Tamil Bayan Points

27) 113, 114 அத்தியாயங்கள் சூனியத்துக்கு ஆதாரமாகுமா?

நூல்கள்: பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

Last Updated on March 5, 2022 by

சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது என்று சொல்பவர்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாக இன்னொரு வாதத்தையும் எடுத்து வைப்பார்கள்.

திருக்குர்ஆனில் 113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது இறங்கியது என்பதும், ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) குணமடைந்தார்கள் என்பதும் அவர்களின் வாதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட முடியாது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் நாம் முன்னர் நிரூபித்துள்ளோம்.

அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தியே பொய் என்று ஆகிவிடும் போது அதற்காகத் தான் இவ்விரு வசனங்களும் அருளப்பட்டன என்ற செய்தியும் கட்டுக்கதையாகி விட்டது.

அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டது என்ற செய்தி இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் உள்ளதால் அது கட்டுக்கதை என்கிறோம்.

ஆனால் இந்த அத்தியாயங்கள் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டது குறித்து அருளப்பட்டது என்பதற்கு ஏற்கத்தக்க அறிவிப்பாளர் தொடர் கிடையாது எனும் போது இது எப்படி ஆதாரமாக அமையும்?

இது குறித்து இப்னு கஸீர் அவர்கள் செய்யும் விமர்சனத்தைப் பாருங்கள்!

وقال الأستاذ المفسر الثعلبي في تفسيره قال ابن عباس وعائشة رضي الله عنهما كان غلام من اليهود يخدم رسول الله صلى الله عليه وسلم…. ثم بعث النبي صلى الله عليه وسلم عليا والزبير وعمار بن ياسر فنزحوا ماء البركة كأنه نقاعة الحناء ثم رفعوا الصخرة وأخرجوا الجف فإذا فيه مشاطة رأسه وأسنان من مشطه وإذا فيه وتر معقود فيه اثنا عشر عقدة مغروزة بالإبرة فأنزل الله تعالى السورتين فجعل كلما قرأ آية انحلت عقدة ووجد رسول الله صلى الله عليه وسلم خفة حين انحلت العقدة الأخيرة فقام كأنما نشط من عقال وجعل جبريل عليه السلام يقول بسم الله أرقيك من كل شيء يؤذيك من حاسد وعين الله يشفيك فقال يا رسول الله أفلا ينفذ الخبيث نقتله فقال رسول الله صلى الله عليه وسلم أما أنا فقد شفاني الله وأكره أن أثير على الناس شرا هكذا أورده بلا إسناد فيه غرابة وفي بعضه نكارة شديدة ولبعضه نكارة شديدة ولبعضه شواهد مما تقدم والله أعلم –

 تفسير ابن كثير ج: 4 ص: 575

 

திருக்குர்ஆன் விரிவுரையாளரான ஸஅலபி அவர்கள் தமது தப்சீரில் கூறுகிறார். நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்ட பின் அலீ, சுபைர், அம்மார் பின் யாசிர் ஆகியோரை நபியவர்கள் அனுப்பினார்கள். அவர்கள் கிணற்றின் நீரை இறைத்தார்கள். அந்த நீர் மருதானி சாறைப் போல் இருந்தது. பின்னர் பாறாங்கல்லை நீக்கினார்கள். பேரீச்சம் பாளையின் உறையை வெளியே எடுத்தார்கள். அதில் நபியவர்களின் தலைமுடியும் அவர்களின் சீப்புடைய பற்களும் இருந்தன. ஊசியில் கோர்க்கப்பட்ட நூலும் பன்னிரண்டு முடிச்சுக்கள் போடப்பட்டு இருந்தன. அப்போதுதான் 113, 114 அத்தியாயங்கள் அருளப்பட்டன. ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்தன…… இப்படி ஒரு செய்தியை ஸஅலபீ கூறுகிறார். ஆயிஷா, இப்னு அப்பாஸ் கூறியதாக மட்டும் தான் இதில் உள்ளது. அவ்விருவரும் யாரிடம் சொன்னார்கள் என்று நூலாசிரியர் வரை இணைக்கும் அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் கூறியுள்ளார்.இதில் சொல்லப்படும் சில விஷயங்கள் ஆதாரப்பூர்வமான செய்தியுடன் முரண்படுவதாக உள்ளது. யாரும் சொல்லாததாகவும் உள்ளது என்று இப்னு கஸீர் கூறுகிறார்.

அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் சொல்லப்படும் எந்த ஹதீசும் கட்டுக்கதைக்கு நிகரானது என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இது போல் இப்னு ஹஜர் அவர்களும் விமர்சனம் செய்துள்ளார்கள்.

وقد وقع في حديث بن عباس فيما أخرجه البيهقي في الدلائل بسند ضعيف في آخر قصة السحر الذي سحر به النبي صلى الله عليه وسلم أنهم وجدوا وترا فيه إحدى عشرة عقدة وأنزلت سورة الفلق والناس وجعل كلما قرأ آية انحلت عقدة وأخرجه بن سعد بسند آخر منقطع عن بن عباس أن عليا وعمارا لما بعثهما النبي صلى الله عليه وسلم لاستخراج السحر وجدا طلعة فيها إحدى عشرة عقدة فذكر نحوه –

فتح الباري ج: 10 ص: 225

 

11 முடிச்சுக்கள் போடப்பட்டதாகவும் அது குறித்தே பலக் நாஸ் ஆகிய அத்தியாயங்கள் அருளப்பட்டதாகவும் ஒவ்வொரு வசனம் அருளப்பட்டவுடன் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்ததாகவும் பைஹகீ அவர்கள் பலவீனமான அறிவிப்பாளர் தொடருடன் தலாயிலுன்னுபுவ்வா என்ற தமது நூலில் கூறுகிறார். அது போல் இப்னு சஅது அவர்கள், இப்னு அப்பாஸ் வழியாக அறிவிப்பாளர் தொடர் அறுந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார் என்று இப்னு ஹஜர் விமர்சனம் செய்துள்ளார்.

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்ட போதுதான் இவ்விரு அத்தியாயங்களும் அருளப்பட்டதாக ஒரு ஆதாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை. சூனியக் கட்சியினரும் இது பலவீனமானது என்று ஒப்புக் கொள்கிறார்கள். எனவே இது ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாத கட்டுக்கதையாகும்.

அடுத்ததாக இதே அத்தியாயங்களுக்கு விளக்கம் கொடுத்து இது சூனியத்தைத் தான் பேசுகிறது என்று சிலர் வாதிடுகின்றனர்.

குறிப்பாக பலக் அத்தியாத்தில் முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று சொல்லப்பட்டுள்ளது. முடிச்சுகளில் ஊதி சூனியம் செய்யும் பெண்களைத் தான் குறிக்கிறது. இதில் இருந்து சூனியத்துக்கு தாக்கம் உள்ளது என்பதை அறியலாம் என்று வாதிடுகின்றனர்.

முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரிகளைத் தான் குறிக்கும் என்பது இவர்களின் கற்பனை தானே தவிர அல்லாஹ்வோ அவனது தூதரோ அளித்த விளக்கம் அல்ல. முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரிகளைத் தான் குறிக்கும் என்பதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் ஏற்கத்தக்க எந்த பதிலும் அவர்களிடம் இல்லை.

இவர்கள் கூறுவது தவறானது என்று சாதாரண மனிதனின் அறிவு கூட தீர்ப்பு அளித்து விடும்.

சூனியக் கட்சியினரின் நம்பிக்கைப்படி பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சூனியம் செய்வார்கள். நபிகள் நாயகத்துக்கே லபீத் என்ற யூத ஆண் தான் சூனியம் வைத்தான் என்று நம்புகிறார்கள். இந்த அத்தியாயத்தில் முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கிலிருந்து தான் பாதுகாப்பு தேடப்படுகிறது. அப்படியானால் சூனியம் செய்யும் ஆண்களிடமிருந்து பாதுகாப்பு இல்லாமல் போய்விடுமே?

சூனியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் இருந்து அதில் இருந்து பாதுகாப்பு தேடுவதற்குத் தான் அல்லாஹ் வழிகாட்டுகிறான் என்றால் முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டு மட்டும் பாதுகாப்பு தேடச்சொல்லி, சூனியம் செய்யும் ஆண்களிடமிருந்து பாதுகாப்பு அற்ற நிலையை ஏற்படுத்துவானா? இப்படி சிந்திக்கும் போது இவர்கள் கொடுக்கும் விளக்கம் பயனற்றதாகவும் அல்லாஹ்வின் கூற்றை அர்த்தமற்றதாக்கும் வகையிலும் அமைந்துள்ளது என்பது தெரிகிறது.

மேலும் முடிச்சுகளில் ஊதுவது என்ற ஒரு வழிமுறையில் தான் சூனியம் உள்ளது என்பது சூனியக் கட்சியின் கொள்கை அல்ல. ஆயிரக்கணக்கான வழிகளில் சூனியம் செய்யலாம் என்பது தான் அவர்களின் நம்பிக்கை. இந்த அத்தியாயம் சூனியத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க அருளப்பட்டது என்றால் இதில் முடிச்சுக்களில் ஊதும் ஒரு வகை சூனியத்தில் இருந்து மட்டுமே பாதுகாப்பு உள்ளது. அது அல்லாத வகைகளில் ஒருவன் சூனியம் செய்தால் அதில் இருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் போய் விடுகிறது. இதில் இருந்து தெரிய வரும் உண்மை என்ன? இது சூனியக்காரர்களிடமிருந்து பாதுகாப்பு கோருவதற்காக அருளப்பட்டதல்ல. இப்படி அறைகுறையாக அல்லாஹ் கற்றுத்தர மாட்டான் என்பது தெரிகிறது.

மேலும் சூனியக் கட்சியினரின் வாதப்படி நபியவர்களுக்கு சூனியம் வைத்தவன் ஆண் ஆவான்.(புகாரி 3668, 5763) அப்படி இருக்கும் போது சூனியம் செய்யும் பெண்களிடம் பாதுகாப்பு தேடுமாறு சொல்வது பொருந்துமா?

உலகில் பெரும்பாலும். ஆண்கள் தான் சூனியம் செய்கின்றனர். மிகமிக அரிதாகத் தான் பெண் சூனியக்காரிகள் உள்ளனர். காமிக்ஸ் கதைகளிலும் பேய்ப் படங்களிலும் தான் சூனியக்காரக் கிழவி என்று காட்டுகிறார்கள். நிஜத்தில் அப்படி இல்லை. ஆண்களே அதிக அளவில் சூனியக்காரர்களாக இருக்கும் போது சூனியம் செய்யும் பெண்களிடமிருந்து பாதுகாப்பு தேடச்சொல்வது கொஞ்சமும் பொருந்தவில்லை.

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது எதைக் குறிக்கிறது? முடிச்சுக்கள் என்றால் அதற்கு நேரடியாக முடிச்சு என்று அர்த்தம் இருந்தாலும் இங்கே அது பொருந்தவில்லை. முடிச்சுப் போடுவதால் நமக்கு என்ன தீங்கு நேர்ந்து விடும் எனச் சிந்திக்கும் போது முடிச்சுகள் என்பதற்கு முடிச்சு என்ற நேரடிப் பொருளைக் கொடுக்க முடியாது.

முடிச்சு என்பது அதன் நேரடிப் பொருள் அல்லாத மாற்றுப் பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக மூஸா நபி அவர்களுக்கு திக்குவாய் இருந்தது. அதைப் பற்றி அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்ட போது

இறைவா என்னுடைய உள்ளத்தை விசாலமாக்கு. என்னுடைய காரியத்தை லேசாக்கி வை. எனது நாவிலுள்ள முடிச்சை நீ அவிழ்த்துவிடு. (20:27) என்று சொன்னார்கள்.

