Tamil Bayan Points

01) ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு!

முக்கிய குறிப்புகள்: ஹதீஸ் கலை

Last Updated on March 21, 2022 by Trichy Farook

ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு!

இஸ்லாத்தின் அடிப்படை வஹீ என்னும் இறைச்செய்தி ஆகும். இறைச் செய்திகள் என்பது திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகத்தின் மார்க்கம் தொடர்பான வழிகாட்டுதல்கள் மட்டுமே!

திருமறைக் குர்ஆன், நபியின் வழிகாட்டுதல்கள் இரண்டுமே இறைச் செய்தி என்றாலும் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மட்டுமே எழுதுமாறு கட்டளையிட்டார்கள். நபியவர்களின் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாலும் அவற்றை எழுதுமாறு வலியுறுத்தவில்லை. இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

7702 – حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِىُّ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
« لاَ تَكْتُبُوا عَنِّى وَمَنْ كَتَبَ عَنِّى غَيْرَ الْقُرْآنِ فَلْيَمْحُهُ وَحَدِّثُوا عَنِّى وَلاَ حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَىَّ – قَالَ هَمَّامٌ أَحْسِبُهُ قَالَ – مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ».

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும். என்னைப் பற்றி அறிவியுங்கள். தவறில்லை. யார் என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-5734 

மேற்கண்ட நபிமொழியிலிருந்து ஹதீஸ்களை எடுத்துச் சொல்லுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என்பதையும் அவற்றை எழுதுவதற்குத்தான் தடை விதித்தார்கள் என்பதையும் நாம் அறியமுடிகிறது.

குர்ஆனுடன், ஹதீஸின் வாசகங்கள் கலந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் நபியவர்கள் அதனை எழுத வேண்டாம் என்று கூறினார்கள்.

ஆனால் குர்ஆனுடன் நபிமொழிகள் கலந்து விடாது என்ற அச்சம் தீர்ந்த உடன் நபியவர்கள் ஹதீஸ்களை எழுதுவதற்கு அனுமதி கொடுத்து விட்டார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:

(நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவில் மக்கமா நகரின் புனிதத்தைப் பற்றி உரையாற்றும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.)

இந்நகரின் முட்செடி பிடுங்கப்படக் கூடாது. இதன் மரம் வெட்டப்படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர (பொருளுக்கு உரிமையற்றவர் யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால் அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு யோசனைகளில் சிறந்ததை அவர்கள் தேர்வு செய்யலாம் என்று கூறினார்கள்.

அப்போது யமன்வாசிகளில் “அபூ ஷாஹ்” என்றழைக்கப்பட்ட ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவருக்கு (என் உரையை) எழுதிக் கொடுங்கள் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-6880 

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான நபிமொழிகளை அறிவிக்கவில்லை. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் இருந்த (அதிகமான) நபிமொழிகளைத் தவிர. ஏனெனில், அவர்கள் (ஹதீஸ்களை) எழுதிவைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துக் கொள்வேனே தவிர) எழுதி வைத்துக் கொண்டதில்லை.

நூல்: புகாரி-113 

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ்களை எழுதுவதற்கு அனுமதி கொடுத்து விட்டார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

என்றாலும் ஸஹாபாக்கள் காலத்தில் அதிகமாக ஹதீஸ்கள் எழுதப்படவில்லை. அதிகமாக வாய் மொழியாகத் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணத்தினால் நபியவர்கள் கூறாத செய்திகளெல்லாம் அவர்கள் கூறியதாக நபித்தோழர்களுக்குப் பின் வந்தவர்களால் மக்கள் மத்தியில் பரப்பப்படும் நிலை ஏற்பட்டது. பல பொய்யர்கள் நபியவர்கள் கூறாத செய்திகளையெல்லாம் அவர்களின் பெயரில் இட்டுக்கட்டி அறிவித்தனர்.

இந்நிலையில் நபியவர்கள் கூறிய அனைத்து ஹதீஸ்களையும் தொகுத்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. எனவே நபியவர்கள் கூறியதாக அறிவிப்பவர்களின் நிலைகளை அறிந்து அவர்களின் ஏற்றுக் கொள்ளத் தக்கவர்களின் அறிவிப்புகள் மட்டுமே சரியான ஹதீஸ்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு நபியவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிக்கும் செய்திகளில் தவறானவற்றிலிருந்து சரியானவற்றைப் பிரித்து அறிவதற்கு உதவும் கல்வியே “ஹதீஸ் கலை’ என்பதாகும்.

