Tamil Bayan Points

ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப் பரிகாரம் கேட்ட போது

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

Last Updated on April 30, 2022 by Trichy Farook

4517. அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இந்தப் பள்ளிவாசல்  அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசல்  கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன்.

அதற்கு அவர்கள், பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக் கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை என்று கூறிவிட்டு, உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா? என்று கேட்டார்கள்.

நான், இல்லை என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், மூன்று நாட்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ஸாவு உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆகவே, இந்த (2:196ஆவது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும் என்று சொன்னார்கள்.

( புகாரி-4517 )

2:196 وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖۤ اَذًى مِّنْ رَّاْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍۚ فَاِذَآ اَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ  ؕ ذٰ لِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِىْ الْمَسْجِدِ الْحَـرَامِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ

 

2:196.ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்; அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்;
ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும்,
அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும் பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும்.
இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் – ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”