Tamil Bayan Points

வட்டியை ஒழித்த வான்மறை

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

Last Updated on September 14, 2023 by Trichy Farook

வட்டியை ஒழித்த வான்மறை

வட்டிக்குக் கடன்பட்டு விட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமல்ல. ஒருமுறை கடன் பட்டவர்கள் அதிலிருந்து மீள முடியாத அளவிற்குச் சிக்கிக் கொள்கின்றனர். வட்டி, வட்டிக்கு வட்டி, டவுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி, தின வட்டி இது போன்ற எண்ணற்ற வட்டியால் மக்களை வாட்டி வதைக்கின்றனர்.

சாலையோர வியாபாரிகளில் மணி வட்டி என்று கூறிக் கொடுப்பார்கள். அதாவது 10 மணிக்கு ஒரு தொகை கொடுத்தால் அதற்கான வட்டியை 12 மணிக்கு கொடுத்து விடவேண்டும். தாமதமானால் தரத்தவறிய வட்டிக்கு வட்டி போட்டு விடுவார்கள். 500 கொடுத்துவிட்டு ஒரே நாளில் 5000 வரை கூட வசூல் செய்யும் கொடுமை இன்றும் இருக்கிறது.

இப்படிப் பல்வேறு வகையில் வட்டித் தொழில் உலகம் முழுவதும் உள்ளது. வட்டிக்குப் பணம் வாங்கும் பல அப்பாவிகள் பலியாகி வருகின்றனர்.

தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் கடந்த 15 ஆண்டுகளாக கந்து வட்டி மூலம் வீடுகள், நிலங்களை அபகரிக்கும் சம்பவங்கள், நிலமோசடிகள் நடந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் டிஜிபி அலுவலகத்தில் குவிந்துள்ளன.

சமீபத்தில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்து இறந்தார்கள்.

இப்படித் தனி மனிதன் மட்டுமல்ல! உலக நாடுகள் அனைத்துமே இந்த வட்டியை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன.

நமது இந்திய நாடே ஒட்டுமொத்தமாக வட்டியில் மூழ்கி விடுமோ என்ற அபாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அந்தளவிற்குக் கொடுப்போரிடமெல்லாம் கை நீட்டி, கடனை வாங்கிக் குவித்திருக்கிறது.

இதுவரை இந்தியாவின் மொத்தப் பொதுக்கடன் ரூ.63,000,000,000,000 (63 லட்சம் கோடி ரூபாய்)ஆகும்.

மனித சமூகத்தில் ஊடுறுவிய புற்று நோய் தான் இந்த வட்டி. இதனை அடியோடு வேரறுக்கவில்லை எனில், சமூகத்தையே அழித்து விடும் அபாயம் நிறைந்தது. வட்டி என்ற விஷக்கிருமியை அழிக்க வேண்டிய அரசாங்கம் அந்தக் கிருமியை நாடெங்கிலும் பரப்பிக் கொண்டிருக்கின்றது. மக்களும் வட்டியில் வதைபட்டு அதிலிருந்து விடுபட வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இந்த வட்டி என்ற புற்றுநோய் 1440 ஆண்டுகளுக்கு முன்னால் அரபுலகத்தில் யூதர்களால் பரவிக் கிடந்தையும் அதை நபிகளார் தனது ஆட்சிக்காலத்தில் மனிதகுல வழிகாட்டியான திருக்குர்ஆன் போதனைகளைக் கொண்டு அந்த நோயை எப்படி ஒழித்தார்கள் என்பதையும் இங்கே காண்போம்.

வட்டிக்கு எதிராக குர்ஆனின் எச்சரிக்கைகள்

மனித குலத்திற்கு அருளாகவும் நேரிய வழிகாட்டியாகவும் அருளப்பட்ட திருக்குர்ஆன் மனிதனை வாட்டும் வட்டி குறித்து பல்வேறு எச்சரிக்கைகள் செய்கிறது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰٓوا اَضْعَافًا مُّضٰعَفَةً ‌وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏

நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். 

(அல்குர்ஆன்: 3:130)

يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். 

