனவே இந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல.

முனத் ஷிஹாப் என்ற நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி) வழியாக இதை ஜஃபர் பின் அப்துல் வாஹித் அல்ஹாஷிமி என்பார் அறிவிக்கிறார். இவர் பெரும் பொய்யராவார்.

ஜாமிவுல் இல்ம், அல்இஹ்காம் ஆகிய நூல்களிலும் ஜாபிர் (ரலி) வழியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாரி பின் ஹுஸைன் என்பார் வழியாக இது அறிவிக்கப் படுகிறது. இவர் யாரென அறியப்படாதவர் என்று இப்னு அப்துல் பர், இப்னு ஹம் ஆகியோர் கூறுகின்றனர்.

இந்தக் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல என்று அபூ பக்ர் அல்பஸார் கூறுகிறார். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கற்பனையான செய்தியாகும் என்று இப்னு ஹம் கூறுகிறார்.

இந்தக் கருத்தில் ஒரு அறிவிப்பு கூட நிரூபணமாக வில்லை என்று இப்னுல் கையும், இப்னு ஹஜர் ஆகியோர் கூறுகின்றனர்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் பொய்யர் களும், யாரென அறியப்படாதவர்களும் உள்ளதால் இது பலவீனமாக அமைவதுடன் இதன் கருத்து இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

எத்தனையோ விஷயங்களில் நபித்தோழர்கள் நேர்முரணான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அது அறவே சாத்தியமற்றதாகும். மது பானம் விற்பனை செய்வது ஹலால் என்று ஸமுரா பின் ஜுன்துப் என்ற நபித்தோழர் கூறியிருக்கிறார். நபித்தோழரில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்ற இந்தச் செய்தியின் அடிப்படையில் மதுபானம் விற்றால் அது சரியாகுமா? நோன்பு வைத்துக் கொண்டு ஐஸ் கட்டியைச் சாப்பிட்டால் நோன்பு முறியாது என்று அபூ தல்ஹா என்ற நபித்தோழர் கூறியுள்ளாரே! இதைப் பின்பற்ற முடியுமா? மனைவியுடன் கூடிய பின் விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பது அவசியம் இல்லை என்று அலி, உஸ்மான், தல்ஹா, அபூ அய்யூப், உபை பின் கஅப் ஆகியோர் கூறியுள்ளனரே! அதைப் பின்பற்ற முடியுமா? என்று அறிஞர் இப்னு ஹஸ்ம் அவர்கள் கேள்வி எழுப்புகிறார். மேலும் நபித்தோழர்களிடம் ஏற்பட்ட பல தவறான முடிவுகளையும் பட்டியலிடுகிறார்.

மேலும் நபித்தோழர்கள் நட்சத்திரங்கள் போன்றவர்கள். அவர்களில் யாரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்பதில் நட்சத்திரங்கள் அனைத்தும் வழிகாட்டுபவை என்ற கருத்து அடங்கியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சில் உண்மைக்கு மாறானவை இடம் பெறாது.

நட்சத்திரங்களில் மிகச் சில நட்சத்திரங்கள் தாம் இரவில் திசை காட்டக் கூடியதாகவும், நேரம் காட்டக் கூடியதாகவும் உள்ளது. மற்ற நட்சத்திரங்கள் எதற்கும் வழிகாட்டுவது இல்லை.

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு வழிகாட்டியோ அது போல் ஒவ்வொரு நபித்தோழரும் வழிகாட்டுவார்கள் என்ற உவமையும் தவறாக அமைந்துள்ளது.

மிகச் சிறந்த சமுதாயம்

உங்களில் சிறந்தவர்கள் என் காலத்தவர்கள். பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள். அதன் பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து உங்களுக்குப் பின் நாணயமாக நடக்காத மோசடி செய்பவர்களும், சாட்சியம் அளிக்க அழைக்கப்படாமலே சாட்சி கூறுபவர்களும், நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாதவர்களும் தோன்றுவார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் எனவும் கூறினார்கள்.

நூல் : புகாரி 2651, 3650, 6428, 6695

தமது காலத்தவரையும், அதற்கு அடுத்த காலத்தவரையும் மிகச் சிறந்த சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபித்தோழர்களை நாம் பின்பற்றலாம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதில் நபித்தோழர்களைப் பின்பற்றச் சொல்லும் வகையில் ஒரு வாசகமும் இல்லை. இதன் பொருள் என்ன? என்பதை இதன் இறுதியிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

அதாவது அந்தச் சமுதாயத்தில் நாணயம், நேர்மை, வாக்கை நிறைவேற்றுதல், வலியச் சென்று எதிலும் தலையிடாமல் இருப்பது போன்ற நற்பண்புகள் அதிக அளவில் இருக்கும். பிந்தைய சமுதாயத்தில் அது குறைந்து விடும் என்பது தான் அந்த விளக்கம்.

நபித் தோழர்களின் சிந்தனையிலும், தீர்ப்புகளிலும், முடிவுகளிலும், ஆய்வுகளிலும் எந்தத் தவறும் ஏற்படாது என்பதால் அவர்கள் சிறந்தவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அவர்களைப் பின்பற்றலாம் என்ற கருத்து அதனுள் அடங்கி இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

அவர்களின் நாணயம், நேர்மை காரணமாக சிறந்தவர்கள் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாணயமாகவும், நேர்மையாகவும் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களின் சிந்தனையில் தவறே ஏற்படாது என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

மேலும் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் எடுத்துக் காட்டிய ஏராளமான ஆதாரங்களுக்கு முரணாக இந்த ஹதீஸை நாம் விளங்கினால் நபித்தோழர்களுக்கும் இறைவனிடமிருந்து வஹீ வந்துள்ளது என்ற விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு விடும்.