Tamil Bayan Points

10) வஹீக்கு முரணாக சஹாபாக்கள் 2

நூல்கள்: நபித் தோழர்களும் நமது நிலையும்

Last Updated on December 12, 2019 by

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பார்கள் என்று திருக்குர்ஆனிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தனது மரணம் பற்றி முன் அறிவிப்பு செய்திருந்தார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது உமர் (ரலி) உள்ளிட்ட பல நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்றும், மரணிக்க மாட்டார்கள்; உயித்தெழுவார்கள் என்றும் இஸ்லாத் தின் அடிப்படைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந் தார்கள்.

அபூ பக்ர் (ரலி) அவர்கள் தக்க ஆதாரங்களை எடுத்துக் காட்டி அவர்களின் தவறான நம்பிக்கையைப் புரிய வைக்கும் வரை நபித்தோழர்களால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நூல் : புகாரி 1242, 3670

பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழும் போது நாம் எப்படி நிலை குலைந்து போவோமோ அது போல் நபித்தோழர்களும் நிலை குலையக் கூடியவர்களாக இருந்துள்ளனர் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

எனவே தான் தவறுகளுக்கு அறவே இடமில்லாத வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றன.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்களும் ஐந்து நேரத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்து சென்றனர்.

புகாரி : 362, 86, 184, 362, 372, 578, 707, 807, 809, 814, 837, 850, 865, 867, 868, 873 ஆகிய எண்களில் இது பற்றிய ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்றைக்கு பெண்களின் நடவடிக்கைளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டால் இரவேல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் (பள்ளிவாசலுக்கு வருவதை விட்டு) தடுக்கப்பட்டிருப்பார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். நூல் : புகாரி 869

இந்த மார்க்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சுயமாக உருவாக்கப்பட்டதல்ல. மாறாக ஏக இறைவனிடமிருந்து வந்த மார்க்கமாகும். நாளை என்ன நடக்கும் எதிர்காலத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதையெல்லாம் நன்கறிந்த இறைவனால் இம்மார்க்கம் நமக்குத் தரப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) கூறுவது போன்ற மாற்றங்கள் ஏற்படும் என்பதும் இறைவனுக்கு நன்கு தெரியும்.

பெண்களிடம் ஏற்படும் தவறான நடவடிக்கை காரணமாக பெண்களைப் பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என்று இறைவன் நினைத்திருந்தால் அதை அவன் தெளிவாகச் சொல்லியிருப்பான். அதை அறியாமல் இறைவன் சட்டமியற்றி விட்டான் என்பது போன்ற கருத்து ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றில் அடங்கியுள்ளது.

மேலும் மார்க்கம் முழுமையாகி விட்டது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. மார்க்கம் முழுமையாகி விட்டது என்றால் அதன் பின்னர் எந்த மாற்றமும் வராது என்பது தான் பொருள். இதற்கு எதிராகவும் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அமைந்துள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தக் கருத்தை மனதில் கொண்டு இவ்வார்த்தைகளைக் கூறினார்கள் என்று புரிந்து கொள்ளக் கூடாது. பெண்களின் நடவடிக்கைகளைக் கண்டு மனம் வெதும்பி இந்தச் சொல்லைப் பயன்படுத்தி விட்டார்கள் என்று தான் நாம் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அதே நேரத்தில் உலகில் எந்த மாறுதல் ஏற்பட்டாலும் மார்க்கச் சட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

பெருநாள் தொழுகைக்கு முன் குத்பா

ஜும்ஆ தொழுகைக்குரிய குத்பாவை தொழுகைக்கு முன் நிகழ்த்த வேண்டும். பெருநாள் தொழுகைக்குரிய குத்பாவை தொழுகைக்குப் பின் நிகழ்த்த வேண்டும் என்பதை நாம் அறிவோம்.

