Tamil Bayan Points

16) விரலசைத்தல்

நூல்கள்: தொழுகையின் சட்டங்கள்

Last Updated on November 22, 2023 by Trichy Farook

விரலசைத்தல்

அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி, அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போது பார்வை ஆட்காட்டி விரலை நோக்கி இருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் அமர்வில் உட்கார்ந்தால் தம்முடைய வலது முன்கையை வலது தொடையின் மீது வைத்து, தம் வலக்கையின் விரல்கைள் அனைத்தையும் மடக்கிக் கொண்டு, பெருவிரலை ஒட்டியுள்ள சுட்டு விரலால் சைகை செய்வார்கள். இடது முன்கையை இடது தொடையில் வைப்பார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம்-1018

‘…நபி (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது விரல்களில் இரண்டை மடக்கிக் கொண்டு (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்து, ஆட்காட்டி விரலை உயர்த்தி அதன் மூலம் (யாரையோ) அழைப்பது போல் அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: நஸாயீ-889 (879)

இச்செய்தி தாரமீ-1323, அஹ்மத்-18115, இப்னு ஹுஸைமா பாகம் 1; பக்கம் 354, இப்னு ஹிப்பான் பாகம் 5; பக்கம் 170,தப்ரானீ கபீர் பாகம் 22; பக்கம் 35, பைஹகீ பாகம் 1; பக்கம் 310, ஸுனனுல் குப்ரா இமாம் நஸயீ பாகம் 1; பக்கம் 376,அல்முன்தகா இப்னுல் ஜாரூத் பாகம் 1; பக்கம் 62 ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

விமர்சனமும் விளக்கமும்

விரலசைத்தல் சம்பந்தப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஆஸிம் பின் குலைப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இப்னுல் மதீனீ என்பவர் ‘இவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது’ என்று விமர்சனம் செய்துள்ளார். இதை அடிப்படையாக வைத்து சிலர் விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் பலவீனமானது’ என்று கூறுகின்றனர். இது தவறாகும்.

ஒரு அறிவிப்பாளரைப் பற்றிக் குறை சொல்லப்பட்டால் அந்தக் குறை என்ன என்று தெளிவாகக் கூறப்பட வேண்டும். அவ்வாறு கூறப்பட்டால் மட்டுமே அதைப் பரிசீலனை செய்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஒருவரைப் பற்றி நல்லவர், சிறந்தவர், நம்பகமானவர் என்று பலர் கூறியிருக்கும் போது, குறை சொல்பவர் அவரின் குறையைத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் அவரின் விமர்சனம் நிராகரிக்கப்படும்.

இதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது ஆஸிம் பின் குலைப் என்பவரை இப்னுல் மதீனீ என்பவரைத் தவிர அனைவரும் பாரட்டியுள்ளனர், நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இவரைப் பற்றி விமர்சனம் செய்யும் இப்னுல் மதீனீ அவர்கள் ‘அவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது’ என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்குரிய சான்றைச் சமர்ப்பிக்கவில்லை. எனவே இப்னுல் மதீனீ அவர்களின் விமர்சனம் ஏற்றுக் கொள்வதற்குரிய தகுதியை இழந்து விடுகிறது.

விரலசைத்தல் தொடர்பான செய்தி ஷாத் வகையைச் சார்ந்தது என்று காரணம் சொல்லி சிலர் மறுக்கின்றனர்.

மிக நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக, அதை விடக் குறைந்த அளவு நம்பகமான அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தியும், பல நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக, குறைவான எண்ணிக்கையிலுள்ள அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்தியும் ஹதீஸ் கலையில் ஷாத் எனப்படும்.

விரலசைத்தல் தொடர்பான செய்தியின் அறிவிப்பாளர்களை விட இஷாரா செய்தார்கள்’ என்று அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் மிக அதிகமாக உள்ளனர். எனவே விரலசைத்தல் தொடர்பான செய்தி ஷாத் என்ற மறுக்கப்பட வேண்டிய செய்தியாகிறது என்று கூறுகின்றனர்.

இந்த விமர்சனமும் தவறாகும்.

இஷரா செய்தார்கள் என்ற செய்தியும், அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்று அவர்கள் எண்ணுவதால் வந்த கோளாறாகும்.

