Tamil Bayan Points

01) முன்னுரை

நூல்கள்: யாகுத்பா ஓர் ஆய்வு

Last Updated on March 5, 2022 by

யாகுத்பா ஓர் ஆய்வு

நூலின் ஆசிரியர்: பி.எஸ்.அலாவுத்தீன்

அறிமுகம்

தமிழக முஸ்லிம்கள் மத்தியில் யாகுத்பா என்பது புனிதமிக்க படலமாக அறிமுகமாகியுள்ளது.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களைப் புகழ்ந்து பாடப்படுவதாகக் கூறப்படும் இப்பாடலை விஷேச நாட்களிலும், ரபீவுல் ஆகிர் மாதத்திலும் பக்திப் பரவசத்துடன் பாடி வருகின்றனர்.

மவ்லுதுப் பாடல்களிலேயே மிகவும் அதிக அளவில் நச்சுக் கருத்தை உள்ளடக்கியுள்ள பாடல் யாகுத்பா எனும் பாடலாகும்.
இப்பாடலில் வலியுறுத்தப்படும் கருத்தின் அடிப்படையிலேயே காயல்பட்டிணம் போன்ற ஊர்களில் அப்துல் காதிர் ஜீலானியை இருட்டில் இருந்து கொண்டு ஆயிரம் தடவை திக்ரு செய்யும் மௌட்டீக வழக்கம் நடைமுறைக்கு வந்தது. எனவே இப்பாடலின் கருத்துக்கள் இஸ்லாத்திற்கு உகந்தது தானா?
இதைப் பாடுவதால் நன்மை கிடைக்குமா? என்பதை விரிவாக ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.

அத்துடன் மவ்லிதுகள் சமுதாயத்தில் நுழைந்த வரலாற்றையும் அது ஏற்படுத்திய தீய விளைவுகள் ஆகியவையும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் சகோதரர் காலம் சென்ற பி.எஸ்.அலாவுதீன் எனும் பி.ஷேக் அலாவுதீன் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இந்நூலை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம். அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் யாகுத்பா பாடலின் நச்சுக் கருத்தை விளங்கி அதைப் புறக்கணித்து நடக்க வல்ல இறைவன் அருள்வானாக!

சுப்ஹான மவ்லிது

ஹஸனார் மவ்லிது

ஹுசைனார் மவ்லிது

முஹ்யித்தீன் மவ்லிது

ஷாகுல் ஹமீது மவ்லிது

ஹாஜா மவ்லிது

என்று பெரியார்களின் பெயர்களை மரியாதை இல்லாமல் அழைத்துக் கொண்டு இவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏதேனும் ஆதாரமுண்டா? என்று கேட்டால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் முன்னிலையிலேயே ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), கஃபு பின் ஜுஹைர் (ரலி) போன்றோர் அண்ணலாரைப் புகழ்ந்து பாடவில்லையா? எனக் கேட்கிறார்கள்.

அவ்விரு நபித்தோழர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்த காலத்தில் அவர்கள் முன்னிலையில் தமது கவிதைகளை அரங்கேற்றி அவர்களின் அங்கீகாரம் பெற்றார்களே தவிர நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பிறகு அந்தக் கவிதைகளை தமது வீடுகளிலும், கடைகளிலும், இத்யாதிகளுடன் ஓதிக் கொண்டு இருக்கவில்லை.

உண்மையில் அக்கவிதைகளைப் படிப்பது ஒரு நன்மையான காரியம் என்றிருந்தால், நன்மைகள் செய்வதில் நம்மை விட பேரார்வம் படைத்த அண்ணலாரின் அன்புத் தோழர்களும், தாபியீன்களும் அவற்றை ஓதாமலிருந்திருப்பார்களா?

மேலும், எந்தக் கவிதைகள் அண்ணலார் முன்பு பாடப்பட்டு அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றனவோ அவை இன்று மவ்லிதுகளாக ஓதப்படுவதில்லை. ஹிஜ்ரி ஆயிரத்திற்குப் பின்னுள்ளவர்களால் எழுதப்பட்டவைகளைத் தான் இவர்கள் மவ்லிதுகள் என்ற பெயரால் ஓதி வருகின்றார்கள்.

அல்லாஹ்வும், அவனது திருத்தூதர் அவர்களும் காட்டித்தராத இந்த மவ்லிதுக் கச்சேரிகள் முக்கியமான வணக்கத்தைப் போல் கருதப்படுகின்றதே! இதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா என்று இந்தக் கச்சேரியை நடத்துவோர் சிந்திப்பதில்லை.