(அல்குர்ஆன்: 2:276)

فَبِظُلْمٍ مِّنَ الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيْلِ اللّٰهِ كَثِيْرًا ۙ‏
وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِـهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ‌ ؕ وَاَعْتَدْنَـا لِلْـكٰفِرِيْنَ مِنْهُمْ عَذَابًا اَ لِيْمًا‏
 لٰـكِنِ الرّٰسِخُوْنَ فِى الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُوْنَ يُـؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ‌ وَالْمُقِيْمِيْنَ الصَّلٰوةَ‌ وَالْمُؤْتُوْنَ الزَّكٰوةَ وَ الْمُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ ؕ اُولٰٓٮِٕكَ سَنُؤْتِيْهِمْ اَجْرًا عَظِيْمًا

யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம்.

அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். எனினும் அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புகின்றனர். தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்.

(அல்குர்ஆன்: 4:160,161,162)

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ۚ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ‌ۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ
وَاِنْ كَانَ ذُوْ عُسْرَةٍ فَنَظِرَةٌ اِلٰى مَيْسَرَةٍ ‌ؕ وَاَنْ تَصَدَّقُوْا خَيْرٌ لَّـكُمْ‌ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்!

நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது. அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.

(அல்குர்ஆன்: 2:278-280)

  • வட்டியை உண்ணக்கூடாது.
  • அது இறையச்சமுள்ள ஒருவனுக்கு அழகல்ல.
  • இறைவனை அஞ்சுபவன் வட்டியிலிருந்து விடுபட வேண்டும்.
  • வட்டியை விட்டவனே மறுமையில் வெற்றி பெறுவான்.
  • வட்டி அழிவைத்தரும். தர்மங்கள் அருளைத் தரும்.
  • வட்டி வாங்குபவன் நன்றி கெட்ட பாவியாவான்.
  • வட்டிக்குக் கடன் கொடுத்து மக்களை வாட்டிய யூத சமுதாயம் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி அழிந்தார்கள்.
  • ஒருவன், இறைவனை நம்புவது உண்மை எனில் அவன் கொடுத்த கடனுக்கு வட்டி வாங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
  • அதையும் மீறி வட்டி வாங்கினால் அவன் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் எதிராகப் போர் புரிகிறான்.
  • இறைவனுக்கு எதிராக யுத்தம் செய்பவன் அழிந்தே போவான்.

இவ்வாறு பல்வேறு அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் இறைவன் விடுத்துள்ளதை அறிய முடிகிறது.

இறைவனின் பலமான எச்சரிக்கைகளை எடுத்துரைத்ததன் மூலம் வட்டியிலிருந்து அந்த மக்களை நபிகளார் மீட்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் எந்த ஒரு நற்செயலையும் மக்களுக்கு போதிக்கும் போதும், தீமையிலிருந்து மக்களைத் தடுக்கத் துவங்கும் போதும் அதில் ஒருவர் தன்னளவில் முழுமையான ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் நபியவர்கள், வட்டி எனும் கொடிய நோயைத் தன் குடும்பத்தில் முதலில் ஒழிக்கின்றார்கள்.

நபிகளாரின் சிறிய தந்தையான அப்பாஸ் என்பவர் மக்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்திருந்தார். வட்டி மிகப்பெரிய பாவம் என்பதை மக்களுக்குச் சொன்ன அதே வேளையில் தன் சிறிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்கள் வழங்கிய கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்தார்கள்.

இவ்வாறு மக்களை வாட்டி வதைக்கும் வட்டியை ஒழித்து, திருக்குர்ஆனின் ஒளியில் வளமான ஆட்சியை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். வட்டியில்லாக் கடன் வாங்கியவர்களுக்கு அவகாசம் அளிப்பதையும், கடனைத் தள்ளுபடி செய்வதையும் வலியுறுத்தினார்கள். ஸகாத் எனும் பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டு மக்கள் கடனில் மூழ்காதபடி பாதுகாத்தார்கள்.

திருக்குர்ஆனின் போதனையின் விளைவாக முஸ்லிம் சமுதாயம் வட்டி எனும் புற்று நோயில் மடிந்து விடாமல், மாட்டிக் கொள்ளாமல் பெருமளவில் தப்பித்து வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைவரும் திருக்குர்ஆனின் போதனைகளை உணர்ந்து வட்டியை ஒழித்து, வளமான வாழ்வைப் பெறுவோமாக!