இஷாரா என்ற வார்த்தைக்கு, சைகை செய்தல் என்பது பொருள். அதாவது வார்த்தையைப் பயன்படுத்தாமல் ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்கு இஷாரா எனப்படும்.

சில நேரங்களில் அசைவுகள் மூலமாகவும் இஷாரா அமைந்திருக்கும். அசைவுகள் இல்லாமலும் இஷாரா அமையலாம்.

பள்ளிவாசல் எங்கே இருக்கிறது? என்று ஒருவரிடம் கேட்கும் போது, பள்ளிவாசல் இருக்கும் திசையை நோக்கி அவர் விரலை நீட்டுவார். எவ்வித அசைவும் இல்லாமல் விரலை நீட்டியவாறு பள்ளிவாசல் இருக்கும் திசையைத் தெரியப்படுத்துகின்றார். இது அசைவு இல்லாத இஷாராவாகும்.

ஒருவரை எச்சரிக்கும் போது, தொலைத்து விடுவேன் என்பது போல் ஆட்காட்டி விரலை பல முறை திரும்பத் திரும்ப ஆட்டி எச்சரிப்பார்கள். இது அசைவுடன் கூடிய இஷாராவாகும்.

‘நபி (ஸல்) அவர்கள் இஷாராச் செய்தார்கள்’ என்ற ஹதீஸ் ‘விரலசைத்தார்கள்’ என்ற ஹதீஸுக்கு முரணாக இருந்தால் அந்த ஹதீஸ் ஷாத் என்ற நிலைக்கு செல்லும். ஆனால் இஷாராச் செய்தார்கள் என்ற ஹதீஸ் விரலசைத்தார்கள் என்ற ஹதீஸுக்கு எவ்விதத்திலும் முரண்படவில்லை.

இஷாரா என்பதற்கு ‘அசைக்கவில்லை’ என்று இவர்கள் தவறாகப் பொருள் செய்வதால், ‘விரலசைத்தார்கள்’ என்ற ஹதீஸுக்கு இது முரண்படுவதாகக் கூறி ஷாத் என்கின்றனர்.

இஷாரா என்ற சொல்,

  • அசைவு மூலம் ஒரு கருத்தைத் தெரிவித்தல்
  • அசைக்காமல் ஒரு கருத்தைத் தெரிவித்தல்

ஆகிய இரண்டு அர்த்தங்களைக் கொண்டதாகும். இஷாரா செய்தார்கள் என்ற ஹதீஸுக்கு இவ்விரண்டு அர்த்தங்களில் எந்த அர்த்தம் கொடுக்க வேண்டும் என்பதை, ‘விரலசைத்தார்கள்’ என்ற ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

இஷாரா என்ற விரிந்த பொருள் உள்ள வார்த்தைக்கு நபி (ஸல்) அவர்கள் எந்த அர்த்தத்தில் நடைமுறைப்படுத்தினார்கள் என்ற கூடுதல் விவரத்தையே விரலசைத்தார்கள் என்ற ஹதீஸ் தருகிறது.

எனவே இரண்டு ஹதீஸ்களும் ஒன்றுடன் ஒன்று மோதவில்லை என்பதால் இது ஷாத் என்ற வகையைச் சார்ந்தது அல்ல.

‘விரலை அசைக்க மாட்டார்கள்’ என்று ஒரு செய்தி அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் விரலை அசைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

 அபூதாவூத்-989 , நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறும் அந்த ஹதீஸில் முஹம்மத் பின் அஜ்லான் என்ற நபர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இமாம் ஹாகிம் உட்பட பலர், ‘இவர் நினைவாற்றல் குறைவுடையவர்’ என்று விமர்சனம் செய்துள்ளனர். இதனால் தான் இமாம் முஸ்லிம் அவர்கள் இவர் இடம் பெறும் ஹதீஸ்களைத் தனி ஆதாரமாகப் பதிவு செய்யவில்லை. இவருடைய அறிவிப்புக்கு ஏற்றவாறு நம்பகமானவர்கள் ஹதீஸ்களை அறிவித்திருந்தால் மட்டுமே இவருடைய செய்திகளைப் பதிவு செய்வார்கள். எனவே விரலசைக்க மாட்டார்கள் என்ற செய்தி பலவீனமாக இருப்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு, ‘விரலசைக்கக் கூடாது’ என்று வாதிட முடியாது.