திருமறைக் குர்ஆனையும், நபிமொழிகளையும் ஆய்வு செய்பவர்கள் ஒரு செய்தியை எவ்வாறு அறிவிக்க வேண்டும், எத்தகையவர்கள் அறிவித்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கான அடிப்படைகளைத் தெளிவாகப் பெற்றுக் கொள்ளலாம்.

49:6  يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 49:6)

மேற்கண்ட வசனத்தில் ஒரு செய்தி நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாகவும், ஏற்றுக் கொள்ளத் தகுந்த அடிப்படையிலும் வந்தால்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை அல்லாஹ் கூறுகிறான்.

செய்தியைக் கொண்டு வருபவர் தகுதியானவராக இருப்பதுடன், அவர் கூறும் செய்தியும் உண்மையானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் எடுத்துரைக்கிறது.

அது போன்று நபி மொழிகளை எடுத்துரைப்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, தான் செவியேற்றதைப் போன்றே மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), நூல்: திர்மிதீ-2657 

ஒரு செய்தியைச் செவியேற்றவாறு எதையும் கூட்டாமல், குறைக்காமல் அறிவிக்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி), நூல்: புகாரி-3461

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: புகாரி-106 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி-110 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி), நூல்: முஸ்லிம் 1

திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸ்களிள் அடிப்படையில்தான் ஹதீஸ்கலை விதிகள் தொகுக்கப் பெற்றன என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

நபியவர்கள் கூறியவற்றை அவர்கள் கூறியவாறே எடுத்துரைக்க வேண்டும், நபியவர்களின் மீது பொய்யாகக் கூறினால் நிரந்தர நரகமே தங்குமிடம் என்ற நபியவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிய காரணத்தினால் ஸஹாபாக்கள் நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தியை உறுதிப்படுத்தும் விசயத்தில் மிகப் பேணுதலாக நடந்து கொண்டனர். நபியவர்கள் கூறியதாக சந்தேகம் ஏற்படும் என்றால் அதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

அபூ இஸ்ஹாக் அவர்கள் கூறியதாவது: நான் அஸ்வத் பின் யஸீத் அவர்களுடன் பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ அவர்களும் இருந்தார்கள். அப்போது “ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை. ஜீவனாம்சமும் இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்’ என்ற ஹதீஸை ஷஅபீ அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்.

(அங்கிருந்த) அஸ்வத் (ரலி) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர் மீது எறிந்து விட்டு பின்வருமாறு கூறினார்கள்: உமக்குக் கேடு தான். இது போன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களே? உமர் (ரலி) அவர்கள் ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும், நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாத்திமா பின் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. பகிரங்கமான வெட்கக்கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள் (65:1) என்று வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக் (ரஹ்), நூல்: முஸ்லிம்-2963 

உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது:

இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதின் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவே இல்லை) “இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய பெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக் கின்றனர்’ என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால் (குறைஷித் தலைவர்களான) இணை வைப்பவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங் கிணற்றுக்கருகே நின்று கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்க) “நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.

“நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்’ என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று சொல்லவில்லை). பிறகு (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்:

(நபியே) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது (35:22)

அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரலி), நூல்: முஸ்லிம்-1697 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிக்கும் போது அதில் முரண்பாட்டைக் காணும் போது நபித்தோழர்கள் அதனை நபியவர்கள் கூறியதாக ஏற்கவில்லை என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அது போன்றே சில நேரங்களில் நபியவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிப்பதில் சந்தேகம் ஏற்பட்டால் அந்தச் சந்தேகத்தை தெளிவுபடுத்திய பிறகே அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனைப் பின்வரும் சான்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அபூ மூஸா (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஏதோ வேலையில் இருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூ மூஸா (ரலி) திரும்பி விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது வேலையை முடித்த பின் “அபூ மூஸாவின் குரல் கேட்டதே! அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் எனக் கூறினார்கள். அவர் திரும்பிச் சென்று விட்டார் எனக் கூறப்பட்டது. உடனே அவரை அழைத்து வரச் செய்து உமர் (ரலி) விசாரித்தார்கள். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் “இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது” எனக் கூறினார்கள். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் “இதற்கான ஆதாரத்தை நீர் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் அன்ஸாரிகள் கூட்டத்தில் வந்து இதைக் கூறினார்கள்.

