Tamil Bayan Points

ஹஜ் மானியம் ரத்து:

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on April 18, 2019 by

உண்மையும், பொய்யும்

கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி ஹஜ் புனிதப் பயணம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா தேசாய் கொண்ட அமர்வு 10 ஆண்டுகளுக்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் ஹஜ் புனித பயணக் கொள்கையை பரிசீலனை செய்யவும், புனித ஹஜ் கொள்கையை வகுக்கவும் மத்திய பி.ஜே.பி. அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் தனது பரிந்துரையை அளித்தது.

அந்தக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் ஹஜ் மானியம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என சில மாதங்களுக்கு முன் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்தார். இந்நிலையில் ‘இந்த ஆண்டு முதல் ஹஜ் மானியம் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இனிமேல் இந்த மானியத் தொகை முஸ்லிம் பெண்களின் கல்விக்காகச் செலவிடப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஹஜ் பயணிகளுக்கு மத்திய அரசு மானியம் அளித்ததா? என்றால் அதற்கு ‘இல்லை’ என்பதே பதில். சிறுபான்மை இன மாணவ – மாணவிகளுக்கு மத்திய அரசு வருடத்திற்கு 1000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. இது மாணவ – மாணவிகளின் வங்கிக்கு கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இது போல் ஹாஜிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு மானியத் தொகையைச் செலுத்தவில்லை. சரி, நேரடியாக ரொக்கமாக இந்தத் தொகையை மத்திய அரசு கொடுத்ததா? அதுவும் இல்லை. இப்படி ஹஜ் பயணிகளுக்கு மத்திய அரசு எந்த மானியத்தையும் வழங்கவில்லை. அதை ஹஜ் பயணிகள் யாரும் பெறவும் இல்லை. மாறாக ஒவ்வொரு ஹஜ் பயணிகளிடமிருந்தும் பல்லாயிரம் ரூபாய்களைக் கொள்ளையடித்து வந்தது என்பதே உண்மை. அந்தக் கொள்ளை எப்படி நடந்தது? இப்போது சென்னையில் இருந்து ஒருவர் சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு விமானப் பயணம் மேற்கொண்டால் அதற்கு 29 ஆயிரம் ரூபாய் முதல் 32 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதே மார்க்கத்தில் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டால் அதற்கு 80 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இப்படி இரண்டு மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டு, அதில் 30 ஆயிரம் ரூபாய் மானியம். இந்த மானியம் போக ஹஜ் பயணிகள் 50 அல்லது 60 ஆயிரம் ரூபாய் விமானக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று ஹஜ் பயணிகளில் பணத்தை பிடுங்கியது மத்திய அரசு. இப்படி முஸ்லிம்களின் பெயரால் எழுதப்பட்ட மானியத் தொகையையும், இந்த மானியத் தொகை போக ஹஜ் பயணிகளிடமிருந்து வசூலித்த கூடுதல் தொகையையும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வழங்கியது மத்திய அரசு.

மத்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருக்கிறது. இந்தக் கடனில் இருந்து ஏர் இந்தியாவை மீட்க மத்திய அரசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டன. எனவே ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இப்படி ஏர் இந்தியா தனியார் மயமான பிறகு இதே ஹஜ் பயணக் கொள்கையை கடைபிடித்தால் ஹஜ் பயணிகளிடம் மத்திய அரசு கொள்ளையடிக்கும் பணம் முழுவதும் தனியாருக்குப் போய்விடும். முஸ்லிம்களிடம் களவாடப்பட்ட பணம் தனியாருக்கு போய் விடக் கூடாது என்பதற்காகவே ஹஜ் மானியம் ரத்து என்று மோடி அரசு அறிவிக்கிறது.

ஹஜ் மானியம் ஏற்கெனவே முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை. இப்படி இல்லாத மானியத்தை ரத்து செய்வதால் முஸ்லிம்களுக்கு எந்த இழப்பும் இல்லையே! பிறகு ஏன் முஸ்லிம்கள் எதிர்க்க வேண்டும்? ஹஜ் பயணிகளுக்கு கணக்கில் எழுதப்பட்ட மானியத்தை ரத்து செய்வதின் மூலம் இந்த ஆண்டு முதல் ஹஜ் செய்யும் பயணிகள் ஒவ்வொரு வரும் இன்னும் கூடுதலாக 30 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அப்போது என்றும் இல்லாத வகையில் ஹஜ் பயண செலவு 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகிவிடும். இதைத் தான் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். இதற்காகத் தான் போராட்டம் நடத்துகிறார்கள்.

