Tamil Bayan Points

1) முன்னுரை

நூல்கள்: இஸ்லாமியத் திருமணம்

Last Updated on April 15, 2023 by

திருமணம் குறித்த முக்கியச் சட்டங்கள் கீழ்க் காணும் தலைப்புகளில் சுருக்கமாகச் சொல்லும் நூல்:

  • மண வாழ்வின் அவசியம்.
  • திருமணத்தின் நோக்கம்
  • திருமண ஒழுங்குகள்
  • மணப் பெண் தேர்வு செய்தல்
  • பெண் பார்த்தல்
  • பெண்ணின் சம்மதம்
  • பெண்ணின் பொறுப்பாளர்
  • கட்டாயக் கல்யாணம்
  • மஹரும் ஜீவனாம்சமும்
  • வரதட்சணை ஓர் வன் கொடுமை
  • வரதட்சணையால் ஏற்படும் கேடுகள்
  • திருமண ஒப்பந்தம்
  • (குத்பா) திருமண உரை
  • சாட்சிகள்
  • எளிமையான திருமணம்
  • திருமண விருந்து
  • நாள் நட்சத்திரம் இல்லை
  • திருமண துஆ
  • தவிர்க்கப்பட வேண்டியவை
  • அன்பளிப்பு மொய்
  • தம்பதியரின் கடமைகள்
  • மணமுடிக்கத் தகாதவர்கள்
  • மணக்கக் கூடாத உறவுகள்
  • பால்குடிப் பருவமும் அளவும்
  • தாம்பத்திய உறவு
  • மாதவிடாயின் போது தாம்பத்திய உறவு
  • திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூல். 

 

நூல் ஆசிரியர் : பீ.ஜெய்னுல் ஆபிதீன்

மண வாழ்வின் அவசியம்.

மனித வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் திருமணம் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. திருமணத்தை மறுப்பவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதிலிருந்து மணவாழ்க்கையின் அவசியத்தை உணரலாம். 

மணவாழ்வு, ஆன்மீகப் பாட்டைக்கு எதிரானது என்று சில மதங்கள் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, திருமணத்தை அதிகமதிகம் வலியுறுத்துகிறது. 

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் மேற்கொள்ள அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி தந்திருந்தால் நாங்கள் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்கள்: புகாரி 5074, முஸ்லிம் 2488

நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்டேன் என்றும், வேறு சிலர் நான் உறங்காமல் தொழுது கொண்டிருப்பேன் என்றும், மற்றும் சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன் என்றும் பேசிக் கொண்டனர். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது, இப்படியெல்லாம் கூறியவர்களின் நிலை என்னவாகும்? என்று கூறிவிட்டு, நான் நோன்பும் வைக்கிறேன்; அதை விட்டு விடவும் செய்கிறேன். நான் தொழவும் செய்கிறேன்; உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவரவல்லர் என்று கூறினார்கள்.  

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி – 5063

மேற்கண்ட நபிமொழியிலிருந்து முஸ்லிம்களுக்கு திருமணம் எவ்வளவு அவசியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

திருமணத்தின் நோக்கம்

திருமணத்தின் அவசியம் குறித்து இஸ்லாம் இரண்டு காரணங்களைக் குறிப்பிடுகின்றது.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

சந்ததிகள் பெற்றெடுப்பது திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று என இதன் மூலம் அறியலாம்.

உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் திருமணம் என்பது (பிறன்மனை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும் கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி). நூல்: புகாரி 1905, 5065, 5066

தகாத நடத்தையிலிருந்து ஒவ்வொருவரும் தன்னைக் காத்துக் கொள்வது திருமணத்தின் மற்றொரு நோக்கமாகும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.