வயதில் சிறியவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர யாரும் உமக்காக இந்த விஷயத்தில் சாட்சி கூற மாட்டார்கள் எனக் கூறினார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்களை அழைத்து வந்து அபூ மூஸா (ரலி) சாட்சி கூற வைத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “கடை வீதிகளில் மூழ்கிக் கிடந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட இந்தச் செய்தி எனக்குத் தெரியாமல் போய் விட்டதே!” எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி-2062 , 6245, 7353

ஹதீஸ்களை ஏற்பதிலும் மறுப்பதிலும் அதன் கருத்து குர்ஆனுக்கு முரண்பாடாக இருக்கக் கூடாது என்பதோடு அறிவிப்பாளர் தொடரும் (இஸ்னாத்) மிக மிக முக்கியமானதாகும். ஒரு ஹதீஸை ஏற்பதா? மறுப்பதா? என்று முடிவு செய்வதில் அறிவிப்பாளர் தொடர் மிக முக்கியப் பங்குவகிக்கிறது.

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (ஆரம்பக் காலங்களில் ஹதீஸ்கள் அறிவிக்கப்படும்போது அவற்றின்) அறிவிப்பாளர் தொடர்கள் குறித்துக் கேட்டதில்லை. ஆனால், (பிற்காலத்தில்) குழப்பங்கள் தோன்றியபோது “உங்களுக்கு இந்த ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின் பெயர்களையும் எங்களுக்கு அறிவியுங்கள்” என்று கூறலாயினர். ஆகவே, அந்த அறிவிப்பாளர்கள் நபிவழிக்காரர்களா என்று கவனித்து, அவ்வாறிருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் மட்டும் ஏற்கப்படும். அவர்கள் (நபிவழியில் இல்லாதவற்றைக் கூறும்) புதுமைவாதிகளாய் இருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படாது.

அறிவிப்பவர்: ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்)

நூல்: முஸ்லிம் முன்னுரை (25)

அறிவிப்பாளர் தொடர் சரியாவதின் அடிப்படையில்தான் ஒரு ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற காரணத்தினால் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி அறிவதற்குரிய ”இல்முல் ஜரஹ் வத்தஃதீல்” (குறை நிறைகள் பற்றிய கல்வி), அறிவிப்பாளர்கள் பற்றிய விமர்சனங்கள், முறிவடைந்த அறிவிப்பாளர் தொடரிலிருந்து முறிவில்லாத அறிவிப்பாளர் தொடரை அறிதல், மறைமுகமான குறைகளை அறிதல் போன்ற கல்விகள் முதன் முதலாக உருவாக ஆரம்பித்தன்.

அதன் பிறகு இத்துறையில் மிக விரிவாக பல விசயங்கள் அலசி ஆராயப்பட்டன. ஒரு ஹதீஸை எப்படி ஏற்றுக் கொள்வது, மற்றவர்களுக்கு எப்படி அறிவிப்பது, மாற்றப்பட்ட சட்டங்கள் (மன்ஸுஹ்) எவை, புதிய சட்டங்கள் (நாஸிஹ்) எவை, அரிதான ஹதீஸ்கள் பற்றிய நிலைப்பாடு இன்னும் பல்வேறு பிரிவுகளில் ஹதீஸ்கலை அறிஞர்கள் விரிவாக விளக்கினர். என்றாலும் இவை அனைத்தும் வாய்மொழியாக இருந்ததே எழுத்து வடிவில் புத்தகங்களாக தொகுப்படவில்லை.

அதன் பிறகு கால ஓட்டத்தில் ஹதீஸ் கலைச் சட்டங்கள் புத்தக வடிவில் தொகுப்பட்டன என்றாலும் ஹதீஸ் கலை என்று தனியான புத்தகங்களாக தொகுக்கப்பட்டாமல் ஒரே புத்தகத்தில் இல்முல் உஸுல், இல்முல் ஃபிக்ஹ், என்ற வரிசையில் உலூமுல் ஹதீசும் ஒரு பிரிவாக எழுதப்பட்டது.

இதற்குச் சான்றாக இமாம் ஷாஃபி அவர்களின் ”அர்-ரிஸாலா” மற்றும் ”அல் உம்மு” போன்ற கிதாபுகளைக் குறிப்பிடலாம். நாம் அறிந்த வரை முதன் முதலாக ஹதீஸ்கலை தொடர்பாக தொகுக்கப்பெற்றது இமாம் ஷாஃபி அவர்களின் ”அர்-ரிஸாலா” என்ற புத்தகம்தான். என்றாலும் இந்த நூலில் ஹதீஸ் கலையுடன் சேர்ந்து இல்முல் உஸுல், இல்முல் ஃபிக்ஹ் போன்ற ஏனைய கல்விகளும் இணைந்தே காணப்படுகிறது. ”அல் உம்மு” என்ற நூலும் இதே அடிப்படையில் தான் தொகுக்கப்பட்டுள்ளன.