இந்த வசனத்தில் உள்ள முடிச்சு என்பதை நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என்று நாம் விளங்க மாட்டோம். அவருக்குத் திக்குவாய் இருந்துள்ளது. அதனை மூஸா நபி அவர்கள் முடிச்சு என்று குறிப்பிடுகிறார்கள்.

இதே போன்று திருமணத்தைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது, திருமணம் செய்தபின் இருவரும் சேராமல் பிரிந்து விட்டால் பாதி மஹர் கொடுத்துவிட வேண்டும். நிக்காஹ் எனும் முடிச்சு யார் கை வசம் உள்ளதோ அவர் விட்டுக் கொடுத்தால் தவிர. (2:237) என்று கூறுகிறான்.

இதில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைவதை முடிச்சு என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

எனவே இந்த அத்தியாயத்தில் முடிச்சு என்று கூறப்பட்டதற்கு பொருத்தமான விளக்கம் நபிமொழியில் கிடைக்கிறதா என்று நாம் தேடிப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு நாம் தேடிப்பார்க்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி இதற்குப் பொருத்தமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஷைத்தான் ஒருவரின் தலை அருகில் உட்கார்ந்து கொண்டு அவன் தூங்கும் நேரத்தில் அவனுக்கு மூன்று முடிச்சுகளைப் போடுகின்றான்.  விடிகின்ற நேரம் வந்ததும் நீண்ட இரவு இருக்கின்றது; நீ தூங்கு என்று சொல்வான். அவர் எழுந்துவிட்டால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடும். பின்னர் சென்று ஒழுச் செய்தால் அடுத்த முடிச்சு அவிழ்துவிடும். தொழுகைக்கு தக்பீர் கட்டியபின் மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்து விடுகின்றது. இதன் பின்னர் நல்ல காலைப் பொழுதை அடைந்து அவன் விடுகின்றான். இல்லாவிட்டால் சோம்பலாக இருப்பான் என்று அந்த ஹதீஸில் வருகின்றது.

புகாரி 1142, 3269

ஷைத்தான் போடும் முடிச்சு என்றால் நல்ல அமல்கள் செய்ய விடாமல் ஆக்குவதாகும். தீய செயல்களைச் செய்ய தூண்டுவதாகும் என்று இதில் இருந்து விளங்குறது.

இது போல் ஷைத்தான் முடிச்சு போட்டு நம்மை வழிகெடுத்து விடாமல் பாதுகாப்பு கோருவது தான் முடிச்சுக்களில் ஊதுதல் என்பது.

ஆதாரமின்றி கற்பனை செய்து பொருந்தாத விளக்கம் கூறுவதை விட ஹதீஸ் துணயுடன் முடிச்சு என்பதன் பொருளைப் புரிந்து கொள்வது தான் சரியானது.

114வது அத்தியாயத்தில் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகின்றோம். அது போன்றதுதான் 113 வது அத்தியாயமும்.

இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது சூனியம் என்பது கற்பனை. இதனால் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்கின்றோம்.

ஷைத்தான்களைக் குறிப்பதற்குத் தான் முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்று சொல்லப்பட்டுள்ளது என்றால் ஆண் ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பு இல்லாமல் போகுமே என்று சிலர் நினைக்கலாம்.

ஷைத்தான்கள் என்ற சொல்லைப் பெண்பாலாகவும் பயன்படுத்தலாம். ஆண்பாலாகவும் பயன்படுத்தலாம். ஆண்பாலாகப் பயன்படுத்தினாலும் பெண்பாலாகப் பயன்படுத்தினாலும் அது அனைத்து ஷைத்தான்களையும் எடுத்துக் கொள்ளும்.