Tamil Bayan Points

2) இப்ராஹீம் நபி புனர்நிர்மாணம் செய்தல்

நூல்கள்: கஅபா வரலாறும் சிறப்புகளும்

Last Updated on February 23, 2022 by

 

“கஅபா’ ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இபுறாஹீம் (அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள “மஸ்ஜிதுல் அக்ஸா”வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.

அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களிடம் “பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல் மஸ்ஜிதுல் ஹராம்’ (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். “அல் மஸ்ஜிதுல் அக்ஸா’ என்று கூறினார்கள். “இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)” என்று கேட்டேன். “நாற்பது வருடங்கள்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3366

 

ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட “கஅபா’ நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான்.

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன்.

(அல்குர்ஆன் 14:37)

 

என இபுறாஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.

ஹாஜரா அம்மையாரையும் கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இபுறாஹீம் (அலை) மேற்கண்ட “துஆ’வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது.

எனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

“தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!” என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.

(அல்குர்ஆன் 2:125)

 

அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” (என்றனர்.)

(அல்குர்ஆன் 2:127)

 

மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை:

1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்),

நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் “ஹஸ்வரா” என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்அதீ (ரலி)

நூல்: திர்மிதீ 3860

 

மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.

மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:

அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 28:57)

அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.

(அல்குர்ஆன் 3:97)

 

இபுறாஹீம் (அலை) அவர்களின் “துஆ’வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.

நபி (ஸல்) கூறினார்கள்:

“இபுறாஹீம் (அலை) மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இபுறாஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இபுறாஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும்) அபிவிருத்தி செய்யுமாறு பிரார்த்தனை செய்துள்ளேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி)

நூல்: புகாரி

 

இபுறாஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

“இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!”

(அல்குர்ஆன் 2:126)

 

அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.

திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

“கஅபா’ ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.

அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.

 

இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

“(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.

(அல்குர்ஆன் 105:1-5)

மேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை “கஅபா’வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

“ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2118

இறைவன் “கஅபா’ ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.