ஆனால் ஏராளமான நபித் தோழர்கள் வாழும் காலத்தில் ஆட்சியாளர்களின் சுயநலப் போக்கால் இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டது. ஒரே ஒரு நபித் தோழர் மட்டும் அதை எதிர்த்துப் பேராடினாலும் அவரது கருத்து எடுபடவில்லை. தான் விரும்பியவாறு ஆட்சியாளர் மார்க்கத்தை வளைத்துக் கொண்டார் என்பதை ஹதீஸ்களில் நாம் காண்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பொருநாளி லும், ஹஜ் பெருநாளிலும் முஸல்லா எனும் திடலுக்குச் செல்வார்கள். முதலில் தொழுகையை முடித்து விட்டு திரும்பி மக்களை நோக்கி நிற்பார்கள். மக்கள் வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தி அறிவுரை கூறுவார்கள். மர்வான் ஆட்சியாளராக வரும் வரை இந்த நிலை தான் நீடித்தது. அவர் மதீனாவின் அமீராக இருந்தார். அவருடன் நான் புறப்பட்டு முஸல்லா எனும் திடலை அடைந்த போது அங்கே ஒரு மேடை தயார் செய்யப்பட்டிருந்தது. தொழுகை நடத்துவதற்கு முன் மர்வான் மேடையில் ஏற முயன்றார். நான் அவரது ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் மேலே ஏறி தொழுகைக்கு முன் உரை நிகழ்த்தினார். அப்போது “அல்லாஹ்வின் மேல் ஆணையாக (மார்க்கத்தை) மாற்றி விட்டீர் என்று நான் கூறினேன். அதற்கு மர்வான் “நீ அறிந்து வைத்திருக்கும் நடைமுறை முடிந்து போன விஷயம் என்று கூறினார். நான் அறிந்து வைத்துள்ள நடைமுறை நான் அறியாத (இந்த) நடைமுறையை விடச் சிறந்தது எனக் கூறினேன். தொழுகைக்குப் பின் மக்கள் அமர்வதில்லை என்பதால் உரையை தொழுகைக்கு முன் அமைத்துக் கொண்டேன் என்று மர்வான் கூறினார்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)

நூல் : புகாரி 956

சிறந்த காலம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறிய நபித் தோழர்களும் தாபியீன்களும் வாழும் காலத்தில் ஒட்டு மொத்த சமுதாயமும் குழுமியுள்ள பெருநாள் தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை அப்பட்டமாக மீறப்படுகிறது. ஒரே ஒருவர் மட்டுமே அதை எதிர்க்கிறார் என்பதைக் காண்கிறோம்.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு பயந்து கூட மார்க்கத்திற்கு முரணான சில செயல்களை அன்றைய மக்கள் சகித்துக் கொண்டிருக்கக் கூடும். எனவே நபித்தோழர்களின் காலத்தில் உள்ள அனைத்தும் மார்க்க ஆதாரங்கள் எனக் கூற முடியாது என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

மனிதர்கள் என்ற முறையில் நபித்தோழர்கள் சிலர் செய்த பாவங்களை நாம் இங்கே சுட்டிக் காட்டவில்லை.

நபித்தோழர்களின் ஆய்விலும், சிந்தனையிலும், தீர்ப்புகளிலும் அவர்களிடம் காணப்பட்ட மற்றவர்களுக்குத் தொடர்புடைய தவறுகளையே இங்கே நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளையே வஹீ எனவும், வஹீ அல்லாதது எனவும் இரண்டாக நாம் வகைப்படுத்தி ஒன்றை மட்டும் மார்க்க ஆதாரமாக ஏற்றுக் கொள்கிறோம். இன்னொன்றை மார்க்க ஆதரமாக ஏற்றுக் கொள்வதில்லை எனும் போது நபித்தோழரின் நடவடிக்கையையோ, மற்ற அறிஞர்கள் நடவடிக்கைகளையோ எப்படி மார்க்க ஆதாரமாகக் கருத முடியும்?

விரலை வெட்டியதற்கான நட்டஈடு

இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தின்படி ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் ஒரு உறுப்பை வெட்டினால் அவரது அதே உறுப்பை வெட்டுவதே அதற்கான தண்டனை.