ஹதீஸ்கலைக்கு தனியான ஒரு நூல்

பிறகு ஹிஜிரி நான்காம் நூற்றாண்டில்தான் ஒவ்வொரு துறை சார்ந்த நூற்களும் தனித்தனியாக தொகுக்கப்பட ஆரம்பித்தன. ஹதீஸ்கலை தொடர்பாகவும் தனியாக நூற்கள் தொகுக்கப்பட்டன.

ஹதீஸ்கலை தொடர்பாக தனியான ஒரு நூலை முதன் முதலாகத் தொகுத்தவர் ”காழீ அபூ முஹம்மத் அல்ஹஸன் இப்னு அப்துர் ரஹ்மான் அர்ராமஹுர்முசி” என்பவர் ஆவார். இவர் தொகுத்த நூலின் பெயர் ”அல்முஹத்திசுல் ஃபாஸில் பைனர் ராவி வல் வாயீ” என்பதாகும்.

ஹதீஸ் கலை தொடர்பான முக்கிய நூற்கள்

1. அல்முஹத்திசுல் ஃபாஸில் பைனர் ராவி வல் வாயீ – தொகுத்தவர் “காழீ அபூ முஹம்மத் அல்ஹஸன் இப்னு அப்துர் ரஹ்மான் அர்ராமஹுர்முசி” (மரணம் ஹிஜிரி 360)

2. மஃரிஃபத்து உலூமில் ஹதீஸ். தொகுத்தவர்: இமாம் ஹாகிம் (மரணம் ஹிஜிரி405)

3. அல் முஸ்தஹ்ரிஜ் அலா மஃரிஃபத்தி உலூமில் ஹதீஸ் – தொகுத்தவர்: அபூ நுஐம் அல்உஸ்பஹானீ (மரணம் ஹிஜிரி 430)

4. “அல்கிஃபாயா ஃபீ இல்மிர் ரிவாயா” – தொகுத்தவர்: ஹதீபுல் பக்தாதி (மரணம் ஹிஜிரி463)

5. “அல்ஜாமி லி அஹ்லாகிர் ராவி வஆதாபிஸ் ஸாமிஃ – தொகுத்தவர்: ஹதீபுல் பக்தாதி (மரணம் ஹிஜிரி 463)

6. “அல்இல்மாவு இலா மஃரிஃபத்தி உஸுலிர் ரிவாயா வதக்யீதிஸ் ஸிமாஃ” – தொகுத்தவர்: காழீ இயாள் பின் மூஸா (மரணம் ஹிஜிரி 544)

7. “மாலா யஸவுல் முஹத்திஸ ஜஹ்லுஹு” – தொகுத்தவர்: “அபூ ஹப்ஸ் அம்ருப்னு அப்துல் மஜீது” (மரணம் ஹிஜிரி 580)

8. “உலூமுல் ஹதீஸ்” – தொகுத்தவர்: இப்னுஸ் ஸலாஹ் (மரணம் ஹிஜிரி 643)

9. “அத்தக்ரீப் வத்தய்சீர் லிமஃரிஃபத்தி ஸுனனில் பஸீர் அந்நதீர்” – தொகுத்தவர்: முஹ்யித்தீன் அந்நவவீ (மரணம் ஹிஜிரி 676)

10. தத்ரீபுர் ராவி – தொகுத்தவர்: இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூத்தி (மரணம் ஹிஜிரி 911)

11. “நல்முத் துரர் ஃபீ இல்மில் அஸர்” – தொகுத்தவர்: ஸைனுத்தீன் அல்இராக்கி (மரணம் ஹிஜிரி 806)

12. “ஃபத்ஹுல் முகீஸ் ஃபீ ஷரஹி அல்ஃபியத்தில் ஹதீஸ் – தொகுத்தவர் முஹம்மத் இப்னு அப்திர் ரஹ்மான் அஸ்ஸஹாவி” (மரணம் ஹிஜிரி 902)

13. “நுஹ்பத்துல் ஃபிக்ர் ஃபீ முஸ்தலஹி அஹ்லில் அஸர்” – தொகுத்தவர்: இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ (மரணம் ஹிஜிரி 852)

14. “அல் மன்லூமத்துல் பைகூனிய்யா” – தொகுத்தவர்: ”உமர் இப்னு முஹம்மத் அல்பைகூனி” (மரணம் ஹிஜிரி 1080)

15. “கவாயிதுத் தஹ்தீஸ்” – தொகுத்தவர்: ”முஹம்மத் ஜமாலுத்தீன் அல்காஸிமி (மரணம் ஹிஜிரி 1332)