மார்க்கத்தைக் குறைவின்றி முழுமையாகக் கற்றுத் தருவதற்காகவே தூதர்களை அல்லாஹ் நியமிக்கின்றான். இறுதித் தூதராம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமாக இந்த மார்க்கத்தைப் பூரணப்படுத்தியதாகவும் இறைவன் பிரகடணம் செய்கிறான்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.

(அல்குர்ஆன் 5:3)

மார்க்கத்தை இறைவன் நிறைவாக்கியிருக்க, பின்னால் உருவாக்கப்பட்ட காரியங்கள் எப்படி நல்லறமாக ஆக முடியும்? உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

(அல்குர்ஆன் 7:3)

இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மாத்திரமே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும் என இவ்வசனம் கூறுகிறது. இறைவனிடமிருந்து அருளப்பட்டது என்றால் அவனது வேதத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்; அல்லது அந்த வேதத்திற்கு விளக்கமளிக்க இறைவனால் நியமனம் செய்யப்பட்ட அவனது தூதர் கூறியிருக்க வேண்டும்.

மவ்லிதுக் கச்சேரிகள் நடத்தும்படியோ, இதை நடத்துவதால் இறைவனது அன்பும், இறைத்தூதரின் பரிந்துரையும் கிடைக்கும் என்றோ, இறைவனும் கூறவில்லை. அவனது தூதரும் கூறவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மார்க்கத்தை வியாபாரமாக்கும் முல்லாக்களைத் தவிர வேறு எவரும் இந்தக் கச்சேரியை நடத்துமாறு கூறவில்லை.

‘இந்தக் குர்ஆனின் ஒரு பகுதி அல்லாஹ்வின் கையிலுள்ளது. மறுபகுதி உங்கள் கைகளில் உள்ளது. எனவே அதனையே நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள். நீச்சயமாக நீங்கள் வழி தவற மாட்டீர்கள்! அதன் பிறகு நீங்கள் (மறுமையில்) நாசமாகவும் மாட்டீர்கள்’ என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி)

நூல்: தப்ரானி 22/188

 

திருக்குர்ஆனையும், நபிவழியையும் தவிர பிறவற்றை மார்க்கம் என்று சொல்வதற்கு இடமே இல்லை. அவ்விரண்டையும் பேணி நடப்பதிலும், அவ்விரண்டில் இல்லாதவற்றைத் தூக்கி எறிவதிலும் தான் ஈடேற்றம் உள்ளது என்பதை இந்த நபிமொழிகள் கூறுகின்றன. மவ்லுதுக் கச்சேரிகள் நிறுத்தப்பட வேண்டுமென்பதற்கு இவையும் சான்றுகளாகும்.

தமது காலத்துக்குப் பின்னர் பலவிதமான அனாச்சரங்கள் தோன்றும். அவை அனைத்தும் மனிதனை நரகின் பால் இழுத்துச் செல்லும் எனவும், இறைவனிடம் அவை அங்கீகரிக்கப்படாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துச் சென்றுள்ளனர்.

‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும்’ என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2697

‘செய்திகளில் சிறந்தது, இறைவனின் வேதமாகும். வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மது(ஸல்)வின் வழிகாட்டுதலாகும். காரியங்களில் மிகவும் கெட்டது (எனக்குப் பின்னர்) உருவாக்கப்பட்டவையாகும். (இவ்வாறு) உருவாக்கப்பட்ட காரியங்கள் யாவும் அனாச்சாரங்களாகும். அனாச்சாரங்கள் யாவும் வழிகேடாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1435

‘நமது உத்தரவு இல்லாமல் யாரேனும் ஒரு காரியத்தைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 3243

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு பின் உருவாக்கப்பட்ட காரியங்கள் எதுவானாலும் அவை இறைவனால் அங்கீகரிக்கப்படாது என்றும், அவை வழிகேடு என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்த பிறகும், உண்மையான முஸ்லிம் எப்படி இந்த மவ்லிதுகளை ஓத முடியும்? நன்மை செய்கிறோம் என்று எண்ணி பாவத்தைச் சுமக்க முன் வருபவர் எப்படி உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்?

இந்த ஒரு காரணத்துக்காகவே யாகுத்பா உள்ளிட்ட மவ்லிதுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றாலும் அவை ஏற்படுத்திய தீய விளைவுகள் மவ்லிதுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மேலும் வலுப்படுத்துகின்றன.