ஆனால் பாதிக்கப்பட்டவர் விரும்பினால் தனது எதிரிக்குத் தண்டனை வழங்க வேண்டாம்; நட்டஈடு பெற்றுத் தாருங்கள் என்று கோரிக்கை வைக்கலாம். உரிய நட்ட ஈடை வழங்கி விட்டு இத்தண்டனையிலிருந்து எதிரி தப்பித்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய நட்ட ஈடு என்ன? என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் வரையறுத்துச் சொல்லப்பட்டு விட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு மனிதரின் ஒரு விரலை மற்றவர் வெட்டினால் அதற்கு பத்து ஒட்டகம் நட்ட ஈடு என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. ஆனால் உமர் (ரலி) ஆட்சியின் போது விரல்களுக்கிடையே வேறுபாடு ஏற்படுத்தி கட்டை விரலுக்கு இத்தனை ஒட்டகம். ஆட்காட்டி விரலுக்கு இத்தனை ஒட்டகம் என்று நிர்ணயிக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரல்களுக்கிடையே வேறுபாடு காட்டாத போது நீங்கள் எப்படி வேறுபாடு காட்டலாம்?’ என்று ஆட்சேபனை செய்தனர். உமர் (ரலி) அவர்கள் தமது தவறை ஒப்புக் கொண்டு திருத்திக் கொண்டார்கள்.

நூல் : முஸன்னப் இப்னு அபீஷைபா 5/368

அனைத்து விரல்களும் சமம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது புகாரி 689 வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உமர் (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியாமல் இருந்திருக்கிறது. அல்லது தெரிந்தே விரல்கள் அனைத்தும் சமம் அல்ல என்று அவர்கள் எண்ணியிருக் கிறார்கள். ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) சுட்டிக்காட்டிய பின் திருத்திக் கொள்கிறார்கள்.

நாட்டுக் கழுதை உண்ணத் தடை

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கழுதையின் இறைச்சியை உண்பது தடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “காட்டுக் கழுதை மாமிசத்தை உண்ணலாம். நாட்டுக் கழுதையின் மாமிசத்தை உண்ண வேண்டாம் என்று தடை விதித்தனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நாட்டுக் கழுதை தடை செய்யப்பட்ட விபரம் தெரியவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகும் அவர்கள் நாட்டுக் கழுதை மாமிசத்தை ஹலால் என்று என்று தீர்ப்பளித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதையை ஹராமாக்கியதாகக் கூறுகிறார்களே? என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த செய்தியை பஸராவில் வைத்து ஹகம் பின் அம்ர் (ரலி) எங்களிடம் கூறினார்கள். ஆனால் கல்விக் கடல் இப்னு அப்பாஸ் (ரலி) இதை ஏற்க மறுத்து (6:145) வசனத்தை ஓதிக் காட்டினார்கள் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) விடையளித்தார்கள். அறிவிப்பவர் : அம்ர்,

நூல் : புகாரி 5529

ஹகம் என்ற நபித் தோழர் மட்டுமின்றி அனஸ் (ரலி) அவர்களும் தடை பற்றிய செய்தியை அறிவித்துள்ளனர்.

புகாரி:5528, 2991, 4199

ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த அறிவிப்பைக் கேட்ட பிறகும் குர்ஆன் வசனத்தை எடுத்துக்காட்டி இப்னு அப்பாஸ் (ரலி) மறுத்ததும், ஜாபிர் (ரலி) அதை வழி மொழிந்ததும் ஏற்புடையதல்ல.

மேற்கண்ட 6:145 வசனத்தில் சில விஷயங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதையைத் தடை செய்தார்கள் என்பதை இவ்விரு தோழர்களும் விளங்காமல் இருந்துள்ளனர்.

ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள்

வெள்ளிக் கிழமையன்று ஜும்ஆவுக்காக இரண்டு பாங்கு சொல்லும் வழக்கம் சில பகுதிகளில் இருந்து வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த வழக்கம் இருந்ததில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும், உமர் (ரலி) அவர்களின் காலத்திலும் இமாம் மிம்பரில் ஏறிய பிறகே பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) ஆட்சி காலத்தில் மக்கள் கூட்டம் பெருகியதால் ஸவ்ரா எனும் இடத்தில் மற்றொரு அறிவிப்பு அதிகமானது என்று ஸாயிப் பின் யஸித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 912

வணக்கத்தில் ஒரு நடைமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து வந்த இரண்டு கலீபாக்களும் அதைச் செயல்படுத்தியுள்ளனர். ஆனால் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்கள் சுயமாக இன்னொரு அறிவிப்பை அதிகமாக்கினார்கள்.

ஏதோ ஒரு காரணத்தால் நபிவழியைக் கூட சில நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள். அல்லது இல்லாததை அதிப்படுத்தியுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.

எனவே நபித்தோழர்களின் எல்லா நடவடிக்கையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் தான் இருக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.