இப்போது தனி நபர் ஒருவர் சென்னையிலிருந்து சவுதி அரேபியாவில் ஜித்தாவுக்கு சென்றால் 29 ஆயிரம் ரூபாய் கட்டணம். இதே மார்க்கத்தில் குழுவாக சென்றால் 30 சதவீத கட்டண சலுகை உண்டு. இந்த ஆண்டு 1.75 லட்சம் ஹஜ் பயணிகள் குழு குழுவாக ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்களே! இவர்களுக்கு கட்டணச் சலுகை உண்டா? என்றால் இல்லை. இந்திய முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி இந்தச் சலுகையையும் மத்திய அரசு நீண்ட காலமாக பறித்து வருகிறது. இப்படி விமானக் கட்டணத்தில் கொள்ளையென்றால் ஹஜ் பயணிகளுக்கு சவுதியில் தங்கும் வசதி அளிப்பது, உணவு வசதி ஏற்பாடு செய்வது ஆகியவற்றில் சுமார் 50 ஆயிரம் வரை கொள்ளையடிக்கிறது மத்திய அரசு.

ஹஜ் பயணிகளிடம் அடிக்கும் இந்தக் கொள்ளை நிறுத்தப்பட வேண்டும். இதற்கு என்ன தீர்வு? ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களில் தான் ஹஜ் பயணிகள் கண்டிப்பாக பயணம் செய்தாக வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். ஏர் இந்தியா விமானம் என்பது உள்ளூரில் ஓடும் டவுண் பஸ் மாதிரி. இதில் பயணம் செய்யும் போது மழைநீர் ஒழுகாது. ஆனால் இருக்கை அழுக்காக இருக்கும். நட்டு, போல்ட் கழன்று இருக்கை ஆடச் கூட செய்யும். விமானப் பயணத்தின் போது வழங்கப்படும் உணவை வாயில் வைக்க முடியாது. இப்படி ஓட்டை, உடைசலான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் முன் வருவதே கிடையாது.

இப்படிப்பட்ட விமானத்தில் ஹஜ் பயணிகளை அழைத்துச் சென்று கொடுமைப்படுத்துகிறது மத்திய அரசு. இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க இந்தியாவில் இருந்து ஹஜ் பயணிகளை அழைத்துச் சென்று, வர உலகளாவிய டெண்டரை விட வேண்டும். இப்படி டெண்டர் விட்டால் 20 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் ஹஜ்ஜுக்குச் சென்று வர முடியும். உணவு மற்றும் தங்குமிட வசதியில் நடைபெறும் ஊழலைத் தடுத்தால் இதற்கெல்லாம் சேர்த்து 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகும். இப்படி 50 ஆயிரம் செலவில் இந்திய முஸ்லிம்கள் ஹஜ் செய்து முடிக்க முடியும். ரத்து செய்யப்பட்ட ஹஜ் மானியத்தை முஸ்லிம் பெண்களின் கல்விக்கு செலவிடப் போவதாக மத்திய அரசு அறிவித்தது சரியான கேலிக் கூத்து.

அபுல் கலாம் ஆசாத் பவுண்டேஷன் சார்பில் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை. ஹஜ் மானிய ரத்து மூலம் கிடைக்கும் தொகையும் முஸ்லிம் பெண்களின் கல்விக்குப் பயன்படுத்தாமல் மத்தியில் உள்ள ஆட்சியாளர் அமுக்கி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இப்படித் தான் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் போடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்ரஸாக்களுக்கு என குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை எழுத்தில் இருந்ததே தவிர மத்ரஸாக்களுக்கு இதில் கால் பைசா கூட தரப்படவில்லை.

