Tamil Bayan Points

14) மிஃராஜ், பராஅத் நோன்பு இல்லை

நூல்கள்: நோன்பின் சட்டங்கள்

Last Updated on April 15, 2023 by

மிஃராஜ் நோன்பு இல்லை

ரஜப் மாதம் பிறை 27 அன்று மிஃராஜ் நோன்பு என்ற பெயரில் ஒரு நோன்பு நோற்கும் வழக்கம் தமிழக முஸ்லிம்களிடம் பரவலாகக் காணப்படுகின்றது.

அந்த நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதாகவோ, அல்லது பிறரை நோற்குமாறு கட்டளையிட்டதாகவோ எந்த ஒரு சான்றும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் நபித்தோழர்களின் காலத்திலும் இந்த நோன்பு நோற்றதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

எனவே இது பிற்காலத்தில் மார்க்கத்தைப் பற்றிய அறிவு இல்லாதவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பித்அத் ஆகும். இதைத் தவிர்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அது ரஜப் பிறை 27ல் தான் நடந்தது என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் சான்று இல்லை. எனவே மிஃராஜ் நடந்ததை நம்ப வேண்டுமே தவிர இன்ன தேதியில் நடந்ததாக நம்புவதும், அதற்காக நோன்பு நோற்பதும் மார்க்கத்தின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதாகும்

பராஅத் நோன்பு கூடாது

ஷஅபான் மாதம் 15ம் இரவு அன்று பராஅத் நோன்பு என்ற பெயரில் ஒரு நோன்பு நோற்கும் வழக்கமும் தமிழக முஸ்லிம்களிடம் காணப்படுகிறது.

பராஅத் என்றொரு இரவு உள்ளதற்கும், அன்றைய தினம் மூன்று யாஸீன்கள் ஓதி இறந்தவர்களுக்குச் சேர்ப்பதற்கும் ஆதாரம் இல்லை. லைலத்துல் கத்ர் போல் லைலத்துல் பராஅத் என்றொரு இரவு பற்றி ஹதீஸ்களில் கூறப்படவே இல்லை. எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.