இதை அறிந்து வைத்துள்ள முஸ்லிம் சமுதாயம் ஹஜ் மானியம் முஸ்லிம் பெண் கல்விக்கு செலவிடப்படும் என்பதை எப்படி நம்பும்? ஹஜ் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசு இந்துக்களின் கைலாயம், மகனசரோவர், முக்திநாத் பயணத்துக்கும் மானியம் இல்லை என்று அறிவித்திருக்க வேண்டும். அதுபோல் ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கும் மானியம் இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும். அப்படிச் சொல்லி இருந்தால் இந்த அரசு மதச்சார்பற்ற வழியில் செல்கிறது என சொல்லலாம். அவ்வாறு இல்லாமல் இந்துக்களின் புனிதப் பயணத்திற்கு மானியம் உண்டு.

முஸ்லிம்களுக்கு மட்டுமே அது இல்லை என்றால் இந்த அரசு முஸ்லிம் விரோதப் பாதையில்   சென்று கொண்டிருக்கிறது என்பதே அர்த்தமாகும். அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவுக்காக மோடியின் மத்திய அரசு பட்ஜெட்டில் 2500 கோடி ரூபாயை ஒதுக்கியது. கோதாவரி புஷ்கரம் நிகழ்ச்சிக்காக பி.ஜே.பி.யின் கூட்டணி கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு 450 கோடி ரூபாயை ஒதுக்கி செலவழித்தார். சில மாதங்களுக்கு முன் அசாமில் நடந்த கும்பமேளாவுக்கு அசாம் மாநில அரசு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை ஒதுக்கி செலவழித்தது.

ஹஜ் பயணிகளின் மானியம் என கள்ளக் கணக்கு எழுதியும் உணவு, தங்குமிட செலவு என ஹஜ் பயணிகளின் பணத்தைப் பிடுங்கியும் ஊழல் செய்த மத்திய அரசு 1.7 லட்சம் ஹஜ் பயணிகள் விமானம் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள உடனே உலகளாவிய டெண்டர் விட வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.பொங்கலுக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதில் தனியார் பேருந்துக் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தன. இது குறித்த புகார் வந்தவுடன் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சரே நேரில் சோதனை நடத்தி, கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகளுக்கு அபராதம் விதித்தார்.

இப்படி பொங்கலுக்கான பேருந்துக் கட்டணத்தை தனியார் உயர்த்துவதை அரசு தடுத்து நிறுத்துகிறது. அதே சமயம் ஹஜ் பயணிகளுக்கான விமானக் கட்டணத்தை மத்திய அரசு இரு மடங்கு உயர்த்துகிறது. இது அரசியல் சாசனம் வலியுறுத்தும் சம உரிமைக்கு எதிரான செயல். ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட்களின் கட்டணத்தில் பாதியளவைக் குறைக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் நியமித்த குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செய்யும் முஸ்லிம்கள் அனைவரும் முன்பதிவு செய்து தான் பயணிக்கின்றனர்.

ஆனால் இவர்களுக்கு விமானக் கட்டணம் குறைக்கப்படாமல் இருமடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஹஜ் பயணிகள் – முஸ்லிம்கள் என்பதால் தானே இந்த பாரபட்சம்? இப்படி மக்களுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது இல்லையா? ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், கிங்க்ஃபிஷர் உள்ளிட்ட விமான நிறுவனங்களில் 6 மாதத்திற்கு முன் பதிவு செய்தால் இந்தியா முழுவதும் பறப்பதற்கு 600 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. ஏர் இந்தியாவில் பயணம் செய்யும் ஹஜ் பயணிகளுக்கு இந்தச் சலுகை மறுக்கப்பட்டது அநியாயமில்லையா?

இந்தியாவில் முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப் படுகிறார்கள் என்பதை இது காட்டவில்லையா? ஹஜ் மானியம் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதி மன்றம் இதில் எதையுமே கருத்தில் கொள்ளவில்லை. சுரண்டலிலிருந்து மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று அரசியல் சாசனம் கூறுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் இந்த விதிக்குப் புறம்பாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களிடம் சுதந்திரம் பெற்ற ஆண்டு முதல் இப்போது வரை மத்திய அரசு சுரண்டி வந்துள்ளது. ஹஜ் மானியம் குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் எப்படி மானியம் கொடுக்கப்படுகிறது என்று விசாரித்து உண்மையை அறியாமல் மானியம் என்ற சொல்லை வைத்து தீர்ப்பு சொல்லி இருப்பது வேடிக்கையாக உள்ளது.